பொதுவாகவே, வெயில் அதிகமாக இருந்தாலே அதன் தாக்கமும் மக்களிடையே அதிகமாக இருப்பது வழக்கம்தான். எனவே, அந்த சமயங்களில் வெயிலினால் உடலில் ஏற்படும் தாக்கத்தின் அளவைக் குறைப்பதற்காகவே குளிர்ந்த அல்லது குளிர்ச்சி நிறைந்த பொருட்களை அதிகமாக உட்கொள்வது வழக்கம். அந்த வகையில் பெரும்பாலான மக்கள் வெயில் காலங்களில் தங்களது தாகத்தைத் தணிப்பதற்காக கடைகளில் பதப்படுத்தி விற்கும் குளிர்பானங்களையே அதிகளவில் வாங்கி அருந்துகின்றனர். ஒருபுறம் அது அவர்களின் தாகத்தை தனித்தாலும்கூட, மறுபுறம் அது அவர்களின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என்பதுதான் உண்மை. குளிர்பானங்கள் அருந்துவதால் ஏற்படும் உடல் நலப் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விளக்குகிறது இந்தப் பதிவு.
இரசாயனக் கலவைகளும் அதன் பாதிப்புகளும்: முன்பெல்லாம் வெயில் காலம் வந்தாலே இயற்கை தரும் பொருட்களின் உதவியுடன், எலுமிச்சை சாறு, நீர்மோர், தர்பூசணி ஜூஸ், இளநீர் போன்ற ஆரோக்கியமான பானங்களை தாங்களே தயார் செய்து அருந்தி வந்தனர். ஆனால், தற்போது அந்நிலையானது தலைகீழாக மாறியுள்ளது. ஏனென்றால், பெரும்பாலான மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இரசாயனம் கலந்த பானங்களை நாடி நிற்கின்றனர். கடைகளில் விற்கும் குளிர்பானங்களில் கலக்கப்படும் இரசாயனங்களின் பின்விளைவுகள் மிகவும் ஆபத்தானவை.
அதிகளவிலான கலோரிகள்: உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு குளிர்பானங்களே ஒருவிதத்தில் காரணமாக இருக்கின்றன. சராசரியாக ஒரு கேன் அளவு குளிர்பானம் அல்லது சோடாவில் சுமார் 150 கலோரிகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் எடையானது ஒரு வருடத்திற்கு 6 கிலோ வரையில் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாம்.
செயற்கை இனிப்பான்: குளிர் பானங்களை அதிகமாக உட்கொள்வதால், டைப் 2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும். ஏனென்றால், இதில் செயற்கை இனிப்பான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. எனவே, குழந்தைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் குளிர்பானங்கள் அருந்துவதை அறவே தவிர்ப்பது நல்லது.
ஆபத்துகள் நிறைந்த அமிலச்சத்து: சர்க்கரையைவிட, குளிர் பானங்களில் உள்ள அமிலம் உங்கள் பற்களைச் சேதப்படுத்தும். குளிர்பானங்களில் உள்ள நச்சுத்தன்மை கொண்ட அமிலமானது பல் எனாமலை பலவீனப்படுத்துகிறது. இதனால் ஏற்படும் துவாரங்கள் மற்றும் பல் சிதைவுக்கும் இந்த அமிலமே காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி, குளிர் பானங்கள் அதிகம் அருந்துவதால் நம் உடம்பில் உள்ள எலும்புகளும் பாதிப்படையலாம். அமிலம் கொண்ட குளிர்பானங்களை அதிகமாக உட்கொள்வது, ஊட்டச்சத்து அளவை குறைப்பதோடு, நம்முடைய எலும்புகளின் கால்சியம் அளவைக் குறைத்து, தேய்மானத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாக்கரின் மற்றும் சுக்ரோலோஸ்: சாக்கரின் மற்றும் சுக்ரோலோஸ் போன்றவை செயற்கை இனிப்புகளாகும். இவை குளிர்பானங்களில் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. இதனால் மனிதர்களின் இனப்பெருக்கத் திறன் பாதிப்படையலாம். அதுமட்டுமின்றி, இது பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளையும் குறைக்கும். குளிர் பானங்களில் உள்ள காஃபின் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். மேலும், விந்தணுவின் தரத்தையும் பாதிக்கலாம்.
இவை மட்டுமின்றி, பல நோய்களுக்கு இந்த குளிர்பானங்களே காரணமாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம். மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனென்றால், தொடர்ந்து குளிர் பானங்களை அருந்துவது புற்றுநோயை உண்டாக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். ஆனால், குளிர்பானங்கள் நேரடியாக புற்றுநோயை உண்டாக்குவதில்லை. அதன் அதிகப்படியான இனிப்பு உடல் பருமன், வாழ்க்கை முறை நோய்கள், இதய நோய் இவை அனைத்தும் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. கல்லீரல், வயிற்றுப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய் போன்றவற்றை உண்டாக்கும் அபாயம் குளிர்பானங்களில் அதிகம் உள்ளது.
இரசாயன பானங்கள் முடிவுக்கு வருமா?: நம்முடைய பழைமையான இயற்கை உணவுக்கு தரும் முக்கியத்துவமானது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. மறுபுறம் நமது உடலிலும் சரி உணவிலும் சரி இரசாயனத்தின் தன்மையும் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. ஆனால், இதுகுறித்த போதிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.
என்னதான் தொழிற்நுட்ப வளர்ச்சியானது வான்நோக்கி பறந்தாலும் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். நாம் இயற்கையான வாழ்வியல் முறைக்கு மாறும் பட்சத்தில்தான் இதுபோன்ற ஏராளமான இரசாயனப் பானங்கள் முடிவுக்கு வரும்.
என்னதான் செய்ய வேண்டும்?: இயற்கை சத்துகள் நிறைந்த குளிர் பானங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. சத்தான பழச்சாறுகள், மோர், சர்பத், லஸ்ஸி, இளநீர், கூழ், கரும்புச் சாறு, ஜிகர்தண்டா போன்றவை வெப்பத்தின் தாக்கத்தை குறைப்பதோடு, உடலின் சக்தியையும் அதிகரிக்கும். எனவே, வெயில் காலங்களில் இதுபோன்ற இயற்கையான குளிர்பானங்களை அருந்துவது உடலுக்கு நன்மை செய்வதாகும்.