நீங்கள் எந்த அளவுக்கு புத்திசாலியாகவும், அழகாகவும், வாழ்க்கையில் வெற்றியாளராகவும் இருந்தாலும், ஒரு மனமுதிர்ச்சி குறைந்த நபருடன் இருப்பது மிகவும் கடினமாகும். ஏனென்றால், நாம் என்ன சொல்கிறோம் என்பதை அவர்கள் முறையாக புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு எது சரியெனப் படுகிறதோ அதை மட்டுமே செய்வார்கள். பிறருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளது என்பது இவர்களுக்குப் புரியாது.
இந்த பதிவில் நான் சொல்லப்போகும் 3 முக்கிய அறிகுறிகள் மூலமாக, ஒருவர் குறைந்த மனமுதிர்ச்சி கொண்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அடிக்கடி காயப்படுத்துதல்.
ஒரு நபர் உங்களை அடிக்கடி காயப்படுத்திக் கொண்டே இருந்தால் அவர் குறைந்த மெண்டல் மெச்சூரிட்டி கொண்டவர் என அர்த்தம். ஏனெனில், எதுவெல்லாம் உங்களுக்கு அடிக்கடி காயத்தை ஏற்படுத்துகிறதோ அதெல்லாம் தவறானவை. உதாரணத்திற்கு உங்கள் வயிற்றில் வலி உள்ளது என்றால் வயிற்றில் ஏதோ பிரச்சனை என அர்த்தம். சூடான பாத்திரத்தை தொடும்போது உங்களுக்கு வலிக்கிறது என்றால், அந்த பாத்திரத்தில் வலி உண்டாக்கக்கூடிய சூடு உள்ளது என அர்த்தம். அதேபோலதான் ஒரு நபரால் நீங்கள் அதிகம் காயப்படுகிறீர்கள், துன்பப்படுகிறீர்கள் என்றால், அந்த நபரிடம் ஏதோ தவறு உள்ளது என அர்த்தம்.
உண்மையிலேயே நம்மை புரிந்து கொண்ட, நம்மை பிடித்த எவரும் அடிக்கடி நம்மை காயப்படுத்த மாட்டார்கள். நம்முடைய முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இருக்கும். ஆனால் ஒரு நபர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்களை காயப்படுத்திக் கொண்டே இருந்தால். பிரச்சனை உங்களிடம் இல்லை அவர்களிடம்தான். அதுபோன்ற நபர்களிடமிருந்து கொஞ்சம் விலகியே இருங்கள்.
அடிக்கடி அறிவுரை கூறுதல்.
ஒரு நபருக்கு அறிவுரை கூறுவது தவறு என நான் சொல்ல மாட்டேன். ஆனால் எல்லா விஷயத்திற்கும் அறிவுரை கூறிக் கொண்டே இருப்பது தவறானது. அப்படி அறிவுரை கூறும் நபர்களுக்கு சரியான மனப்பக்குவம் இல்லை என்று தான் அர்த்தம். ஏனெனில் என்னதான் நாம் அதிகப்படியான அறிவுரை கூறினாலும் அதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டு நடக்க மாட்டார்கள். சரியான மெச்சூரிட்டி கொண்டவர்களுக்கு இது நன்றாகப் புரியும். எனவே தேவையான போது மட்டும் ஒருவருக்கு அறிவுரை கூறி வழிகாட்டுவது நல்லது. அடிக்கடி அறிவுரை கூறினால் அந்த நபர் மீது நமக்கு எரிச்சலே உண்டாகும். இத்தகைய நபர்களும் குறைந்த மனமுதிர்ச்சி உடையவர்கள்.
பாதிக்கப்படுவதை விரும்பாத நபர்கள்.
குறைந்த மனமுதிர்ச்சி கொண்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் தான் பாதிக்கப்படக்கூடாது என்றே நினைப்பார்கள். எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு நன்மை பயக்கும் விஷயங்களையே செய்வார்கள். அவர்களுக்கு ஏதாவது கெடுதல் ஏற்படப்போகிறது எனத் தெரிந்தால், அதில் பிறரை மாட்டிவிட நினைப்பார்கள். இவர்களால் உணர்வுகள் சார்ந்த பாதிப்புகளைக் கூட தாங்க முடியாது. இதுபோன்று, தங்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நபருடன் ஆரோக்கிய உறவை வைத்திருப்பது கடினம்.
இந்த மூன்று அறிகுறிகள்தான் குறைந்த மனமுதிர்ச்சி கொண்டவர்களின் மிக முக்கிய அறிகுறிகளாகும். இதுபோன்ற மனநிலை கொண்ட நபர்களிடம் சற்று விலகியே இருங்கள். ஏனெனில் இவர்கள் நாம் சொல்வதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள், ஏதாவது தவறு நடந்தாலும் அந்த பழியை நம் மீது போட்டுவிட்டு தப்பிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.