சர்வ வல்லமை படைத்தவர் அனுமன். அவருடைய ஆற்றல்கள் அளப்பரியது. ஆஞ்சனேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் போற்றப்படுகிறார்.
அனுமனுக்கு மிகுந்த புத்திக் கூர்மை, தைரியம், பலம் போன்ற அம்சங்களுடன் பணிவு என்ற உயர்ந்த குணமும் இருக்கிறது. அவரை வழிபடுபவர்களுக்கு அறிவு, பலம், தைரியம், நம்பிக்கை, வெற்றி, ஆற்றல் என எல்லாவற்றையும் தருவார். சிறந்த கல்விமான், ஆனாலும் பணிவு மிக்கவர். பிறர் நலமே தன்னுடைய நலம் என்று நினைப்பவர். மிகுந்த தூய்மையான பக்தியுடன் ஸ்ரீராமனுக்கு சேவை செய்தவர். ராம நாமத்தை ஜபிக்கும்போதெல்லாம் அங்கே அனுமனும் வந்து விடுகிறார் என்பது இன்றளவும் உள்ள நம்பிக்கை. சிரஞ்சீவியாக எல்லா காலங்களிலும் வாழ்கிறார் ஆஞ்சனேயர்.
இத்தனை சிறப்புகள் மிகுந்த அனுமனின் மிகச் சிறந்த குணம் பணிவு. அவர் ஒருபோதும் தன் அளப்பரிய ஆற்றல்களால் ஆணவமோ, பெருமையோ அடைந்தவரில்லை. அவர் முதன் முதலில் சீதா தேவியை பார்க்க ஸ்ரீராமனின் தூதராக இலங்கைக்கு சென்றபோது, எடுத்த எடுப்பில் போய் ‘நான்தான் அனுமன், ஸ்ரீராமனிடம் இருந்து வந்திருக்கிறேன்’ என்றெல்லாம் கூறவில்லை. அத்தனை பெரிய பராக்கிரமசாலியாக இருந்தாலும் ஒரு மரத்தின் பின் அமர்ந்து ஸ்ரீராம நாமத்தை ஜபித்தார். அதைக் கேட்டு சீதையின் கவனம் அவர்பால் சென்றது. அதன் பின்னரே தன்னை ஸ்ரீராம பக்தன் என்று அறிமுகம் செய்துகொள்கிறார். ‘தான் ஸ்ரீராமனின் தூதுவன்’ என்கிறார் பணிவுடன்.
பல அளப்பரிய செயல்கள் செய்து சீதையை மீட்டதில் பெரும்பங்கு அவருக்கு உண்டு. அதேபோல, லக்ஷ்மணன் மூர்ச்சையாக விழுந்ததும் சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்த பெருமான் அவர். அவருடைய அவ்வளவு பலமும் ஆற்றலும் இருந்தாலும் பணிவின் இலக்கணமாக திகழ்கிறார் அனுமன்.
பல கோயில்களில் அனுமனின் திருவுருவச் சிலை இரு கைகளையும் கூப்பியவாறு, வணங்கிய நிலையிலேயே இருப்பதை பார்த்திருப்போம். பிற தெய்வங்கள் இப்படி அமைக்கப்படுவதில்லை. பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சனேயர் கம்பீரமாக, பிரம்மாண்டமாக காட்சி அளித்தாலும், இரு கைகளையும் கூப்பிய நிலையில், அவருடைய கண்கள், நேர் எதிரே நரசிம்மர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நரசிம்மப் பெருமானின் காலடிகளைப் பார்த்தவாறு இருக்கும்.
வாழ்வில் மிகவும் உயர்ந்த பதவியை அடையும் மனிதர்கள் அனுமனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் பணிவு. அவருடைய முகம் குரங்கின் முகமாக இருப்பதற்கு கூட ஒரு காரணம் உண்டு. அனைவராலும் கேலி செய்யப்படும் குரங்கின் முக வடிவை விரும்பி ஏற்றுக்கொண்டவர் அனுமன். எல்லாவிதமான மனிதர்களையும் பாகுபாடு இல்லாமல் ஆதரித்து பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை இந்த வடிவம் வலியுறுத்துகிறது. தன்னைப் பற்றிய நினைப்பே சிறிதும் இல்லாத, சுயநலம் துளியும் இல்லாத பெருமான் அவர்.
உள்ளே அளப்பரிய ஆற்றல்களை அடக்கிக் கொண்டு இருந்தாலும் எப்போதும் பணிவுடன் விளங்கும் அனுமனைப் போல மனிதர்களாகிய நாமும் இருந்தால் வாழ்வில் பல புகழும் வெற்றியும் தேடி வரும் என்பதில் சந்தேகம் இல்லை. எந்த நிலையில் இருந்தாலும் பணிவு என்கிற ஆபரணத்தை அணிய மனிதர்கள் மறக்கக்கூடாது என்பதையே அனுமனுடைய பணிவு விளக்குகிறது.
பணிவு உள்ள ஒரு மனிதன் புதிய கருத்துக்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வார். அவர்களுக்கு மனத்தாழ்மை இருக்கும். பிறருடைய வெற்றியை கொண்டாடும் அதேநேரத்தில் தன்னுடைய வெற்றியை மிகவும் தாழ்மையுடன் மட்டுமே வெளிப்படுத்துவார்கள். அகங்கார குணம் எதுவுமே அவர்களிடத்தில் இருக்காது. தங்கள் தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வார்கள்.