learn to attract Imagecredit- pixabay
Motivation

துரத்துவதை விட்டு ஈர்க்க கற்றுக்கொள்ள வேண்டும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வாழ்க்கையில் நாம் ஏதோ ஒன்றை துரத்திக் கொண்டே இருக்கிறோம். அது வெற்றியாக இருக்கலாம், அன்பாக இருக்கலாம், அல்லது ஏதோ ஒன்றாக இருக்கலாம். ஆனால் இதுவல்ல பிரச்னை. இந்த துரத்தல் பெரும்பாலும் நம்மை சோர்வடைய செய்துவிடுகிறது. நாம் விரும்புவதை அடைவதில் இருந்து நம்மை  தொலைவில் கொண்டு நிறுத்துகிறது. துரத்துவதை விட்டு ஈர்க்கக் கற்றுக் கொண்டால் நம் வாழ்க்கைப் பயணம் இனிதாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும்.

துரத்துவது என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அல்லது விருப்பத்தை நோக்கி தொடர்ந்து முயற்சி செய்வது. இந்தப் போக்கு நல்லது தான் என்றாலும் ஒரு விஷயத்தை தொடர்ந்து நிறைய முறை முயற்சித்து சரியாகவில்லை என்றால் பதற்றத்தையும், மன அழுத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும்.

ஆனால் ஈர்த்தல் (attracting) என்பது நாம் விரும்புவதை வாழ்க்கைக்குக் கொண்டு வர நம்மை தயார்படுத்திக் கொள்வது. நாம் அதுவாகவே ஆவது. அதாவது அந்த செயலாகவே மாறுவது. நம்மை தகுதியாக்கிக் கொள்வது. இது அமைதி, நம்பிக்கை, பொறுமையின் நிலையிலிருந்து நம்மை செயல்பட தூண்டும். துரத்துவது என்பது வேறு. வெற்றியை ஈர்ப்பது என்பது வேறு.

வெற்றியை ஈர்ப்பது என்பது ஒரு மனநிலை. அது நம் எண்ணங்களில் தொடங்கி செயல்களில் பிரதிபலித்து வெற்றியை ஈர்த்து தக்க வைத்துக் கொள்வதற்கு பாடுபடும். வெற்றியை அடையத் தேவையான விஷயங்களை தேடி கற்கத்தூண்டும். கற்றதை சரியான நேரத்தில் நம்பிக்கையோடு செயல்படுத்த பாடுபட வேண்டும். நம் செயல்களின் மீது நமக்கு நம்பிக்கை வரும்பொழுது அது வெற்றியை ஈர்க்கும் பயணமாக மாறும்.

வெற்றிக்கு தடைக் கற்களாக இருக்கும் எதிர்மறை எண்ணங்கள், தோல்வி பற்றிய பயம் போன்றவற்றை உடைத்தெறிந்து நம் திறன்களை வெளிப்படுத்தி வெற்றியை ஈர்க்க முன்னோக்கி செல்ல வேண்டும். எதிர்காலத்தைப் பற்றிய கவலை மற்றும் பயத்தை விடுத்து நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி நேர்மறை ஆற்றலுடன் முன்னேற நம் பயங்களை அடையாளம் கண்டு எதிர்கொள்ள பழகினால் நம் செயல்களில் நம்பிக்கை வந்து முழு கவனத்துடன் செயல்பட்டு வெற்றியை காண்போம். துரத்துவதை நிறுத்தி வெற்றியை ஈர்க்கப் பழக வேண்டும். 

வெளிப்படும் தடைகளை எதிர்கொண்டு, திறன்களை வெளிப்படுத்தி, லட்சியக் கனவை நோக்கி முன்னேறி செல்வது வெற்றிக்கான பாதையை உண்டாக்கும். துரத்தும் மனநிலை பெரும்பாலும் வெளிப்புற அங்கீகாரத்தை தான் நாடும். ஆனால் ஈர்க்கும் மனநிலையோ உள் மகிழ்ச்சியையும், தன்னிறைவையும் உண்டாக்கி வெற்றியைத் தேடித்தரும்.

காற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்கவும் கூடாது, ஊசி தேவைப்படும் இடத்தில் நூல் விற்கவும் கூடாது என்பார்கள். காலம், தேவை இரண்டையும் கருத்தில் கொண்டு வெற்றியை நோக்கி செல்ல வேண்டும். வெற்றியை ஈர்க்க வேண்டும். துரத்துவதை விட்டு ஈர்க்க கற்றுக் கொண்டால் நம் வாழ்க்கைப் பயணம் இனிமையாக இருக்கும்.

உண்மைதானே தோழர்களே!

மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

SCROLL FOR NEXT