ஒரு பொருள் சும்மா இருந்தாலும் பிரச்னை. அதை எந்நேரமும் பயன்படுத்தினாலும் பிரச்னை. அப்பொருளை நாம் நன்றாக பயன்படுத்தும் போது, பிரச்னை வந்தால் அது இயல்பு. ஆனால், அதை நாம் பயன்படுத்தாமலே இருக்கும் போதும் எப்படி அதிக செலவை ஏற்படுத்துகிறது? புரியாத புதிராகவே உள்ளதா? அதை பற்றிய பதிவுதான் இது.
மழை மற்றும் குளிர் காலங்களில், குறிப்பாக நீண்ட கால ஈரப்பதம் மற்றும் குறைந்த வெப்பநிலை உள்ள பகுதிகளில் ஏசிகள் மற்றும் பிற வீட்டு உபகரணங்கள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவை சில தனித்துவமான பிரச்னைகளை எதிர்கொள்ளும். ஏசிகள் தொடர்ந்து இயக்கப்படாதபோது, ஃபில்டர்ஸ் (Filters) மற்றும் சுருள்களில் (Coils) தூசி மற்றும் அழுக்கு குவிந்து, அவற்றின் செயல்திறனை குறைத்து முழு செயலிழப்பை ஏற்படுத்தும். பூஞ்சையின் (Mold fungus) தொடர் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது சாதனத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அதை பயன்படுத்துவோருக்கு உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்துகிறது. மேலும், வெளிப்புற யூனிட்டில் (Outdoor unit) தேங்கி நிற்கும் நீர் துரு (Rust) மற்றும் அரிப்பை (Corrosion) ஏற்படுத்தி முழு அமைப்பையும் முற்றிலும் சேதப்படுத்தும்.
பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிற பொருட்கள்:
ஏசி தவிர, சில சீசன்களில் பலரால் புறக்கணிக்கப்படக்கூடிய பிற முக்கியமான சாதனங்களில், வாட்டர் ஹீட்டர்கள், டிஹுயூமிடிஃபையர்ஸ் (Dehumidifiers), மின்சார கெட்டில்கள் (Electric kettles) மற்றும் குளிர் பிரதேசங்களில் உபயோகிக்கப்படும் அறை ஹீட்டர்கள் (Room heaters) ஆகியவை அடங்கும். வாட்டர் ஹீட்டர்கள், அவ்வப்போது பயன்படுத்தப்படாவிட்டால், துருவை உருவாக்கி அவற்றின் செயல்திறன் மற்றும் ஆயுட்காலத்தை முற்றிலும் பாதிக்கலாம்.
உட்புற ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதில் முக்கியமான டிஹுயூமிடிஃபையர்ஸ் (Dehumidifiers) உபயோகிக்கப்படாமல் இருந்தால், சில நேரங்களில் அதன் காற்றை இழுக்கும் நுழைவு வாயில்கள் தூசியால் அடைக்கப்படலாம் மற்றும் அதை அப்படியே பராமரிக்கப்படாவிட்டால் அதில் பூஞ்சை (Fungus) உருவாகலாம்.
எலெக்ட்ரிக் கெட்டில்கள் மற்றும் ரூம் ஹீட்டர்கள் பயன்படுத்தாமல் விடப்படும்போது, அரிப்பு (Corrosion), தேய்மானம் அதிகரித்து, நாம் எதிர்பார்த்த செயல்பாடுகள் குறையும்.
இதனால் ஏற்படும் தேவையற்ற பழுதுகளை எப்படி தடுக்கலாம்?
தேவையற்ற பழுதுகளைத் தடுக்கவும், இந்த சாதனங்களின் நீண்ட ஆயுளை உறுதிப்படுத்தவும், அவற்றுக்கு வழக்கமான பராமரிப்பு அவசியம். ஏசிகளுக்கு ஃபில்டர்ஸ் (Filters) மற்றும் சுருள்கள் (Coils) அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும். பின், அதில் உள்ள ஈரப்பதத்தின் அளவைக் குறைக்க ஏசியை ட்ரை மோடில் (Dry mode) ஓட வைத்து பயன்படுத்துவதும் நல்லது. வெளிப்புற யூனிட்டை (Outdoor unit) மூடினால் மழை மற்றும் குப்பைகளில் இருந்து பாதுகாக்க முடியும்.
வாட்டர் ஹீட்டர்களில் அழுக்கு மற்றும் துரு வராமல் இருக்க அவ்வப்போது, அவற்றைப் பயன்படுத்துவது நன்மை அளிக்கும். டிஹுயூமிடிஃபையர்ஸ் (Dehumidifiers) அழுக்கு படர்வதை தடுக்க வழக்கமான சுத்தம் தேவைப்படுகிறது. நீண்ட காலம் கழித்து, அறை ஹீட்டர்களைப் (Room heaters) பயன்படுத்துவதற்கு முன்பு, அவற்றின் செயல்பாட்டின் தன்மையை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
இந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், வீட்டு உரிமையாளர்கள் சில விலையுயர்ந்த தேவையற்ற பழுதுபார்ப்புகளைத் (Repair cost) தவிர்க்கலாம். சாதனங்களின் ஆயுட்காலத்தையும் நீட்டிக்க முடியும். இதுவே, அவற்றை ஆண்டு முழுவதும் திறமையாகவும் பிரச்னையின்றியும் செயலாற்ற உறுதி செய்யும். ஆக, நாம் செய்யும் வழக்கமான பராமரிப்பு, சாதனங்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நம்மை சிரமமான வாழ்க்கைச் சூழலுக்குள் சிக்காமல் பார்த்துக்கொள்ளும்.