பாலைவனத்துக்கு பக்கத்தில் குடியிருக்க யாராவது விரும்புவார்களா? இலவசமாக வீட்டு மனை தருகிறோம் என்றால் கூட வேண்டாம் என்று தெறித்து ஓடி விடுவார்கள். ஆனால், ஓர் எலி இனம் பாலைவனத்திலேயே குடியிருக்கிறது. அதுவும் வசதியாக வாழ்கிறது. அது வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதில்லை என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இல்லையா? அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கங்காரு எலி என்பது வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வளரக்கூடிய சிறிய வகை விலங்காகும். உலகெங்கிலும் 22 வகையான கங்காரு எலிகள் இருக்கின்றன. மழை குறைவான இடங்களிலும், ஈரப்பதம் குறைந்த வறண்ட இடங்களிலும் இவை வாழ்கின்றன. இவை மிகச்சிறிய வடிவில், அதாவது இந்த எலிகளின் நீளம் 10 முதல் 20 சென்டி மீட்டர்தான் இருக்கும். இதனுடைய எடையும் மிகக்குறைவுதான் 25 முதல் 180 கிராம் அளவில்தான் இருக்கும்.
இதன் வால் பகுதி உடலையும் தலையையும் விட நீளமானதாகும். உணவை சேமித்து வைக்க இவற்றின் கன்னத்தில் முடிகளுடன் கூடிய சிறு பைகள் காணப்படுகின்றன. பார்க்க சிறிய உருவத்தில் இருந்தாலும் இவை ஆறடி நீளம் வரை பாயக்கூடியவை. இந்த எலிகள் மிகப்பெரிய கங்காருவை போலவே துள்ளி குதிக்கின்றன. இவற்றின் முன் கால்கள் சிறியதாகவும் பின் கால்கள் பெரியதாகவும் வலுவாகவும் இருப்பதால் இரண்டு கால்களுடன் குதிப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இந்த எலி இனம் பாலூட்டி வகையைச் சார்ந்தது. இந்த கங்காரு எலிகள் பழுப்பு மற்றும் அடர் சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன.
இவற்றின் வாழ்விடங்கள் வறண்டதாகவும், வெப்பம் மிகுந்ததாகவும் இருப்பதால் அவை தாங்கள் உண்ணும் விதைகளின் வளர்சிதை மாற்ற ஆக்சிஜனேற்றத்திலிருந்து போதுமான தண்ணீரை பெறுகின்றன. அணில் போன்று கொறிக்கும் விலங்கு வகையை சேர்ந்தவை இவை. பழ விதைகளையும், பூச்சிகளையும் உண்பதுடன் தாவரங்களை எப்போதாவது உண்ணும். இந்த வகையான எலிகள் தனது வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதில்லை. மாறாக உணவில் இருந்து திரவங்களை பெற்று உயிர் வாழ்கின்றன என்பது மிகவும் ஆச்சரியம்.
இந்த வகை எலிகள் மிகவும் சிறப்பு வாய்ந்த சிறுநீரகங்களைக் கொண்டுள்ளன. அவை தனது உடலில் இருந்து விஷங்களை வெளியேற்றுவதில் திறமையாக செயல்படுகின்றது. இவற்றின் தோள்களுக்கு இடையே பின்புறத்தில் எண்ணெய் சுரக்கும் சுரப்பி ஒன்று உள்ளது. அதில் இருந்து அதிகப்படியாக சுரக்கும் எண்ணெயை அகற்ற இவை தூசியில் புரண்டு, ‘தூசிக் குளியல்’ செய்து, அதிகப்படியான எண்ணையை நீக்கிக்கொள்கின்றன. இதனை, ‘கங்காரு எலிகளின் மணல் குளியல்’ என்று சூழலியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கங்காருவைப் போன்று தாவுவது, அதுவும் கொஞ்ச தொலைவு அல்ல, ஒரு வினாடிக்கு 10 அடி தூரத்தை சர்வ சாதாரணமாக தாண்டி விடும். அப்படியென்றால் இவற்றை, ‘கங்காரு எலிகள்’ என்று கூறுவது பொருத்தமாகத்தானே உள்ளது.