கொளுத்தும் வெயிலுக்கு இதமா மதிய நேரங்களில் தயிர் சாதம் தான் இனி அதிக வீடுகளில் இருக்கும். இந்த தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய்களை தவிர்த்து வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்போம். அதிலும் கொஞ்சம் காரசாரமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்னு நினைப்போம் இல்லையா? இதோ காரசாரமாக கோவைக்காயில் ஒரு வதக்கல், கத்திரிக்காயில் ஒரு காரக்கறி இரண்டு ரெசிபி உங்களுக்காக…
கோவைக்காய் கார வதக்கல்:
தேவையானவை:
பிஞ்சு கோவைக்காய் - கால் கிலோ கடலை மாவு - ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், புளிக்கரைசல் - தேவையான அளவு
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கடுகு உளுந்து - தாளிக்க
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் கோவைக்காயை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளிக் கரைசலை நாரில்லாமல் வடிகட்டி அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கரைத்து வைக்கவும். ஒரு அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு , உளுந்து , கறிவேப்பிலை போட்டுத் தாளித்து கலந்த கலவையில் நறுக்கிய கோவைக்காய் துண்டுகளை பிரட்டி அதை அப்படியே தாளித்ததில் போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை வதக்கி எடுத்தால் கோவைக்காய் கார வதக்கல் ரெடி . கோவைக்காய் மொறுமொறுப்பாக அடுப்பு சிம்மில் வைக்க வேண்டும். அவரவர் தேவைக்கு மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.
கத்திரிக்காய் காரக்கறி
தேவையானவை:
பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ(சிறியது)
பூண்டு - 5 பற்கள்
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை சீரகம் - தாளிக்க
செய்முறை:
கத்திரிக்காய்களை கழுவி நான்காக அரிந்து நீரில் போடவும். (நீரில் போட்டால் கத்திரிக்காய் கருக்காது) கனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை சீரகம் போட்டு பொரிந்ததும் தட்டிய பூண்டு, பெருங்காயத்தை போட்டு வாசம் வந்ததும் கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து பாதி வேகும் வரை நன்கு வதக்கவும். தீயை சிம்மில் வைத்து பிரட்டுவது முக்கியம்.
பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி சில நிமிடங்கள் வதக்கி இறக்கவும். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அமிர்தமாக இருக்கும்.