‘கல்கி’ அவர்கள் எழுதிய ‘பொய்மான் கரடு’ என்னும் நாவலைப் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அமரர் கல்கி அவர்கள் நாவலில் இந்த இடத்தை பற்றிக் குறிப்பிட்டிருப்பார். ஆனால் பொய்மான் கரடு என்ற இடம் உண்மையிலேயே இருக்கிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? அந்த இடத்தை பற்றிய தகவலைத்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.
‘பொய்மான்கரடு’ என்ற இடம் உள்ளதாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த இடம் சரியாக எங்கேயிருக்கிறது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பொய்மான் கரடு என்றால், இரு பாறைகளுக்கு நடுவிலே ஒரு மான் எட்டிப்பார்ப்பதுபோல தெரியும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் அங்கே மான் இருக்காது. இது ஒரு ஆப்டிக்கல் இலூசன் போலத்தான். இந்த மானுடைய உருவம் குறிப்பாக ஒரு இடத்திலிருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். கொஞ்சம் முன்னாடி அல்லது பின்னாடி என்று நகர்ந்து போய் பார்த்தால் கூட தெரியாது.
சேலத்திலிருந்து நாமக்கல் போகும் தேசிய நெடுஞ்சாலையில் இடதுபுறத்தில் பனமரத்துப்பட்டி போகும் வழியில் தேசிய நெடுஞ்சாலை பிரிட்ஜ் வழியாக செல்லும்போது இடது புறத்தில் கடைகள் அமைந்திருக்கும். அங்கே அவர்களிடம் விசாரித்தாலே எங்கிருந்து பார்த்தால் மான் நன்றாக தெரியும் என்று தெளிவாக சொல்வார்கள். சரியாக அந்த இடத்தில் நின்று பார்த்தால், இரண்டு பாறைகளுக்கு நடுவிலே சந்தன நிறத்தில் கொம்பு வைத்த மான் ஒன்று எட்டிப்பார்ப்பது போல தெரியும். இந்த இலூசனை காலை 6:00 A.M முதல் 6:00 PM வரையே காண முடியும். இந்த காட்சி இரவில் தெரியாது.
கல்கியின் பொய்மான் கரடு நாவலில் இங்கு விவசாயம் செய்து வாழ்ந்து வந்த செங்கோட கவுண்டரை பற்றி எழுதியிருப்பார். உண்மையிலேயே ‘செங்கோடன்காடு’ என்ற இடம் பொய்மான் கரடுக்கு அருகிலே இருக்கிறது என்பதை கேட்க மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது.
அரசாங்கம் இங்கே பொய்மான் கரடு என்ற பலகைகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் தேசிய நெடுஞ்சாலை வந்ததால் பலகைகளை நீக்கிவிட்டனராம். இயற்கையாகவே இப்படி ஒரு ஆப்டிக்கல் இலூசன் அமைந்திருப்பது என்பது மிகவும் ஆச்சர்யத்தை தருகிறது. இதை வீடியோவாக அல்லது புகைப்படமாக பார்ப்பதை விட நேரிலே சென்று பார்க்கும்போது தெளிவாகவும், அழகாகவும் மானை காண முடியும்.
இந்த இடம் சுற்றுலாத்தளமும் கிடையாது, நிறைய மக்கள் கூட்டம் வந்து செல்லும் இடமும் கிடையாது. ஆனால் அப்படி கொண்டாடப்பட வேண்டிய இடமேயாகும். இந்த இடத்தை அரசாங்கம் சரியாகப் பராமரித்தால் நன்றாக இருக்கும். இயற்கையாகவே நமக்கு கிடைத்த இதுபோன்ற அதிசயமான இடத்தை பாதுகாப்பது நமது கடமையாகும்.
எனவே அடுத்தமுறை நீங்கள் இந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும்போது கண்டிப்பாக நின்று இந்த பொய்மான் கரடின் அதிசயத்தை ரசித்துவிட்டு செல்லுங்கள்.