Mandagapattu cave temple.
Mandagapattu cave temple. 
ஆன்மிகம்

தமிழ்நாட்டின் முதல் குடைவரைக் கோவில் எங்கிருக்கிறது தெரியுமா?

நான்சி மலர்

தமிழ்நாட்டில் எண்ணற்ற மிகவும் பிரபலமான குடைவரைக் கோவில்கள் உள்ளன. மகாபலிபுரம், பிள்ளையார்பட்டி, வெட்டுவான் கோவில், கழுகுமலை போன்றவை இருக்கின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக முதன் முதலில் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட குடைவரைக் கோவிலை பற்றிதான் இந்த பதிவில் காண உள்ளோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு என்னும் கிராமத்தில் உள்ளது இக்குடைவரைக் கோவில். பாடலீஸ்வரர் ஆலயத்திலிருந்து 5 கி.மீ பயணித்து இவ்விடத்திற்கு வரலாம். இக்கோவில் சிவா, விஷ்ணு, பிரம்மா மூவருக்காகவும் கட்டப்பட்டதாகும். இந்த குடைவரை கோவிலை விசித்திரசித்தன் என்னும் பல்லவ மன்னனால் தோற்றுவித்து ‘லக்ஷிதன் கோவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை மண்டகப்பட்டு திருமூர்த்தி கோவில் என்றும் அழைப்பார்கள்.

காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த முதலாம் மகேந்திர வர்மனே இந்த விசித்திரசித்தன். மகேந்திரவர்மனுக்கு பல பட்டப்பெயர்கள் உண்டு, அதில் ‘லக்ஷிதன்’ என்னும் பெயரை இக்கோவிலுக்கு வைத்துள்ளார். இந்த அழகிய குடைவரைக்கோவிலை மலைப்பகுதியிலிருந்து செங்குத்தான இடத்தில் காண முடிகிறது. தரைப் பகுதியிலிருந்து 4 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலை பார்ப்பதற்கு அழகிய மண்டபம் போல காட்சியளிக்கிறது. கோவிலில் இருபக்கமும் துவார பாலகர்கள் இருக்கிறார்கள். கோவிலின் வலது பக்கத்தில் மழுஉடையாரும், இடதுபுரத்தில் சூலத்தேவரும் இருக்கிறார்கள்.

இக்கோவிலை விசித்திரசித்தன் கல், மரம், உலோகம், கலவை எதுவும் இன்றி உருவாக்கியுள்ளார். இந்த கோவிலுக்குள்ளே அர்த்தமண்டபம், முக்கிய மண்டபம் என இரண்டு மண்டபங்கள் உள்ளன. இக்கோவிலில் உள்ள சிலைகள் 7ஆம் நூற்றாண்டில் உபயோகப்படுத்திய உடை, ஆபரணம், ஆயுதம் ஆகியவற்றை காட்டுகிறது. கோவிலுக்குள் செல்லும் போது தடித்த நேர்த்தியான தூண்களை காணலாம். ஆரம்ப காலக்கட்டத்தில் உருவாக்கிய குடைவரைக்கோவில் என்பதால்

தூண்களும் எளிமையாகவே இருக்கிறது. வளைந்த போதிகைகள் உத்திரத்தை அழகாக தாங்கி நிற்கிறது. இக்கோவிலின் முகப்பு நீண்டிருப்பது தனிச்சிறப்பாகும். முகப்பு தூண்கள் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் பார்க்க முடிகிறது. ஆனால் கோவில் சுவர்களை ஒட்டியுள்ள தூண்கள் அரைத்தூண்களாக பார்க்க முடிகிறது. முகமண்டபத்திலிருந்து அர்த்தமண்டபத்திற்கு போகும் போது நான்கு தூண்களை பார்க்க முடிகிறது. ஆனால் சுவரை ஒட்டியுள்ள அரைத்தூண்கள் மேலிருந்து கீழாக சதுரமாக வெட்டப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

மண்டபத்தின் நடுவில் இருக்கும் இருதூண்களில் பலகை என்ற இன்னொரு அமைப்பு சேர்க்கப்படுள்ளது. கருவறையை ஒட்டியுள்ள தூண்கள் அரைத்துண்களாக இருக்கிறது. முகப்பில் ஆறு தூண்களும், அர்த்தமண்டப்பத்தில் நான்கு தூண்களும், கருவறையில் நான்கு தூண்களும் பார்க்க முடிகிறது. இன்னொரு விஷயம் அர்த்தமண்டபம், முகமண்டபத்தை விட கொஞ்சம் மேலோங்கியிருக்கிறது. கருவறை, அர்த்தமண்டப்பத்தை விட கொஞ்சம் மேலோங்கியிருக்கிறது. இதை பார்ப்பதற்கு படி போன்ற அமைப்பை தருகிறது.

இக்கோவிலின் பின்புறத்தில் மூன்று கருவறைகள் உள்ளன. இதில் சிலை வைப்பதற்கான குழியும் அமைந்துள்ளது. ஆனால் தற்போது சிலை ஏதுமில்லை. இந்த கோவில் கட்டிடக்கலைக்கு திருப்புமுனையாக இருந்ததாக சொல்லக்கூடிய கல்வெட்டு இருப்பதை காணலாம். பல்லவ காலத்து கல்வெட்டு என்பதால் கிரந்த எழுத்தில் எழுதியிருக்கிறார்கள். அதில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், அழியும் பொருட்களான கல், மரம், கலவை, உலோகம் போன்றவையின்றி பிரம்மன்,விஷ்ணு, சிவனுக்காக விசித்திரசித்தனால் நிர்மானிக்கப்பட்ட லக்ஷிதாயிதனம் என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது.

வடதமிழ்நாட்டில் முதல் முதலாக கட்டப்பட்ட இந்த குடைவரைக்கோவில் காலத்தை வென்று இன்றும் கம்பீரமாக நிற்கிறது என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT