Illaram Nallaramaaga Naam Seiyavendiyathu Enna?
Illaram Nallaramaaga Naam Seiyavendiyathu Enna? https://tamil.oneindia.com
வீடு / குடும்பம்

இல்லறம் நல்லறமாக நாம் செய்ய வேண்டியது என்ன?

இந்திராணி தங்கவேல்

வீட்டில் எப்பொழுதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடக்கும்பொழுது பிரச்னைகள் ஏற்படுவதில்லைதான். இருந்தாலும் எப்பொழுதாவது சிலமுறை கணவன் மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படுவது சகஜம். பிறகு தானாகவே சரியாகிவிடும் என்றாலும், எத்தனை முறை விழுந்தாலும் எழும்போது வலிக்கத்தான் செய்யும். அதுபோல் எப்படித்தான் அன்புடையவர்களாக இருந்தாலும் சில நேரம் வரும் கோப, தாபங்களை பொறுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகி விடுகிறது. அப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

உங்களின் தேர்வை விட மற்றவரின் தேர்வு சிறப்பாக இருக்கும் என கருதினால் ஈகோவை விட்டுவிட்டு அதற்கே முதலிடம் கொடுக்க வேண்டும். மற்றவரின் உணர்ச்சிக்கு மதிப்பளிப்பதை பழக்கமாக ஏற்படுத்திக கொள்ள வேண்டும். ஆதலால், ஒருவருக்கு எந்த விஷயம் பிடிக்காதோ அந்த விஷயத்தை பொதுவான இடங்களில் பேசாமல் தவிர்ப்பது சிறந்தது.

ஒரே சமயத்தில் இருவரும் கோபப்படக் கூடாது. அப்படி கோபம் வரும் நேரத்தில் யாராவது ஒருவர் அமைதி காத்தல் நல்லது. இரண்டு கை தட்டினால்தானே ஓசை பிறக்கும். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால்தான் குடும்பம் போர்க்களமாக மாறும். எனவே வாதிப்பதை அறவே விட்டுவிட வேண்டும் .பிறகு சமய சந்தர்ப்பம் வரும்பொழுது நாம் என்ன நினைத்தோம் என்பதை நிதானமாக ஒருவருக்கு ஒருவர் புரியும்படி சொல்லிக் கொள்ளலாம். இதனால் கட்டாயமாக கோப தாபங்கள் தீரும்.

இன்னும் சொல்லப்போனால் கோபம் வருகிறது என்றால் வீட்டில் இருப்பவர் யாராவது ஒருவர் வெளியில் சென்று நன்றாக நடைப்பயிற்சி செய்து விட்டு வந்தால் நிம்மதி கிடைக்கும். அவர்கள் நடைப்பயிற்சி செய்யப் போகும்போது நண்பர்களிடம் மனம் விட்டு பேசி சிரித்து உறவாடி விட்டு வந்தால், வீட்டில் கோபமாக வெளியில் சென்றதே மறந்து போய்விடும். பிறகு சமாதான கொடி கட்டலாம்.

பிறர் பேச்சைக் கேட்டு ஒருவரை ஒருவர் மட்டம் தட்டிக் கொள்ளக்கூடாது. உங்களைப் பொறுத்தவரை உலகம் என்பது உங்கள் குடும்பம்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சிலர் வேண்டுமென்றே கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குலைய வேண்டும் என்று சண்டைக்கு ஏற்பாடு செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு தூர விலக்குங்கள்.

உலகத்தின் பேச்சுக்களை ஒதுக்கித் தள்ளி உங்களின் பிரச்னைகளுக்கு நீங்களே தீர்வு காணுங்கள். கணவன் மனைவி என்றால் பிறந்து வளரும் சூழல் இருவருக்கும் வெவ்வேறானதாக இருக்கலாம். வீட்டில் பழக்க வழக்க பண்பாடுகளும் மாறுபட்டதாக இருக்கும். ஆதலால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு குடும்பத்தை நடத்தும்போது சில நேரங்களில் கருத்து வேற்றுமை வரத்தான் செய்யும். அப்படிப்பட்ட நேரங்களில் நீங்களாகவே சிந்தித்து ஒருவருடன் ஒருவர் மனம் விட்டு பேசி நல்ல முடிவை எடுத்து விடுங்கள். பிறரிடம் சென்றால் அவர்கள் மற்றவர்களிடம் கூறுவார்கள். பிரச்னை பெரிதாக வளர வாய்ப்பு உள்ளது. அடடா! பிரச்னையை இவ்வளவு தூரம் வளர விட்டு விட்டோமே. அதை நாமே கையாண்டிருக்கலாமே என்று பிறகு யோசிப்பதை விட, நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்வதுதான் உத்தமம்.

‘அழகு என்றும் அஸ்தமிப்பதில்லை. ஆனால் அது மற்றோர் அழகில் ஐக்கியமாகி விடுகிறது’ என்னும் உண்மையை இருவரும் உணர்ந்து வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். 'மலருக்கு மணம் எவ்வளவு முக்கியமோ அது போல் மனிதனுக்குத் தோற்றம் முக்கியம்.' ஆதலால் இருவரும் வெளியில் செல்லும்பொழுது நன்றாக அழகாக உடை உடுத்தி மேக்கப் போட்டுக் கொண்டு செல்லலாம் தவறில்லை. அதற்கான அழகுப்படுத்திக் கொள்வதிலேயே நேரத்தை வீணாக்கி விட வேண்டாம். அழகு என்பது முகத்தில் இருப்பது மட்டுமல்ல, மற்ற கலைகளில், சமையலில் என்று ஏதோ ஒன்றில் அது ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடித்துக் கொண்டால், அந்த அழகே அற்புதமாக மிளிர வைக்கும் என்பதை இருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டு தரப்பு குடும்பத்தினரையும், உடன்பிறப்புகளையும் ஒரே மாதிரியாக வரவேற்று, உபசரித்து உணவு படைத்து, வழி அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் ஆயிரம் காலத்துப் பயிர் என்ற திருமண பந்தம் எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும். உறவுப்பாலம் சிறப்புற அமையும்.

உண்மை, தூய்மை, அன்பு, தயை, இரக்கம், அறிவு, அடக்கம், பொறுமை, தன்னம்பிக்கை இவையே வாழ்வின் நல்ல துணைவர்கள். ஆதலால் வாழ்க்கைத் துணையிடம் இந்தத் துணைவர்களையும் போற்றிக்கொண்டு, தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இல்லறமே நல்லறமாய் வாழ்வோமே!

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT