Luzern Museum 
பயணம்

லூசர்ன் (Luzern) அருங்காட்சியகம் - அருமையிலும் அருமை... அடடா! இப்படி ஒரு அருங்காட்சியகமா!

ரெ. ஆத்மநாதன்

- ரெ.ஆத்மநாதன், ஜூரிக், சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் லூசர்னும் ஒன்று! இந் நகரத்திற்கு ரயில், பஸ், ஃபெரி என்று எல்லாப் போக்குவரத்துச் சாதனங்களின் மூலமும் செல்லலாம். நாங்கள் வசிக்கும் ஜூரிக்கிலிருந்து சுமார் 45 நிமிடக் கார் பயணந்தான். வாங்க! ஒரு நாள் டூராக ஒரு ரவுண்ட் அடித்து வருவோம்!

அதோ பாருங்கள்! கீழே ஏரி! படிப்படியாய் மலையின் முகடு வரை வீடுகள். எல்லா வீடுகளுக்கும் எளிதாகச் சென்று வர சாலைகள். ஏனெனில் இங்கு காரில்லா வீடுகளைக் காண்பதரிது. டெல்டா மாவட்டச் சமவெளிப்பகுதியில் பிறந்த எம் போன்றோருக்கு, மலைகளைப் பார்த்தாலே மனதுக்கு இரட்டைச் சந்தோஷம்!அதிலும் பசுமை போர்த்திய, கண்களுக்கு இதமான மலைகளைக் கண்டால் மனது குதூகலத்தில் கொண்டாட்டம் போடத்தானே செய்யும்!

இங்கு பயணிப்பதே ஓர் அலாதி சுகம். அதற்குக் காரணம் அருமையான சாலைகளும், விதிகளைக் கொஞ்சமும் மீறாத ஓட்டுனர்களுந்தான்! ஆங்காங்கே செல்ல வேண்டிய வேகத்தின் அளவையும், ஊர்களின் பெயர்கள் மற்றும் மார்க்கங்களின் விபரங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதால் டிரைவர்களின் பணி சிரமமற்று உள்ளது.

இதோ! நகரின் உள்ளே நுழைகிறோம்!

நுழைந்த சற்று நேரத்திலேயே அருங்காட்சியகம் வந்து விடுகிறது. அழகிய ஏரிக்கரையை ஒட்டிய சாலையில், கரையை ஒட்டிய சிறுவர் பூங்காவை அடுத்து அமைந்துள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சிறுவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அலாதியானது. அவர்களுக்கான பூங்காக்களும், அங்குள்ள விளையாட்டுச் சாதனங்களும், அவற்றின் பராமரிப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.

இந்த மியூசியம் ‘ஹன்ஸ் எர்னி' (Hans Erni) என்ற ஓவியர் பெயரால், எர்னி மியூசியம் என்றே அழைக்கப்படுகிறது. சுவிசில் மிகப் பிரபலமான இந்த ஓவியர் (1909-2015) விஞ்ஞான சம்பந்தமான பல ஓவியங்களை வரைந்து அருங்காட்சியகத்துக்கு உதவியிருக்கிறார்! 300 க்கும் மேற்பட்ட அவர் ஓவியங்கள் இங்குள்ளன. ’பல வார்த்தைகள் விளக்க முடியாததை ஓர் ஓவியம் விளக்கும்!’ என்பது உண்மைதானே! விஞ்ஞானத்திற்கும் ஓவியத்திற்கும் ஒரு பாலம் அமைத்த மகான் இவர்!

(கூடுவாஞ்சேரியில் எமது வீட்டிற்கு எதிரே, சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு பூங்காவை ‘அண்ணா’ பெயரில் அமைத்தார்கள். உயர் கோபுர விளக்குகளுடன் சில விளையாட்டுச் சாதனங்களும் நிறுவப்பட்டன. கழிவு நீர்க் கால்வாயைத் தாண்டி உள்ளே செல்ல, ஒரு பலகையைக் கூட அவர்கள் போடவில்லை. நாளடைவில் சாதனங்கள் துருப்பிடித்து உடைந்து போயின. கோபுர விளக்குகளில் பல எரிவதேயில்லை. கம்பி வேலி காணாமலே போய்விட்டது. பத்திரிகைகளில் செய்தி வந்தும், பாராமுகமே நீடிக்கிறது. என்ன செய்வது? மனது சிலவற்றை அசை போடுவதை நிறுத்த மறுக்கிறதே!)

மியூசியம் உள்ளே:

ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, விமானம் மற்றும் விண்வெளிப் பயணம், கடல் வழிப் பயணம் என்று பல பிரிவுகளை ஏற்படுத்தி, அங்கெல்லாம் அவை தொடர்புடைய வளர்ச்சி குறித்தும், இன்றைய நிலையில் அடைந்துள்ள முன்னேற்றம் வரை விளக்கியும், அதற்கான சான்றுகளையும், மாடல்களையும் வைத்து, சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்கிறார்கள். பழைய நீராவி எஞ்சினிலிருந்து நவீன மின்சார மோட்டார்கள் மூலமாக இயங்கும் ரயில்கள், அவற்றின் பெட்டுகள் என்று அனைத்தையும் காட்சிப் படுத்தியுள்ளார்கள்.

57 கி.மீ., தூரத்திற்கு மலையைக் குடைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள இரு வழிப்பாதை குறித்த விபரங்கள் நம்மை வியக்கச் செய்கின்றன. ஒவ்வொரு கிலோ மீட்டரிலும் என்ன வகையான பாறைகள் இருந்தன, அவற்றை எத்தகைய கருவிகள் மூலம் குடைந்தார்கள் என்பதைப் படங்கள் மூலம் விளக்கியுள்ளார்கள். எடுத்த பாறைத்துண்டுகள் சிலவற்றைப் பார்வைக்கும் வைத்துள்ளார்கள். ரயில் பாதையில் சாரட் வண்டியைக் குதிரையைக் கொண்டு இயக்கியதையும், அவர்களின் கண்டுபிடிப்புகள் சில தூரத்து நாடான இந்தியா வரை பயன் தந்ததையும் குறித்து வைத்துள்ளார்கள்.

கப்பல் போக்குவரத்து  வளர்ந்து, இன்றைய நிலைக்கு வந்துள்ளதை அந்தப்பகுதி நன்றாகவே விளக்குகிறது.

விமானப் பிரிவிற்குள் நுழைந்தால், இரண்டு விமானங்களையே நிறுத்தி வைத்து, 1903 லிருந்து தற்போது வரை விமானங்கள் வளர்ந்த விதத்தையும், அதில் சுவிசின் பங்கையும் விவரித்துள்ளார்கள். உள்ளே ஒரு ஹெலி காப்டரும் நிற்கிறது. விமானத்தின் விமானி அறை வரை நாம் பார்வையிடலாம். இரு விமானிகளின் முன்னால்தான் எத்தனை மீட்டர்கள்! எத்தனை சாதனங்கள்! அவை நம்மை மலைக்கச் செய்கின்றன.

உள்ளே தரமான உணவு விடுதியும் உள்ளதால் லஞ்ச் சாப்பிடக்கூட வெளியே செல்ல வேண்டியதில்லை. உணவை முடித்துக் கொண்டு சாலைப் போக்குவரத்துப் பகுதிக்குச் சென்றால், சைக்கிளில் தொடங்கி, ஸ்கூட்டர், கார் என்று அத்தனையும் வளர்ச்சி பெற்ற வரலாற்றை, அவற்றின் மூலமாகவே காட்சிப்படுத்துகிறார்கள்.

ஆங்காங்கே சிறுவர்களின் அறிவைப் பெருக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் பல உபாயங்களைக் கையாண்டுள்ளார்கள். ஒரு சிறிய ஹாலுக்குள் சென்று சிறுவர்கள் டான்ஸ் ஆடினால் அது அப்படியே வீடியோ செய்யப்பட்டு, அவர்கள் குழுவின் நடுவே ஆடுவதைப் போலவே இசையுடன் திரைகளில் தெரிகிறது. மற்றொரு அறைக்குள் சென்று, அதன் நடுவே சென்று நாம் என்ன செய்தாலும், அது ரெகார்ட் ஆகி, 360 டிகிரியில் திரையில் தெரிகிறது. கேப்சூலில் அமர்ந்து நாமே வானில் செல்வது போலவும், நம் கண்களின்மீது பொருத்தப் படுகின்ற சாதனத்தில், கண்முன்னே நீச்சல் வீரர்கள் மிக அதிக உயரத்திலிருந்து ‘டைவ்’ அடிப்பதும் நம்மைச் சிலிர்க்க வைப்பவை! இப்படி நிறைய பொழுது போக்கு அம்சங்களை வைத்துள்ளார்கள்.

திறந்த வெளியில், சிறுவர்கள் நீரில் விளையாட ஆழம் அதிகமில்லாத, பாதுகாப்பான பகுதி உண்டு.அ வர்கள் காரோட்டி மகிழ, கார்களும் உள்ளன. அவ்வாறு வரும் சிறுவர்களுக்கு, சாலை விதிகளைப் போதிக்கிறார்கள். சிறுவர்கள் ஸ்கூட்டர், சிறு வண்டிகள், பஸ் என்ற பெயரில் ஸ்டீரிங் இணைக்கப்பட்ட இருவர் அமரும் வாகனம் என்று சிறுவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும் அனைத்தும் உள்ளன.

சுற்றுலாக்கள் மனதுக்கு மகிழ்வைத் தருவதுடன், பல்துறைகளின் வளர்ச்சி மற்றும் விஞ்ஞான முன்னேற்றத்தை நாம் அறிந்து கொள்ளச் செய்வதுடன், நமது குழந்தைகள் மகிழவும் வழி ஏற்படுத்தித் தர வேண்டும். அந்த விதத்தில் இந்த மியூசியம் சிறப்பாகவே செயல்படுகிறது.

இவற்றோடு நில்லாமல், திரைப்பட அரங்கு (FilmTheatre), கோளரங்கம் (Planetarium), சுவிஸ் சாக்லட் சாகசம் (Swiss Chocolate Adventure) ஆகிய பிரிவுகளும் நமக்குப் பொழுது போக்குடன் பலவற்றையும் போதிக்கின்றன.

இதனை விட்டு வெளியே வந்து சாலையைக் கடந்தால் பெரும் பூங்கா வரவேற்கிறது. அங்கும் சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள் நிறைய உள்ளன.

அப்படியே ஏரிக் கரையோரமாகவே நடைப் பயிற்சியும் மேற்கொள்ளலாம். ஏரியில் ஃபெரி மற்றும் எந்திரப் படகுகள் பயணித்த வண்ணம் உள்ளன. வாத்துகளும் மற்ற நீர்ப் பறவைகளும் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன. ஏரியை ஒட்டியுள்ள மலையில், வீடுகளும் பசுமையுமாக நம் கவனத்தை ஈர்க்கின்றன.

நாங்கள் ஏரிக்கரையில் நடந்து விட்டு பின்பே கார் ஏறினோம்.

வசதியும்,வாய்ப்பும் உள்ளவர்கள், குழந்தைகளுடன் ஒரு முறை சென்று பார்த்து மகிழ்ந்து வாருங்கள்!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT