மழைக்காலம் நெருங்கி விட்டால் ஏசியை பயன்படுத்துவதை தவிர்த்து விடுவோம். குறைந்தபட்சம் மூன்று, நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் ஏசியை பயன்படுத்தும் பொழுது அதை சர்வீஸ் செய்து, அதில் உள்ள எல்லா பாகங்களும் சரியாக வேலை செய்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு அதை இயக்க ஆரம்பிப்பதால் கரண்ட் பில் எகிறுவதைத் தவிர்க்கலாம்.
புதிதாக ஏசியை பொருத்துபவர்கள் அதற்கு சரியான ஆட்களை தேர்வு செய்து, பொருத்தி நிறுத்திய உடன் சரியாகப் பொருத்தி இருக்கிறார்களா? என்பதை கண்காணித்த பிறகு அவர்களை அனுப்புவது உத்தமம். ஏசி இருக்கிறது என்பதற்காக எப்பொழுதுமே அதில் அமர்ந்திருப்பது, படுத்திருப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல், பகல் முழுவதும் ஏசி போடுவதைத் தவிர்த்து விட்டு ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து இயற்கையான காற்றை சுவாசிக்கலாம்.
அவ்வப்பொழுது வியர்ப்பதும் மிகவும் அவசியமே. இதனால் உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்கள் வெளியேறுவது தடைபடாமல் இருக்கும். சருமம் பொலிவாக இருக்கும். இதனால் சருமப் பிரச்னைகள் வருவது தவிர்க்கப்படும். ஏசியை அதிக வெப்பமாக இருக்கிறது என்று கூறி மிகக் குறைந்த அளவு செல்சியஸில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இதுபோல், குறைந்த அளவு செல்சியஸில் வைத்து குளிர்கிறது என்று போர்த்திக் கொண்டு படுப்பவர்களும் இருக்கிறார்கள். அது அவசியமற்றது. வீட்டிற்கு வரும் விருந்தினர், குழந்தைகள் இதை பொழுதுபோக்காக செய்வார்கள். அவர்களுக்கு ஏசியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை சொல்லித் தந்து விடுவது நல்லது. இதனால் உறவில் கசப்பு வராது. ஏசியை 24, 25 டிகிரி செல்சியஸில் வைத்தால் சரியாக இருக்கும். குளிர்ந்தால் உடனே நிறுத்தி விடுவது நல்லது.
குளிரைப் பொறுத்துக் கொண்டு ஏசியில் நீண்ட நேரம் தூங்கும்போது நம் உடலின் வெப்ப சமநிலை கெட்டு, இதனால் உடலின் சில பகுதிகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காமல் போவதுடன், மூட்டு வலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, மூட்டு வலி உள்ளவர்களுக்கு இதில் மேலும் அதிகமான வலியை ஏற்படுத்தும். இதை அனுபவத்தில் உணரலாம். சில நேரங்களில் நாசி வறண்டு போகும்.
ஆதலால், பகல் பொழுதில் ஏசி போடுவதைத் தவிர்த்து விட்டு, இரவில் தேவையான அளவு மட்டும் உபயோகித்தால் உடல் நிலையும் மேம்படும். ஆரோக்கியக் கேடு வராது. நாய்ஸ் பொல்யூஷன் குறைந்து நன்கு தூக்கம் வரும். எல்லாவற்றுக்கும் மேலாக மின் கட்டணமும் குறையும். வீட்டில் உபயோகப்படுத்தாமல் கிடக்கும் டேபிள் ஃபேன், பெடஸ்டல் ஃபேன் போன்றவற்றை சுத்தப்படுத்தி உபயோகப்படுத்த பழகினால் இரவிலும் வெப்பம் தணிந்து நன்கு உறக்கம் வரும்!