Chittukuruvikkenna Kattuppadu?
Chittukuruvikkenna Kattuppadu? https://tamil.stage3.in
பசுமை / சுற்றுச்சூழல்

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுபாடு?

ரேவதி பாலு

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு என்கிறீர்களா? நகர்ப்புற சூழல் மாற மாற, புதிது புதிதாக செல்பேசிக்காக அமைக்கப்படும் கோபுரங்கள், அதிலிருந்து வரும் கதிர்வீச்சு போன்றவற்றால் நம் வீட்டுக்குள் வந்து உரிமையாகக் கூடு கட்டி குஞ்சு பொறித்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையே குறைய ஆரம்பித்து விட்டது. அந்த கதிர்வீச்சு சிட்டுக்குருவியின் கருவையே வேரறுக்கும் வல்லமை படைத்ததாம். வெறும் மனிதர்களுக்கு மட்டுமே இந்த பூமியில்லையே? எல்லா உயிரினங்களுக்கும்தானே? எனவே. அவற்றைக் காக்கும் பொறுப்பும் மனிதர்களுக்குத்தானே?

சிட்டுக்குருவிகள் பசரீன்கள் எனப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. உருவத்தில் சிறிய அளவாக இருப்பதால் சிட்டுக்குருவி என்ற பெயரைப் பெற்றது. இவை 13 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டது என்று சொல்லப்படுகிறது. நம் வீடுகள் கூரை வீடுகளாக இருந்தபோது வாழை, தென்னை நார்கள் போன்றவற்றை சேகரித்து வீட்டுக் கூரையில் கூடு கட்டி வாழ்ந்தன. இவை பொதுவாக எல்லாவகை தானியங்களையும், புழு பூச்சிகளையும் கொத்தித் தின்று வாழக்கூடியது.

சுற்றுச்சூழல் பாதிப்பினால் அருகி வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.  இதற்காக, 'நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி' என்பது முகமது திலாவர் என்ற இந்திய பாதுகாவலரால் நாசிக்கில் தொடங்கப்பட்டது. அவர் நம் வீடுகளுக்குள் வரும் சிட்டுக்குருவிகளுக்கு உதவி அதன் எண்ணிக்கையைப் பெருக்கும் முயற்சியை ஆரம்பித்தார். அவர் தனது முயற்சிகளுக்காக 2008 ம் ஆண்டுக்கான, 'சுற்றுச்சூழலின் நாயகர்களில்' ஒருவராகப் போற்றப்பட்டார்.

அவருடைய தொடர்ந்த முயற்சிகளின் பலனாக, 'உலக சிட்டுக்குருவி தினம்' என்று வருடா வருடம் மார்ச் 20ம் தேதி  கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்த தினத்தில் வீட்டுக் குருவிகள் மற்றும் பிற பொதுவான பறவைகளின் எண்ணிக்கை குறைதலைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. இது Eco-Sys Action Foundation (FRance) மற்றும் உலகெங்கிலுமுள்ள பல தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி ஆஃப் இந்தியா  செய்யும்  சர்வதேச முயற்சியாகும்.

முதல் உலக சிட்டுக்குருவி தினம் 2010ல் மார்ச் 20ம் தேதி உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டது.  இது பொதுவாக பல்லுயிர் பெருக்கத்தின் அழகைப் பாராட்ட கொண்டாட்ட நாளைக் குறிக்கும். கலைப் போட்டிகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சிட்டுக்குருவி ஊர்வலங்கள் இதைத்தவிர, ஊடகங்களில் தொடர்பு கொண்டு பல்வேறு வகையான நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாறுபாடும், சுற்றுச்சூழல் மாறுபாடும் சிட்டுக்குருவிகளின் இனத்தை அழித்துக் கொண்டு வருகின்றன. எரிவாயுக்களில் இருந்து வெளிவரும் மெதில் நைட்ரேட் என்னும் வேதிப்பொருள் வெளிப்பட்டு பூச்சியினங்கள் அழிக்கப்பட்டு குருவிகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்காமல் போகின்றன.

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளின் இனத்தைக் காப்பாற்றுவதற்காகவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் 2010ம் ஆண்டு முதல் மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாமும் நம்மாலான முயற்சிகளாக சிட்டுக்குருவிகள் கூடு கட்ட உதவியாக அட்டைப்பெட்டியில் துளையிட்டு குருவி நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் வைக்கலாம். இதைத்தவிர, வீட்டில் மாடிகளில் நீர், தானியங்கள் வைக்கும் வழக்கத்தைப் பின்பற்றி சிட்டுக்குருவிகளின் இனத்தைப் பாதுகாப்போம்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT