ஓசூர் அருகே சுமார் பத்து கி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தொரப்பள்ளி என்னும் கிராமம். இது இந்திய கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த சி. ராஜகோபாலாச் சாரியார் பிறந்த ஊர். இங்கு இவரது இல்லம், 'ராஜாஜி நினைவு இல்லம் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியில் இருந்து பத்து கி. மீட்டர் தொலைவில் உள்ளது கிருஷ்ணகிரி அணை. 1955ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த அணை கட்டப் பட்டுள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெற்று வருகின்றன. பூங்கா அமைக்கப்பட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவது வழக்கம்
கீழவார்ப்பள்ளி அணை 1995ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஓசூரிலிருந்து பத்து கி. மீட்டர் தொலைவில் உள்ள இந்த அணை, கர்நாடக மாநில எல்லையில் இருந்து எட்டு கி. மீட்டர் தூரத்தில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல உத்தங்கரை அருகே பம்பார் அணை ஒன்றும் உள்ளது.
ஓசூரில் இருந்து 25 கி. மீட்டர் தொலைவில் உள்ளது தளி என்னும் இடம். குன்றுகள் நிறைந்த இந்தப் பகுதி குட்டி இங்கிலாந்து என்று அன்புடன் அழைக்கப்படுகிறது. கர்நாடக எல்லையையொட்டி அமைந்துள்ள இந்த இடம் அற்புதமான இயற்கைச் சூழலால் பொதியப் பட்டுள்ளதால், இங்குள்ள தட்பவெப்ப நிலை படு அற்புதமாக இருந்து அசத்துகிறது.
ராயகோட்டாவில் உள்ள சிறிய குன்று ஒன்றில் கட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய கோட்டை மைசூரில் நடைபெற்ற போர்களுக்குப் பிறகு இந்தக் கோட்டையை போர்த் தந்திரம் செய்வதற்கான இடமாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
1861ஆம் ஆண்டு வரை பிரிட்டீஷ் படை இங்கு நிலை கொண்டிருந்தது. தற்போது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக விளங்குகிறது இந்த பிரமிக்கத்தக்க கோட்டை ஓசூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.