Lord Dhanvanthri who cures incurable diseases
Lord Dhanvanthri who cures incurable diseases https://dheivegam.com
ஆன்மிகம்

தீராத நோய்களையும் தீர்க்கும் தன்வந்திரி பகவான்!

சேலம் சுபா

திருமாலின் பல்வேறு அவதாரங்களில் தன்வந்திரி அவதாரமும் ஒன்று. இந்து மதத்தில் தேவர்களின் மருத்துவரான தன்வந்திரியை நம்பிக்கையுடன் வழிபட்டால் மனிதர்களின் தீராத நோய்களையும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை.

அசுரர்கள் எப்போதும் தேவர்களை துன்பப்படுத்தும் சுபாவம் கொண்டவர்கள். தேவர்களது சொகுசான வாழ்வு தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது அசுரர்களின் ஆசை. தேவர்களை விட அசுரர்கள் பலசாலிகளாக இருந்ததால் அவர்களிடமிருந்து தங்களை காக்குமாறு தேவர்கள் மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தனர். சாகா வரம் தரும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி வாழலாம் என்பதால் அமிர்தத்தை பெற, தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர்.

அப்படி பாற்கடலை கடையும்போது முதலில் ஆலகால விஷம் வந்தது. அதை சிவபெருமான் அருந்தி நீலகண்டனானார். அதனையடுத்து காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், மூத்தவளான மூதேவி, மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். கடைசியாக அமிர்தத்துடன் மகாவிஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்தில் இருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் சாகா வரம் பெற்றனர்.

திருமால் தேவர்கள் வழியே மக்களின் மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜயந்தி ஆகும். நோயின்றி நல்ல உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது. ஸ்ரீ தன்வந்திரி பகவான் மகாவிஷ்ணுவின் அம்சமாக பன்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப் பூச்சை ஏந்தியும் இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலில் இருந்து கெட்ட இரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன.

வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கு என்று தனி சன்னிதி உள்ளது. திருவரங்கம் ஆலயத்தில் உள்ள தன்வந்திரி சன்னிதி பிரசித்தமானது. தன்வந்திரி ஹோமம் செய்வதால் நோய் தீரும் என்பது ஐதீகம். கேரளாவிலும் தன்வந்திரி பகவானுக்கு ஆலயங்கள் உள்ளன.

ஹிமா என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது. இதை அறிந்த அவள் மனைவி அந்த நாள் (தன்திரேயாஸ்) இரவில் கணவனை சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி நடுவே ஆபரணங்களையும் வைத்து கணவனுக்கு புராணக்கதை கூறி, தூங்காமல் பார்த்துக் கொண்டதாகவும், பாம்பு உருவத்தில் வந்த எமன் தீப எண்ணெயில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கண்கள் கூசி காலை வரை காத்திருந்து விட்டு திரும்பிச் சென்றதாகவும், இப்படி கணவன் உயிரை மனைவி எமனிடமிருந்து காப்பாற்றியதாக புராண கதை ஒன்று கூறுகிறது.

தன்திரேயாஸ் நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தனது மனைவி காப்பாற்றியதற்கு தன்வந்திரி பகவானே காரணம் என்று மன்னன் நம்பியதால் மக்கள் அனைவரையும் தன்திரேயாஸ் தினத்தன்று இரவில் எமதீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஐப்பசி மாதம் வரும் தீபாவளியின் 3வது நாள் தந்திரேயாஸ் எனப்படும் தன்வந்திரி ஜயந்தி வழிபாடு நடைபெறுகிறது. தன்வந்திரி பகவானுக்கு கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்து தயாரித்த பிரசாதத்தை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.

நரேந்திர மோதியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறாரா சத்யராஜ்?

World Bee Day 2024: தேனீ இயற்கையின் ராணி!

காடுகள் அழிக்கப்படுவதற்கும் கால்பந்து மைதானங்களுக்கும் என்ன சம்பந்தம்?

கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த நபருக்கு 10 வயது குறைந்தது! எப்படி சாத்தியம்?

பல்கலைக்கழகத்துக்கு நிகரானது உங்கள் அனுபவம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

SCROLL FOR NEXT