கார்த்திகை மாதத்தில் சிவபெருமான் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே, அவரை குளிர்விக்கும் பொருட்டு இம்மாதத்தில் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத சோமவாரங்கள் மிகவும் சிறப்புப் பெற்றவை. அன்றைய தினம் அனைத்து பிரபல சிவ ஆலயங்களிலும் 108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி வேள்வி செய்து அந்த நீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். சிவன் அபிஷேகப் பிரியர் என்பதால் சங்கால் செய்யப்படும் அபிஷேகம் சக்தி வாய்ந்தது.
பவளம், முத்து, சாளக்ராமம் போல் சங்கும் கடலில் கிடைக்கப்பெறும் பூச்சி இனத்தின் மேல் ஓடு. சங்கிற்கு பவித்திர (புனிதமான) பாத்திரம் எனப் பெயர். சங்குகள் இரண்டு வகைப்படும். வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு. இதை எப்படி அடையாளம் காணலாம் என்பதற்கு இடது கையால் பிடித்துக் கொண்டு ஊதுவதற்கு வசதியாக அமைந்திருப்பது வலம்புரி சங்கு எனவும், வலது கையால் பிடித்து ஊதுவதற்கு வசதியாக உள்ள அமைப்பு இடம்புரி சங்கு எனவும் கொள்ளலாம். சங்கில் இருந்து எழும்பும் ஒலி பிரணவமாகிய ஓம்கார ஒலியாகும்.
வாழை இலை மீது தானியங்களைப் பரப்பி அதன் மீது சங்குகளை வைத்து நீர் வார்த்து மாவிலை, தர்ப்பை நுனிகளை விட்டு சங்குக்கு பூஜை செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்விப்பர்.
கார்த்திகை மாதம் சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி அதை கங்கையாக பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு என்பது செல்வத்தின் சின்னம். இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், பொருட்செல்வம் வேண்டும் இல்லறத்தவர்களும் இந்த பூஜையை செய்து இறையருள் பெறுவார்கள். சங்காபிஷேகத்தை பார்த்தாலோ, அந்தத் தீர்த்தத்தைப் பருகினாலோ பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை சோமவார விரதம்: க்ஷய ரோகத்தால் பாதிக்கப்பட்டு சாபம் பெற்ற சந்திரன், கார்த்திகை மாதம் சோமவார விரதம் இருந்து விமோசனம் பெற்றதாக வரலாறு. சிவபெருமான் சந்திரனுக்கு அருள்புரிந்து தனது சிரசில் சூடிக்கொண்டு சந்திரசேகர் என்று அழைக்கப்படுகிறார். சந்திரனின் மனைவி ரோஹிணி இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வந்தாள் எனவும், இந்த விரதத்தை கடைபிடிக்க நோயற்ற வாழ்வும், எல்லா வளங்களும் நலங்களும் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
சங்கடங்களை நீக்கும் சங்கு காயத்ரி மந்திரம்:
‘ஓம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தந்நோ சங்க ப்ரசோதயாத்’
சோமவார விரதம் திருமணம் நடைபெறவும், நல்ல வாழ்க்கைத்துணை அமையவும், குழந்தை பாக்கியம் கிட்டவும்,. ஆயுள் விருத்தி அடையவும் மேற்கொள்ளப்படுகிறது.