Is it true that the snake will take revenge? 
பசுமை / சுற்றுச்சூழல்

பாம்பு பழிவாங்கும் என்பது உண்மையா? அறிவியல் சொல்வது என்ன?

கிரி கணபதி

பாம்புகள் நீண்ட காலமாகவே கட்டுக் கதைகள், பல சித்தரிப்புகள் மற்றும் தவறான எடுத்துக்காட்டுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற பல கதைகளில், பாம்புகள் பழிவாங்கும் தன்மை கொண்டவை என்ற கருத்தும் பெரும்பாலான நபர்களால் நம்பப்படுகிறது. இன்றளவும் சில கிராமப்புறங்களில் பாம்பை அடித்து பாதியில் விட்டுவிட்டால் அது பழிவாங்கும் என நம்புகின்றனர். இந்தப் பதிவில், பாம்புகள் உண்மையிலேயே பழி வாங்குமா? என்பதன் அறிவியல் உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.

பாம்பின் நடத்தை: பாம்புகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள முதலில் அவற்றின் நடத்தையைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பாம்புகள் குளிர் ரத்தம் கொண்ட உயிரினங்கள். அவை அவற்றின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த சுற்றுச்சூழலையே நம்பியுள்ளன. எனவே இவற்றின் முதன்மை கவலையாக இருப்பது என்னவென்றால் உணவைப் பெறுவது மற்றும் உயிர் வாழ்வது மட்டுமே. தேவையில்லாமல் பிறர் மீது கோபம் கொண்டு, பழிவாங்கும் அறிவாற்றல் திறன்கள் பாம்புகளுக்கு இல்லை. 

சில பாலூட்டி இனங்கள் மட்டுமே பழிவாங்கும் குணம் கொண்டிருக்கும். அதில் மனிதர்களும் அடங்குவர். ஆனால் பாம்புகளுக்கு இத்தகைய சிக்கலான உணர்ச்சி திறன்கள் இல்லை. அவற்றின் மூளை அமைப்பு மற்றும் நரம்பியல் செயல்பாடுகள் அனைத்துமே, உயிர் வாழ்வதையே முதன்மையாக சிந்திக்க வைக்கும். கோபம், வெறுப்பு, பழிவாங்கும்தன்மை போன்ற எவ்விதமான உணர்ச்சிகளும் பாம்புகளிடம் இல்லை. 

குறைந்த நினைவுத்திறன்: பாம்புகளால் மற்ற விலங்குகளைப் போல குறிப்பிட்ட நபர்களையும், சூழ்நிலை நிகழ்வுகளையும் நினைவில் வைத்திருக்க முடியாது. தன் உணவு மற்றும் தற்காப்பிற்காக சுற்றுச்சூழல் அம்சங்களில் சிலவற்றை அவற்றால் நினைவில் கொள்ள முடியுமே தவிர, குறிப்பிட்ட நபர்களை நினைவில் வைத்து பழிவாங்கும் அளவிலான நினைவாற்றல் பாம்புகளுக்கு இல்லை.

தற்காப்பு: பாம்புகள் அச்சுறுத்தலை சந்திக்கும்போது பலவிதமான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்கின்றன. இதில் ஹிஸ் என்று சத்தம் எழுப்புவது, அசையாமல் நிற்பது அல்லது சில நேரங்களில் தாக்கி விஷத்தை வெளியிடுவது ஆகியவை அடங்கும். இருப்பினும் இத்தகைய தற்காப்பு நடவடிக்கைகள் பழிவாங்கும் எண்ணத்துடன் இருப்பதில்லை. மாறாக, அச்சுறுத்தலுக்கு எதிராக வெளிப்படுத்தும் உள்ளுணர்வின் பிரதிபலிப்பாகும். 

அறிவியல் சொல்வது என்ன? 

பாம்புகளைப் பற்றி புரிந்துகொள்ள முதலில் அவற்றின் பரிணாமம் மற்றும் உள்ளுணர்வுகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பாம்புகள் தனித்து வாழும் விலங்குகள். அவற்றின் முதன்மை குறிக்கோள் உயிர் வாழ்வது, இனப்பெருக்கம் மற்றும் அவற்றின் சந்ததிகளைப் பாதுகாப்பது. தற்காப்பிற்காக அவை தாக்குவது பழிவாங்குவதன் வெளிப்பாடு அல்ல. இதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தேவையில்லாத கட்டுக்கதைகளை நம்பாமல், பாம்புகளும் இவ்வுலகில் வாழும் ஒரு ஜீவராசி என்பதை உணர்ந்து, நாம் நமது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வோம். 

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT