நம் முன்னோர்கள் உணவோடு சேர்த்து, சமையல் பாத்திரங்கள் மூலம் உணவின் சுவையை அதிகரிக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் கூட முடியும் என்பதை அறிந்திருந்தார்கள்.
கால மாற்றத்திற்கு ஏற்ப, சமையல் பாத்திரங்களிலும் பல புதுமைகள் வந்துவிட்டன. இவை சமைக்கும் வேலையை எளிதாக்கினாலும், ஆரோக்கியதிற்கு தீங்கு விளைவிக்கின்றன என அறிந்து பல பேர் மண்பானை, கல் சட்டி என மீண்டும் பழைய முறைக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில், ஆரோக்கியத்துடன் சுவையையும் அள்ளித் தரும் பல்வேறு சமையல் பாத்திரங்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
சூரியன் மற்றும் நெருப்புடன் தொடர்புடையது செப்பு என்பதால் செப்பு தட்டில் உணவை வைப்பது செரிமானத்தை மேம்படுத்தும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும். இதய ஆரோக்கியத்திற்கு உதவும். ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.
சாப்பிடுவதற்கு வெள்ளி தட்டில் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. வெள்ளித்தட்டில் உண்பது நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சூடான உணவுகளை வெள்ளி பாத்திரத்தில் வைக்கும் போது அதில் உள்ள பாக்டீரியல் எதிர்ப்புப் பண்புகள் உணவில் கலந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு வெள்ளிக் கிண்ணத்தில் சோறு ஊட்டுவதும், வெள்ளி சங்கில் பால், மருந்து புகட்டுவதும் பயன்பாட்டில் உள்ளது. கண் நோய்கள், அசிடிட்டி, உடலில் உண்டாகும் எரிச்சல் போன்றவை குணமாக வெள்ளி உதவுகிறது. வெள்ளி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பது தண்ணீரை பாக்டீரியாக்கள் எதுவும் இல்லாமல் சுத்திகரிக்கிறது. வெள்ளி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
சமையலுக்கு என்று கிடைக்கும் தரமான வெள்ளை பீங்கான் பாத்திரங்கள் குழம்பு, கூட்டு போன்றவை சமைக்க எளிதானது. பீங்கான் என்பது அதிக வெப்ப நிலையில் களிமண்ணை எரிப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதில் ரசாயன கலப்பு எதுவும் இல்லாததால் உடலுக்கு தீங்கு எதுவும் விளைவிக்காது. ஊறுகாய், உப்பு, புளி போன்றவற்றை பீங்கான் ஜாடிகளில் வைக்கலாம்.
மண் கலன்கள் சமைப்பதற்கும் சாப்பிடும் உணவை வைப்பதற்கும் ஏற்றவை. மண் பாத்திரங்களை அதன் மண் வாசனை போகும் வரை மாற்றி மாற்றி கழுவியும், ஊறவைத்தும், காய வைத்தும் பிறகு சில நாட்கள் சமைத்த உணவுகளை அதில் வைத்து பயன்படுத்தி பழக்க வேண்டும். வாங்கியவுடன் சமைக்க ஆரம்பித்தால் உணவில் மண் வாசனை வரும். தினம் ஒரு முறை சுத்தம் செய்து சில நாட்கள் தண்ணீர் வைத்து குடித்து பின் சமைக்கலாம்.
ஸ்டீல் பாத்திரங்கள் வலுவானவை, பளபளப்பானவை, சுத்தம் செய்வது எளிது. பயன்படுத்தவும் எளிதானவை. நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவை.
வெண்கல பாத்திரங்களுக்கு ஈயம் பூச வேண்டிய அவசியம் கிடையாது. இவற்றை புளியும் சாம்பலும் கொண்டு அழுத்தி தேய்க்க தங்கம் போல் பளபளக்கும். அந்த காலத்தில் சோறு வடிக்க வெண்கல பானைகள் பயன்பாட்டில் இருந்தன. வெண்கலம், பித்தளை போன்றவற்றில் சமைத்து சூடாக பரிமாறிய பின் உணவை பாத்திரத்திலிருந்து மாற்றிவிட வேண்டும்.
அலுமினிய பாத்திரத்தில் சமைப்பது மிகவும் ஆபத்தானது. இதில் சமைக்கும் பொழுது அலுமினியத்தில் உள்ள ரசாயனங்கள் உணவில் கலந்து விஷமாகிவிடும்.
பித்தளை பாத்திரங்களை அடுப்பில் வைத்து சமைக்கும் பொழுது ஈயம் பூசித்தான் சமைக்க வேண்டும். மற்ற பயன்பாடுகளுக்கு ஈயம் பூச வேண்டிய அவசியமில்லை. முன்பெல்லாம் திருமண வீடுகளில் பெரிய அண்டாக்கள், தவலைகளை வைத்து சோறு வடிக்க ஈயம் பூசப்பட்ட பாத்திரங்களும் தான் பயன்பாட்டில் இருந்தன. மூன்று நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பித்தளை பாத்திரங்களை ஈயம் பூசி பயன்படுத்த வேண்டும்.
கல் சட்டி மண் சட்டிகளை கொஞ்ச நாட்கள் அன்புடன் பழகிவிட்டால் சமையலுக்கு உதவும். பாத்திரத்தில் சாம்பார், வத்தக்குழம்பு போன்ற சமையல்கள் செய்யலாம். இதில் பால் உறை ஊற்றி வைக்க ருசியான, கெட்டியான தயிர் கிடைக்கும்.