திருவோடு என்பது அட்சய பாத்திரம், கபாலம் போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. திருவோடு மரத்தின் முற்றிய காயை இரண்டாக வெட்டி காய வைத்தால் கிடைக்கும் இந்தத் திருவோட்டின் சிறப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.
திருவோடு என்பது சன்னியாசிகள் வைத்துக்கொள்வது. பொதுவாக, இந்த மரங்களையோ திருவோட்டையோ வீட்டில் வளர்ப்பதுமில்லை, வைத்துக் கொள்வதுமில்லை. கோயில்களில் சிவபெருமான் பிச்சாடனர் வடிவத்தில் கையில் இந்தத் திருவோடு ஏந்தி இருப்பதைக் காணலாம். இது சிவனடியார்களின் புனிதப் பொருளாக உள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய விதை இந்தத் திருவோடு காய்தான். இதன் பூர்வீகம் தெற்கு மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவாகும். இந்த மரத்தின் விதைதான் திருவோடு செய்யப் பயன்படுகிறது. இந்த மரத்தின் பூக்கள் நறுமணம் மிக்கது. இதனைத் தேடி வௌவால்கள் வருகின்றன. இவைதான் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. திருவோட்டுக்காய் பெரிய தேங்காய் சைஸில் இருக்கும். முற்றிய காய் உதிர்ந்து விழும். அதனை இரண்டாகப் பிளந்து நன்கு காய வைத்து திருவோடாகப் பயன்படுத்தப்படுகிறது.
திருவோடு மரம் 30 அடி உயரம் வரை வளரும். இதன் பட்டை மென்மையாகவும், இலைகள் அகலமாகவும் இருக்கும். திருவோட்டின் காய் பூசணிக்காய் போல் பெரிய அளவில் காணப்படும். இது மரத்தில் ஏழு மாதங்கள் வரையில் இருந்தால்தான் நன்கு முதிர்ந்து ஓடு பகுதி நல்ல தடிமனாக வரும். இதனைக் கொண்டு அலங்காரப் பொருட்கள், அழகுப் பெட்டிகள், ஆபரணங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் இதில் அழகான படங்கள் வரைந்து தட்டு, கப்புகள், இசைக்கருவிகள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். பிரேசிலில் உணவைப் பரிமாறும் பாத்திரங்களாக இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஓட்டில் உணவு வைக்க விரைவில் கெடாது. உடலுக்கு வலுவையும் கொடுக்கும். அதனால்தான் நம் நாட்டில் துறவிகள் இதனைப் பயன்படுத்துகிறார்கள் போலும்.
இந்தக் காய்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதன் உலர்ந்த பழங்கள் மற்றும் ஓட்டின் உட்புறம் உள்ள ஏராளமான வேதிப்பொருட்கள் வயிற்று உபாதைகளுக்கும், நுரையீரல் மற்றும் சிறுநீர் தொற்றைப் போக்கவும் பயன்படுகிறது. உடலை குளிர்ச்சி அடையச் செய்யவும், வயிறு மற்றும் குடல் புண்களை போக்கவும் பயன்படும் சிறந்த மூலிகை காய் இது. இந்த மரம் சைவ மடங்களிலும், சில கோயில்களில் தல விருட்சமாகவும் உள்ளது.