Purple Frog
Purple Frog 
பசுமை / சுற்றுச்சூழல்

இந்தியாவில் இருக்கும் இந்த விசித்திரமான உயிரினம் பற்றி தெரியுமா?

கிரி கணபதி

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு விசித்திரமான உயிரினம் வாழ்ந்து வருகிறது. அதுதான் ஊதா தவளை (Purple Frog). இந்தப் பதிவில் அதன் தனித்துவமான தோற்றம் மற்றும் கவர்ச்சிகரமான வாழ்க்கை முறையைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்வோம் வாங்க. 

இயற்கையின் அற்புதம்: ஊதா நிறத் தவளை அறிவியல் ரீதியாக Nasikabatrachus Sahyadrensis என அழைக்கப்படுகிறது. இது மற்ற தவளை இனங்களிலிருந்து வேறுபட்டு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தை கொண்டுள்ளது. அதன் உடல் மிகவும் தடிமனான சுமார் 7 சென்டிமீட்டர் நீளம் கொண்ட வெல்வெட் ஊதா நிறத் தோலினால் மூடப்பட்டிருக்கும். இதனாலேயே “ஊதா தவளை” என்ற பெயர் இதற்கு வந்தது. இதன் கூர்மையான மூக்குப்பகுதி மண்ணில் துளையிட்டு வாழ்வதற்கு பயன்படுகிறது. 

வாழ்க்கை முறை: இந்த ஊதா நிறத் தவளை ஒரு நிலத்தடி உயிரினமாகும். அதன் வாழ்நாளின் பெரும்பகுதியை நிலத்துக்கு அடியில் மறைந்தே வாழ்கிறது. பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலங்களில், தற்காலிகமாக உண்டாகும் மழைநீர் தேக்கங்களில் இனப்பெருக்கம் செய்யும். இவற்றின் இந்த ரகசிய வாழ்க்கை முறையால் இவற்றைப் பற்றி மேலும் ஆய்வு செய்வதற்கு சவாலானதாகவே உள்ளது. 

பல்லுயிர் பெருக்கம்: மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிப்பதில் ஊதா நிறத் தவளைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை தரையில் துளையிட்டு வாழ்வதால், மண்ணிற்கு அடியில் காற்று உட்புகுந்து மரம் மற்றும் தாவரங்களுக்கு பெரிதளவில் உதவுகிறது. மற்றும் இது நீர் ஊடுருவலை எளிதாக்கி, காடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு ஆரோக்கியமாக இருக்க பங்களிக்கிறது. 

இனப்பெருக்கம்: இந்தத் தவளைகளின் தனித்துவமான தோற்றத்தைப் போலவே இவற்றின் இனப்பெருக்க நடத்தையும் வித்தியாசமாகவே உள்ளது. மழைக்காலங்களில் ஆண் தவளைகள் மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களுக்கு அருகில் கூடி, பெண் தவளைகளை ஈர்ப்பதற்கு தனித்துவமான ஒலிகளை எழுப்புகின்றன. இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் தவளைகள் அதிகப்படியான முட்டைகளை தண்ணீரில் இடுகின்றன. அவை சில காலங்களில் குஞ்சு பொரித்து, வேகமாக வளர்ந்து, சுதந்திரமாக வாழும் நிலையை அடைந்து சிறு தவளைகளாக மாறுகின்றன. பின்னர் அவை மண்ணுக்குள் புதைந்து, தங்களின் நிலத்தடி வாழ்க்கையைத் தொடங்குகின்றன. 

பாதுகாப்பு முயற்சிகள்: ஊதா நிறத் தவளைகள் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் பாதிக்கப்படக்கூடிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ளன. காடழிப்பு, சாலைகளில் வாகனங்களால் இறந்து போதல் போன்ற காரணிகள் இந்த அற்புத உயிரினங்களுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களாக உள்ளன. எனவே இவற்றை பாதுகாப்பதற்கான எல்லாம் முயற்சிகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது. 

மேலும், விஞ்ஞானிகள் ஊதா தவளைகளின் நடத்தை, உடலியல் மற்றும் நிலத்தடி வாழ்க்கை போன்ற மர்மங்களை அவிழ்க்க தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த முயற்சி இந்தத் தனித்துவமான இனத்தைப் பற்றிய புரிதலை நமக்கு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் சிறப்பான பண்புகளையும், சுற்றுச்சூழலுக்கு அவற்றின் முக்கியத்துவத்தையும் தெரியப்படுத்தும் என நம்புவோம். 

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT