கிராமத்தில் திடீர் விருந்தினர் வந்தால் சட்டென்று செய்து பரிமாறுவது பாசிப்பயறு பாயாசம்தான். ஏனென்றால் வீட்டுக்கு வீடு விதைத்து விளைவித்து அறுவடை செய்து வைத்திருப்பார்கள். ஆதலால் இந்த பயிர் எப்பொழுதும் இருக்கும் என்பதால் இது ஸ்பெஷல் பாயசம். அதே போல் கறுப்பு உளுந்தும் வீட்டின் அருகே வயலில் விளைவதால் சட்டென்று இவற்றை செய்து பரிமாறுவார்கள். உடலுக்கும் நல்ல சத்து. செய்வதும் எளிது. உள்ளதை கொண்டு நல்லது செய்த திருப்தியும் கிடைக்கும். அதன் செய்முறை விளக்கத்தைப் பார்ப்போம்.
பாசிப்பயறு பாயசம்!
தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு -ஒரு கப்
பால்- ஒரு கப்
வெல்லத் துருவல் -அரை கப்
தேங்காய்த் துருவல்- கால் கப்
பச்சரிசி -ஒரு டீஸ்பூன்
முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை தலா- 10
காய்ந்த வெள்ளரிவிதை -ஒரு டீஸ்பூன்
ஏலத்தூள்- ஒரு சிட்டிகை
நெய்- தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பயறை வெறும் வாணலியில் லேசாக வறுத்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர்விட்டு குழைய வேகவிடவும். தேங்காய் துருவலுடன் ஊறவைத்த பச்சரிசியை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதனுடன் வெல்லக் கரைசல், ஏலப்பொடி, பால் ஆகியவற்றை சேர்த்து குழைவாக வெந்த பயரில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய்விட்டு, ஒடித்த முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து பாயாசத்தில் கலந்து பரிமாறவும். சிறிதளவு வெள்ளரி விதையை தூவி பரிமாறினாலும் சுவை அசத்தலாக இருக்கும்.
கறுப்பு உளுந்து வடை:
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து- ஒரு டம்ளர்
ஒன்று இரண்டாக உடைத்த மிளகுப்பொடி -ஒரு டீஸ்பூன்
சீரகப் பொடி- ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயம் அரிந்தது- ஒரு கைப்பிடி
வர மிளகாய் -இரண்டு
பொரிப்பதற்கு தேவையான அளவு- எண்ணெய்
ருசிக்கு ஏற்ப -உப்பு
செய்முறை:
கறுப்பு உளுந்தை அரைமணி நேரம் ஊறவைத்து தோலுடனேயே வரமிளகாய் சேர்த்து அரைத்து மிளகுப் பொடி, சீரகப்பொடி, வெங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை வடைகளாகத் தட்டிப்போட்டு பொரித்து எடுக்கவும்.
இதை வயதுக்கு வந்த பிள்ளைகளுக்கு கொடுத்து வந்தால் இடுப்பு எலும்பு பலப்படும். இரும்புச்சத்து போன்ற பல்வேறு சத்துக்களும் உடம்பில் சேரும்.