நம்முடைய மதிப்பு என்னவென்பதை அடுத்தவர்கள் உணரவேண்டும் என்று நினைப்பதை விட அதை நாம் தெளிவாக உணர்ந்திருந்தால், அதுவே நம்மை மென்மேலும் வெற்றிப்படியில் ஏற்றிச் செல்லும். இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு இன்டர்வியூவில் நடிகர் நாகேஷிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, ‘நியாயமாக உங்களுக்கு வர வேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்கு போகும்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?’ என்பதே அந்த கேள்வி.
அதற்கு நாகேஷ் அவர்கள் கூறிய பதில் என்ன தெரியுமா?கட்டிடங்கள் கட்டும்போது சவுக்கு மரத்தை முக்கியமாக வைத்து சாரம் கட்டி குறுக்கே பலகைப் போட்டு அதன் மேலே உயரமான கட்டிடத்தை கட்டி அதற்கு பெயின்ட் அடித்து முடித்ததும் அந்த சவுக்கு மரத்தை எடுத்து விடுவார்கள்.
கிரஹபிரவேஷம் செய்யும்போதும், அந்த கட்டிடம் கட்ட முக்கிய காரணமாக இருந்த சவுக்கு மரத்தை யார் கண்களிலும் படாதவாறு பின்னால் எங்கேனும் மறைத்து வைத்துவிட்டு அந்த கட்டிடத்திற்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத எங்கேயோ வளர்ந்த வாழைமரத்தை வீட்டின் முன்னாலே நட்டு எல்லோரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் அந்த வாழைமரத்திற்கு போய்விடும். இதில் இருக்கும் உண்மை என்ன தெரியுமா?அந்த வாழைமரம் மூன்று நாட்கள்தான் வாழும். ஆடு, மாடுகள் மேய்ந்து கடைசியில் குப்பை வண்டியில் போய் சேரும். ஆனால், மறைந்து கிடக்கும் சவுக்கு மரம் எதற்காகவும் கவலைப்படுவதும் இல்லை, கண்ணீர் விடுவதும் இல்லை. அடுத்த கட்டிடம் கட்ட தயாராக சிரித்துக் கொண்டிருக்கும்.
'நான் வாழைமரம் இல்லை சவுக்கு மரம்' என்று சொன்னாராம். இந்த கதையில் சொன்னதுப்போல. நம்முடைய மதிப்பை மற்றவர்கள் உணரவில்லை என்றாலும் நமக்கு அது தெரியும். அதுவே போதுமானதல்லவா? ‘மற்றவர்கள் நம்மைப்பற்றி தெரிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்களே?’ என்று அதை எண்ணி வருத்தப்படுவதை விட்டு விட்டு அடுத்த கட்ட வேலையில் கவனம் செலுத்தி நகர்ந்து விடுவது நல்லது. இதை புரிந்துக் கொண்டு நடந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். முயற்சித்துப் பாருங்களேன்.