Man with Anger
Man with Anger https://www.pothunalam.com
வீடு / குடும்பம்

கட்டுக்கடங்காத கோபத்தை காற்றாய் பறக்கச் செய்யும் 5 பயிற்சிகள்!

எஸ்.விஜயலட்சுமி

கோபம் என்பது மனதிலும் உடலிலும் எழுச்சியை ஏற்படுத்தும் ஒரு உணர்ச்சி நிலை. இது இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் அட்ரினலின் அளவை அதிகரிக்கச் செய்யும். சிலர் அடிக்கடி கோபத்தின் பிடியில் சிக்கிக் கொண்டு தங்கள் மனதையும் உடலையும் பாதிப்படையச் செய்து விடுவார்கள். அதுபோன்றவர்கள் இந்த ஐந்து பயிற்சிகளையும் செய்தால் கோபத்தை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

கோபம் உடலை எவ்வாறு பாதிக்கிறது?

கோபம் என்பது கடினமான சூழ்நிலைகளுக்கு இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பதில்.  அடிக்கடி கோபப்படும்போது மன அழுத்தத்தை பெரிதும் அதிகரிக்கிறது. தசைகள் பதற்றம் ஆகின்றன. தாடை இறுக்கமாகிறது. சிலர் பற்களை அரைத்துக் கொள்வார்கள். கோபம் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, தலைவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் மாரடைப்பு அபாயம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். கோபம் என்பது ஒரு உணர்ச்சி மட்டுமல்ல, உடல் எதிர்வினையும் கூட. எனவே கோபத்தை கட்டுப்படுத்த கோப மேலாண்மை பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

1. ஆழ்ந்த சுவாசப் பயிற்சி: கோபம் அதிகரிக்கும்போது இந்தப் பயிற்சி செய்தால் உடலை நன்றாக ஓய்வெடுக்க உதவும். மனதை அமைதி நிலையில் வைக்கும். கோபத்தின் பிடியிலிருந்து ஒரு நபரை விடுவித்து அவரின் எண்ணங்களை சேகரித்து ஒருங்கிணைத்து அமைதியான மனநிலையை அளிக்கும். கண்களை மூடி வசதியாக உட்காரலாம். வயிற்றில் ஒரு உள்ளங்கையை வைத்து நுரையீரலில் நுழையும் காற்றில் கவனம் செலுத்தி ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொள்ளவும். சிறிது இடைவெளிக்கு பிறகு மெதுவாக மூச்சை வெளியே விடவும். இதுபோல 15 முறை செய்யவும். இதனால் மனதில் எந்த எண்ணங்களும் எழாமல் தெளிவாகவும் அமைதியாகவும் வைக்கும். மேலும் தசைகள் தளர்வாகவும் இருக்கும். சுவாசத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

2. பாக்சிங் (குத்துச்சண்டை): கோபம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்குவதில் பாக்ஸிங் மிகச் சிறந்த ஒரு மாற்று வழியாக இருக்கிறது. உடற்பயிற்சி மையத்தில் ஒரு குத்துச்சண்டை செய்வதற்கான பையை எடுத்து கையுறைகள் அணிந்து கொண்டு அந்த பையை ஓங்கி உதைக்கும்போது மனதில் இருக்கும் கோபம் வடிந்துவிடும்.

3. விறுவிறுப்பான நடை பயிற்சி: இருபது நிமிட நடை பயிற்சி மனதை ரிலாக்ஸ் செய்யும். சுறுசுறுப்பை அதிகரிக்கும். மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கும். கோபத்தை தணிக்க மிகச் சிறந்த வழி இது.

4. ஸ்கிப்பிங்: ஸ்கிப்பிங் கயிறு கொண்டு குதித்தல் ஒரு அருமையான பயிற்சி. கோபத்தை உடனே கட்டுப்படுத்த உதவும். இது ஒரு உயர் தீவிர உடற்பயிற்சி ஆகும். இது இதயத்துடிப்பை அதிகரித்து கலோரிகளை விரைவாக குறைக்கிறது. இதில் குதிக்கும் போது மனதில் இருக்கும் கோபம் குறைந்து அமைதி அடைகிறது.

5. தளர்வு: இதை படுத்துக்கொண்டுதான் செய்ய வேண்டும். தரையில் அல்லது பாயில் படுத்துக்கொள்ள வேண்டும். உடலில் உள்ள தசைகளை தளர்த்த வேண்டும். கண்களை மூடிக்கொண்டு இரண்டு கைகளையும் உடலோடு ஒட்டாமல் சற்று தள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். தோள்களை இறுக்காமல் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். முழு உடலும் தளர்வு நிலையில் வைத்து மெல்ல மூச்சு விட வேண்டும். பாதங்களில் இருந்து ஆரம்பித்து உடலின் ஒவ்வொரு உறுப்பாக தளர வைத்து ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும். பின்பு கால்கள், தொடை, இடுப்பு, வயிறு, இரண்டு கைகள், தோள்பட்டை, முதுகு, முகம், கடைசியில் நெற்றி என தலையில் வந்து முடிய வேண்டும். இந்த நிதானமான பயிற்சி மன அழுத்தம், கோபம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது. நிதானமாக மெல்ல மூச்சு விடுவது அவசியம்.

இந்த ஐந்து பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை செய்தாலும் கோபம் எங்கே என்று கேட்பீர்கள். அந்த அளவிற்கு மனதில் அமைதியும் நிதானமும் திரும்பி இருக்கும்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT