parents and children Img credit: freepik
வீடு / குடும்பம்

உங்கள் பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் ஆனால்..?

மணிமேகலை பெரியசாமி

ஒரு நாள் அழகம்மாள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தாள். அப்போது, மேசையின் மேல் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டு சுய நினைவுக்கு வந்தாள். சத்தம் வந்த திசையை நோக்கினாள். அங்கு அவள் பேத்தி, கையில் சிறிய பெட்டி போல் எதையோ வைத்து தனியே பேசிக்கொண்டிருந்தாள். அவள் பேசி முடித்ததும், "கையில் இந்த பெட்டியை வைத்துக்கொண்டு யாரிடம் தனியாக பேசிக்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டாள் அழகம்மாள். "ஐயோ பாட்டி! இதன் பெயர் தான் 'செல்போன்'. இதன் மூலமாக தொலைவில் உள்ள நபர்களிடம் எளிதாக தொடர்புகொண்டு நம்மால் பேசமுடியும்.  அவர்களின் முகத்தை இதில் பார்க்கவும் முடியும்" என்று சொல்ல, அழகம்மாள் சின்ன குழந்தை போல ஆச்சரியம் மிகுந்த கண்களுடன் பார்த்தாள்.

ழகம்மாள் மட்டுமல்ல, சில பெரியவர்களும், வயதானதும் குழந்தை போல மாறிவிடுவார்கள். ஏனெனில் நமக்கு வயதாகும்போது, உடல் அளவிலும் மன அளவிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு சமயத்தில் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள் உடலில் சக்தி இல்லாததால் குழந்தை போல ஒன்றிற்காக அடம் பிடிப்பார்கள். எதிலும் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அறிவாற்றல் மற்றும் செயல்திறன்களில் ஏற்படும் மாற்றங்களே பெரியவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கான காரணம்.

ஆகையால், அவர்கள் மீது எரிச்சல் மற்றும் வெறுப்பு அடையாமல் இருக்க வேண்டும். அவர்களின் சாயலில், செயலில் உள்ள குழந்தைத் தனத்தைப் பார்த்தால், சுமையாக தெரியாமல் நமக்கு இன்னொரு குழந்தைபோல் தெரிவார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்துகொண்டு அவர்களிடம் இரக்கத்துடன் இருக்க வேண்டும். 

அவர்களுக்கு புரியும் வகையில் தெளிவான, சுருக்கமான மொழியைப் பயன்படுத்தி அவர்களுடன் உரையாடி பொழுதைப் போக்குங்கள். அடம் பிடித்தால், பொறுமையாக இருந்து புரிய வையுங்கள். அவர்கள் ஆர்வமுடன் இருப்பதை அலட்சியப்படுத்தாமல் நிதானமாக விளக்குங்கள்.

அழகம்மாளின் பேத்தி மெதுவாக அவள் கையைப் பிடித்து, போனின் செயல்பாடுகளை விளக்கியபோது, ​​அவளின் கண்கள் வியப்புடன் பிரகாசித்தன. ஒரு குழந்தை கதை கேட்பது போல் ஆர்வமாக அதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

நாம் குழந்தைகளாக இருக்கும்போது நம் பெற்றோர் நம்மை கவனித்து, காத்து நிற்பார்கள். நாம் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் நாம் அவர்களை பாதுகாக்க வேண்டும். ஆனால், சில சூழ்நிலைகளால், அவர்களை முதியோர் இல்லங்களில் தள்ளிவிடுகிறோம். எந்த சூழ்நிலையிலும் நம்மை கைவிடாமல் காத்து நின்ற பெற்றோர்களை நாம் கைவிடக் கூடாது அல்லவா? என்றோ ஒரு நாள், நாமும் முதியோர் ஆவோம் தானே?

குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை தத்தெடுப்பார்கள். முதியோரை முதியோர் காப்பகத்திற்கு தத்துக் கொடுப்பார்கள். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை கொஞ்சம் மாற்ற முயற்சிக்கலாமே? குழந்தைகளை தத்தெடுப்போம். பெற்றோர்களை தத்துக்கொடுக்காமல் இருப்போம்.

தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு முன் இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!

கமல் வைத்து ஒரு மொக்கை படத்தை இயக்கினேன்… ஆனால்… – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்!

டேஸ்டியான வாழைத்தண்டு பால் கறி மற்றும் முட்டை ஊறுகாய் செய்யலாம் வாங்க!

ஐபிஎல் எப்போது தொடக்கம்? வெளியான செய்தியால் ரசிகர்கள் குஷி!

ஃபேஷன் அழகியான மூதாட்டிக்கு ஹாலிவுட்டில் குவியும் வாய்ப்புகள்!

SCROLL FOR NEXT