பாண்டியன் மன்னன் ஆட்சிக் காலத்திலே மதுரையிலே ரசம் உருவானதாக சொல்லப்படுகிறது. இதை உணவாக பார்ப்பதை விட மருந்தாகவே பலர் இன்றும் பயன்படுத்துகிறார்கள். சளி, மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்ற பிரச்னைகள் வரும்போது எளிதாக ரசம் வைத்து சாப்பிட்டால் போதும், எல்லாம் பறந்து போய்விடும். மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று விதவிதமான மாறுப்பட்ட ரசங்கள் செய்ய தொடங்கிவிட்டனர். தேங்காய்ப் பால் ரசத்தை சிலர் கேரளா ரெசிபி என்றும் சிலர் பாண்டிச்சேரி ரெசிபி என்று கூறுகிறார்கள். இது தமிழ்நாட்டில் பொள்ளாச்சி பக்கமும் பிரபலமானதாகும். எதுவாக இருந்தால் என்ன? இன்றைக்கு தேங்காய்ப் பால் ரசம் வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பூண்டு-10
வரமல்லி-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
மிளகு-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-2
கொத்தமல்லி-சிறிதளவு.
தேங்காய்-1 கப்.
புளி-50கிராம்.
மஞ்சள் தூள்-1/4கப்.
உப்பு-தேவையான அளவு.
தக்காளி-1
தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு.
கடுகு-1/2 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
மிளகு-1/2 தேக்கரண்டி.
கருவேப்பிலை-சிறிதளவு.
வரமிளகாய்-2
பச்சை மிளகாய்-2
சின்ன வெங்காயம்- 1கப்.
பெருங்காய தூள்- சிறிதளவு.
செய்முறை விளக்கம்:
தேங்காய்ப் பால் ரசம் செய்ய முதலில் பத்து பூண்டு, 1 தேக்கரண்டி வரமல்லி, 1 தேக்கரண்டி சீரகம்,1 தேக்கரண்டி மிளகு, 2 வரமிளகாய், கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து நன்றாக இடித்து வைத்து கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் ஒரு கப் துருவிய தேங்காயுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து முதலில் கெட்டியான தேங்காய்ப் பால் எடுத்து கொள்ளவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து இப்போது கொஞ்சம் தண்ணீரான தேங்காய்ப் பாலாக எடுத்துக் கொள்ளவும்.
ஊறவைத்த புளியுடன் 1 தக்காளியை நன்றாக கையாலேயே நசுக்கி சேர்த்து விட்டு அத்துடன் தேவையான அளவு உப்பு, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், கொத்தமல்லி சிறிது சேர்த்து கலக்கவும். இத்துடன் தண்ணீர் தேங்காய்ப் பாலை சேர்த்து கலந்து விடவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு ½ தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, மிளகு ½ தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, வரமிளகாய் 2, பச்சை மிளகாய் 2 போட்டு தாளித்து கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை 1 கப் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இடித்து வைத்திருக்கும் மசாலாவை அத்துடன் சேர்த்து கிண்டவும். பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி கரைச்சலை சேர்த்து கொதிக்க விடவும். ரசம் சற்று கொதிக்க ஆரமித்ததும் சிறிது பெருங்காய தூளும், எடுத்து வைத்திருருக்கும் கெட்டி தேங்காய் பாலை சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அவ்வளவுதான் தேங்காய்பால் ரசம் தயார். இதை அப்பளம் அல்லது உருளை வறுவலோடு சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவுதான் அல்டிமேட்டா இருக்கும். ஒருமுறை நீங்க வீட்டில் செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.