Do you know the story of Lord Murugan's goat vehicle? https://ta.quora.com
ஆன்மிகம்

முருகப்பெருமானுக்கு ஆடு வாகனமான கதை தெரியுமா?

க.பிரவீன்குமார்

சிவபெருமான் ஒரு சமயம் தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல் தனது மகனுக்கும் வாகனம் வேண்டும் என்று எண்ணினார். நாரத முனி மூலம் இதற்கான ஏற்பாட்டையும் செய்தார். அதனால் சிவபெருமான் நாரதரை அழைத்து, “நாரதா, நீ ஒரு யாகத்திற்கு முன்னேற்பாடு செய்” என்று கூறினார்.

நாரதரும் உடனே ஈசனே சொல்லிவிட்டார் என்று அவரது கட்டளையை ஏற்று யாகத்திற்கான ஏற்பாட்டைச் செய்தார். அந்த யாகத்திற்காக அபவாயு என்ற பசுவைக் கொண்டு வந்தார்கள். யாகம் தொடங்கியவுடன் அந்த பசு பயங்கரமான சத்தத்தை எழுப்பியது. இதனால் அங்கு இருந்த அனைவரும் பயந்தனர். அப்போது அந்தப் பசுவின் வயிற்றிலிருந்து ஓர் ஆடு தோன்றியது. அந்த ஆடு பார்ப்பதற்கு மிகப் பயங்கரமாக இருந்தது.

இதனைப் பார்த்த அனைவரும் பயந்து நடுங்கினர். அந்த ஆடு அங்கு இருந்தவர்கள் அனைவரையும் நான்கு புறங்களிலும் சிதறி ஓடச் செய்து. அது மட்டுமின்றி, ஆட்டின் உருவமானது நேரமாக நேரமாக வளர்ந்து கொண்டே போனது. யாராலும் அந்த ஆட்டின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தேவர்கள் அனைவரும், ‘நாரதரை நம்பி நாம் யாகம் வளர்த்தது தவறாகி விட்டது’ என்று எண்ணினார்கள். அதோடு, எல்லோரும் நாரதரை திட்டவும் ஆரம்பித்தார்கள். நாரதரோ, ‘எல்லோர் மத்தியிலும் நான்தான் கலகம் செய்து தவிக்க வைப்பேன். ஆனால், இந்த சிவபெருமான் என்னையே தவிக்க வைத்துவிட்டாரே’ என்று மனம் நொந்து அங்கிருந்து அவரும் தப்பித்துச் செல்ல முற்பட்டார்.

அந்த ஆடு எட்டுத் திசைகளையும் காக்கக்கூடிய அஷ்டதிக்கு பாலகர்களையும் சிதறி ஓடச் செய்தது. இதனால் உலகமே அதிர்ந்தது. தேவர்கள் எல்லோரும் அலறினர். இதனை அறிந்தும் அறியாதது போல் மகாவிஷ்ணு ஆனந்த சயனத்திலிருந்தார். அந்த வைகுண்டத்துக்குள்ளும் ஆடு புகுந்து அட்டகாசம் செய்தது.

இதனை அறிந்த முருகப்பெருமான் தனது தலைமை தளபதி வீரபாகுவிடம் கண்ணை மட்டும் அசைத்துக் காட்டினார். அதை அறிந்து கொண்ட வீரபாகு வைகுண்டத்திற்குச் சென்றார். அவரைப் பார்த்ததுமே அந்த ஆடு அவரது தோற்றத்தில் பயந்துவிட்டது. இருந்தும் அவரை முட்டுவது போல் செய்து காட்டியது. உடனே வீரபாகு அதன் கழுத்தை வளைத்துப் பிடித்துத் தர தரவென்று இழுத்துக் கொண்டு முருகனின் திருவடியில் கொண்டு சேர்த்தார்.

அந்த ஆடு முருகப்பெருமானைக் கண்டதுமே அமைதியாக நடந்து அவரது பாதத்தைச் சென்று பணிவுடன் வணங்கியது. முருகப்பெருமான் அதன் தவற்றை மன்னித்து அதன் மீது ஏறி அமர்ந்தார். அடங்காத அந்த ஆட்டை அடக்கி அதை வாகனமாக ஏற்றதால் தேவர்கள் அனைவரும் உற்சாகத்தில், ‘மேஷ வாகனனே வாழ்க’ என்று வாழ்த்தினர்.

இதையெல்லாம் பார்த்த நாரதர், ‘முருகப்பெருமானே இது என்ன அதிசயம்?’ என்று வினவினார்.

"நாரதரே யாகத்தின் பலனை இவ்வுலகிற்கு எடுத்துக் கூறுவதற்காகவே நான் இந்த நாடகத்தை நடத்தினேன். நீங்கள் யாகம் செய்யும்பொழுது தோன்றிய இந்த ஆடு எனக்குக் காணிக்கையாக மாறிவிட்டது. அதனால் உங்களுக்கு நூறு யாகம் வளர்த்த பயனை நான் அளிக்கிறேன். நீங்கள் காணிக்கையாகக் கொடுத்த பொருள் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதனை நான் ஏற்றுக் கொள்வேன் என்பதைப் புரிய வைக்கவே இந்த நாடகம்” என்றார் முருகப்பெருமான். யாகத்தின் பலனைப் பெற்ற நாரதரும் மகிழ்ச்சியாகச் சென்றார்.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT