Summer Tourist Spot
Summer Tourist Spot 
பயணம்

எங்க Summer Holiday Plan ரெடி! - வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கல்கி டெஸ்க்

ஜெயகாந்தி மகாதேவன்

Wayanad

 கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள வயநாட்டுக்கு நாங்கள் இதுவரை சென்றதில்லை. மைசூரிலிருக்கும் குடும்ப நண்பர் ஒருவரின் அழைப்பை ஏற்று வரும் ஏப்ரலில் மைசூர் சென்று இரண்டு நாள் தங்கிவிட்டு, பின் நண்பர் குடும்பத்துடன் வயநாடு சென்று இரண்டு நாள் சுற்றிவர பிளான். அழகிய மலைகள், காடுகள், காபி டீ மற்றும் ஸ்பைசி கார்டன்கள், ரிசார்ட்களால் சூழப்பட்டுள்ள வயநாடு இப்பவே கற்பனையில் என் கண்முன் விரிந்து 'வா வா' வென வரவேற்கிறது.

அங்குள்ள நதிகள், ஏரி, நீர்வீழ்ச்சிகள், வியூ பாயிண்ட், மியூசியம் போன்றவற்றில் அதிகபட்சம் பார்க்க முடிந்ததை பார்க்கணும்னு ஆசை. திருநெல்லி மஹாவிஷ்ணு கோவிலை அவசியம் பார்க்கணும். சென்றுவந்த நினைவாக மூங்கில் மற்றும் தேங்காய் ஓடுகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

ஜெயா சம்பத்

Golconda, Hydrabad

இந்த வருடம் கோடை விடுமுறையில் ஐதராபாத் செல்ல வேண்டும் என்று திட்டம்.அங்கு சார்மினார், கோல்கொண்டா கோட்டை, பிர்லா அறிவியல் அருங்காட்சியகம், சில்கூர் பாலாஜி கோயில் பார்த்து விட்டு நேரே இராமானுஜர் சிலையை தரிசனம் செய்ய முசிந்தல் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறோம். 216 அடி உயரமுள்ள "சமத்துவச் சிலை"யை கண் குளிர தரிசிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ட்ரிப். என் பையன் பக்காவா ரயில் டிக்கெட், தங்குவதற்கு ஹோட்டல் எல்லாம் புக் பண்ணித் தரேன்னு சொல்லிட்டான்.

ஐதராபாத்தில் வசிக்கும் என் ஆருயிர்த் தோழி லதாவையும் சந்திக்க வேண்டும் என்று மனதுக்குள் ஆசை. மூன்றாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை நாங்கள் இருவரும் மதுரையில் ஒன்றாகப் படித்தோம்.இனிமையான பசுமையான நினைவுகள் பலவற்றை இருவரும் பேசி மகிழலாமே என்றெல்லாம் நினைத்துள்ளேன். கோடை வெயிலை நினைத்தால் தான் பயமாக உள்ளது. நிறைய இளநீர், பதநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி என்று சாப்பிட வேண்டியது தான். ஜாலியா போயிட்டு வந்த பிறகு, பயணம் பற்றி எழுதுகிறேன்.

ஜானகி பரந்தாமன்

Trichy Utchi Pillayar kovil

விட்ட குறை தொட்ட குறை என்பார்களே.. அதேபோல் உறவினர்வீட்டு விசேஷங்களை அட்டெண்ட்  பண்ண முடியாமல் (திருச்சி) விட்டுப்போன நல்லது ,கெட்டது விஷயங்களை பூர்த்தி பண்ணி  விட்டு, அப்படியே திருச்சி தாயுமானவரையும் உச்சிப்பிள்ளையாரையும் தரிசனம் செய்து விட்டு, எதிரே இருக்கும் சாரதாஸ்  பட்டு சென்டரில் ஒருபுடவை (பெண்களுக்கு அது எடுக்கவில்லையென்றால் எப்படி.. சுற்றுலா வெற்றுலாதான்.. வாங்கிவிட்டு.. சொந்த ஊரான திருநெல்வேலியில் நெல்லையப்பரையும், கோபாலனையும்  தரிசித்து விட்டு, எங்கள் வீட்டு மாப்பிள்ளையின் உடன்பிறப்புக்கு பிறந்திருக்கும் பெண் மலரின் பெயர் சூட்டு விழாவில் கலந்துகொண்டு, பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆசைதீர, உடல் உஷ்ணம் குறைய(கூடவே மன அழுத்தமும்..) குளித்துவிட்டு, குற்றால அருவியிலும் குளித்துவிட்டு, குற்றால நாதரை தரிசித்து, அப்படியே உறவினர்கள் வீட்டிற்கும் தலையை காட்டி விட்டு, உடன் பிறப்பு வீட்டில் தங்கி ஓய்வெடுத்தபின் புவிசார் குறியீடு பெற்ற நிறுவனங்களான மண்பாண்டம் தொழிற்சாலை (கூனியூர்) கடைசல் தொழில் (அம்பை), அப்பள தொழில் (கல்லிடைக்குறிச்சி), கைநெசவுத்தொழிற்சாலை (வெள்ளாங்குழி), போன்ற இடங்களுக்கு சென்று அவர்களது வாழ்வாதாரத்தை குழுந்தைகளை அச்கே அழைத்துச்சென்று காண்பிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

வி. கலைமதிசிவகுரு

thirparappu waterfalls

இந்த முறை வெயில் அதிகமாக இருப்பதால் முதலில் பக்கத்தில் இருக்கும் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம் போகலாம் என நினைத்திருக்கிறோம். இன்னொரு தடவை கன்னியாகுமரிக்கு சென்று பகவதி அம்மனை தரிசித்து விட்டு கடற்கரைக்கு சென்று நீலக் கடலின் காட்சிகளை கண்டுகளிக்க வேண்டும். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல் மூன்றும் சங்கமிப்பதை இங்கே பார்க்க வேண்டும். மேலும் சூரிய உதயம், மற்றும் அஸ்தமனத்தின் அற்புதமான காட்சிகளை கண்டு களிக்கலாம் என்று ஆர்வத்துடன் இருக்கிறோம்.

விவேகானந்தர் பாறை, திருவள்ளுவரின் பெரிய சிலை ஆகியவற்றையும் காண்போம். மற்றொரு நாள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிக்கு சென்று மலையின் உச்சியில் இருந்து கொட்டும் நீரில் குளித்து மகிழ வேண்டும். பின் அருள்மிகு திருகுற்றாலசுவாமி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். மறுநாள் பாபம் போக்கும் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு சென்று குளித்து விட்டு ஸ்ரீ பாபநாசநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வரலாம் என திட்டமிட்டு இருக்கிறோம்.

நாகஜோதி கிருஷ்ணன்

சொந்த ஊர் சென்னை தான். வெயில் அதிகம் மானாலும் இங்கே தான் இருப்போம். நா. முத்துக்குமார் பாடல் வரிகள் வர மாதிரி தான். வெயிலோடு விளையாடி வத்தல், வடகம் போட்டு வெயிலை வீணாக்காமல் நேரம் கழிப்போம். பொண்ணு, பேரன், பேத்தி,  வீட்டுக்கு வருவாங்க. குழந்தைகளோடு விளையாடி, குறும்புகளை ரசித்து, சின்ன சண்டைகள் போடும் குழந்தைகளுக்கு பஞ்சாயத்து பண்ணி நாள் போகிறது தெரியாம மகிழ்ச்சியாக இருப்போம். 

பக்கதிலிருக்கும்  கோவில் போவோம். இரவில் சின்ன கதைகள் சொல்லி சோறு ஊட்டி சந்தோஷப்படுவோம். பாரம்பரிய உணவுகளை சமைத்து கொடுத்து மகிழ்வோம். குழந்தைகள் செல்போனை மறந்து, தாத்தா பாட்டி எங்களோடு பல்லாங்குழி, தாயம் போன்ற  பல ஆட்டங்களை சந்தோஷமாக விளையாடுவார்கள்.

சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

சிறுவயதில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் கோடையில் விடுமுறை விட்டால் சின்னம்மா வீடு, அத்தை, மாமா வீடு என உறவினர் வீட்டுக்கு செல்வது வழக்கம். எப்படா விடுமுறை விடுவார்கள்?. எப்போது ஊருக்கு போவோம்? என்று நாட்களை எண்ணிக் கொண்டிருப்போம். ஊருக்கு போவது என்றால் அவ்வளவு  சந்தோஷம் இருக்கும்.

திருமணத்திற்கு பிறகு கணவர் மளிகை கடை வைத்திருந்ததால் கோடை விடுமுறையில் சுற்றுலா செல்வது என்பதெல்லாம் நினைத்துப் பார்ப்பது என்பது முடியாத காரியம். மனதில் வருத்தம் இருந்தாலும் வேறு வழி இல்லை. இப்போது மகன் அங்கே போகலாம், எங்கே போகலாம் என்று சொல்லிக் கொண்டே இருப்பான். ஆனால் இரண்டு நாளைக்கு முன் தான் எங்கே அழைத்துக் கொண்டு போவான் என்பதே தெரிந்து கொள்ள முடியும். பிளான் பண்ணி எல்லாம் எதுவும் செய்வது கிடையாது. எங்கே அழைத்துப் போகிறானோ அங்கே நானும் சந்தோஷமாக கிளம்பிச் செல்வேன்.

உங்கள் மின்சாதனங்கள் எதனால் அடிக்கடி சூடாகிறது? அதன் காரணங்கள் என்ன?அதை எப்படி தடுக்கலாம்?

தீர்வு காணுங்கள் வாழ்வு தித்திக்கும்!

IPL (2024) Highlights - இதுவரை நடந்ததும், இனி நடக்கக்கூடியதும்!

ஆரஞ்சு பழத்தோல் டீயிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

ஐநாவின் நிரந்தர உறுப்பினராகிறதா பாலஸ்தீனம்? நாளை வாக்கெடுப்பு!

SCROLL FOR NEXT