அக்கல்கோட் சமர்த் மஹராஜ்
அக்கல்கோட் சமர்த் மஹராஜ் 
தீபம்

அமைதியை அருளும் அக்கல்கோட் சமர்த் மஹராஜ்!

வி.ரத்தினா

கீதையில் கண்ணன் “தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் என்னை நானே அவதரித்துக் கொள்கிறேன். நல்லோரைக் காத்து தீயோரை அழிக்க யுகந்தோறும் அவதரிக்கிறேன்” எனக் கூறுகிறார். பகவானின் அவதார நோக்கத்தின் சார்பாக ரிஷிகளும் ஞானிகளும் இப்பூவுலகில் தக்கதருணத்தில் தோன்றி மக்களை நல்வழி படுத்துகிறார்கள். அவ்வகையில் அக்கல்கோட் சமர்த் மஹராஜ் மக்களின் நலனுக்காகவும் அவர்களின் ஆன்மிக உயர்வுக்காகவும் இவ்வுலகில் அவதரித்து வழி நடத்தியவர்..

தத்தாத்ரேயரின் மூன்றாவது அவதாரமாக பக்தர்களால் கருதப்படும் சுவாமி சமர்த்தர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான்.  பல இடங்களுக்கு நீண்ட தூரம் பயணித்த பின்  அக்கல்கோட் என்ற இடத்திற்கு வந்தவர் இருபத்திரண்டு ஆண்டுகள் அங்கு தங்கி அங்கேயே சமாதி அடைந்தார். அக்கல்கோட் சுவாமி சமர்த்தர் மஹராஜின் சமாதியுடன் கூடிய கோயில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் சோலாபூருக்கு அருகிலுள்ள அக்கல்கோட் என்ற இடத்தில்  அமைந்துள்ளது. இக்கோயில் சோலாபூரிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது. சுவாமி சமர்த் 1856 ஆம் ஆண்டில் சிந்தோபந்த் டோலி என்பவரின் அழைப்பை ஏற்று அக்கல்கோட்டுக்கு வந்து பின்னர் நகரத்தின் புறநகரில் தங்கினார். பிறகு தனது சீடரான சோழப்பாவின் இல்லத்தில் வசித்து வந்தார், அங்கு தான் அவரது சன்னதி தற்போது உள்ளது.

ஷீரடி சாயிபாபாபோலவே, சமர்த்த சுவாமியின் தோற்றம் பற்றி எவராலும் அறியமுடியவில்லை.. ஒரு முறை ஒரு சீடர் சுவாமியின் பிறப்பைப் பற்றி  கேள்வி கேட்ட போது;  அவர் ஒரு ஆலமரத்திலிருந்து  தோன்றியதாகக் கூறினார். மற்றொரு சந்தர்ப்பத்தில், சுவாமி தனது கடைசி பெயர் ந்ருசிம்ம பான் என்று கூறினார் ஆனால் சுவாமி சமர்த்தரின் பக்தர்கள் அவரை ஸ்ரீ தத்தாத்ரேயரின் இரண்டாவது அவதாரமாகக்  கருதப்படும் கங்காபூர் (கர்நாடகா) ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி மகராஜின் அவதாரமாகக் கருதுகின்றனர்.

ஸ்ரீ தத்தாத்ரேயர்

தத்தாத்ரேயரின் முந்தைய அவதாரமாக அறியப்பட்ட ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி (1378-1459), மக்களை ஆன்மீக ரீதியாக உயர்த்தினார். பின்னர் தவம் செய்வதற்க்காக இமயமலைக்குச் சென்று அங்கேயே சமாதி அடைந்தார். அவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் சமாதியில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர் மீது ஒரு பெரிய  புற்று வளர்ந்ததாகவும், அதில் அவர்  மறைந்து போனதாகவும் புராணக்கதை கூறுகிறது. ஒரு நாள், தற்செயலாக, ஒரு விறகு வெட்டியின் கோடரி  புற்றைச் சுற்றி வளர்ந்திருந்த புதர்களில் விழுந்தது. கோடரியின் மேல் ரத்தக் கறை இருந்ததைக் கண்டு  அதிர்ச்சியடைந்த. விறகு வெட்டி  புற்றை அகற்றியபோது   தியானத்தில் இருந்த ஒரு யோகியைக் கண்டார்.  மெதுவாக கண்களைத் திறந்த யோகி தனது பணியை மீண்டும் தொடங்க உலகில் தான் மீண்டும் தோன்றுவது தெய்வீக விருப்பம் என்று கூறினார். இந்த யோகிதான், ஸ்வாமி சமர்த் என்று அறியப்பட்டார். கோடரி காயத்தின் அடையாளம் ஸ்ரீ சுவாமி சமர்த்தரின் தொடையில் இருந்தது.

ஸ்வாமி மகராஜ் தெய்வீகமான மற்றும் பிரகாசமான அழகுடன். முழங்கால் வரை நீண்டிருந்த நீண்ட கைகள் அமையப் பெற்றிருந்தார். ஸ்ரீகுரு ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி தனது பக்தர்களுக்கு கனவுகளிலும், தரிசனங்களிலும் தோன்றி, தான் அக்கல்கோட்டிற்கு குடிபெயர்ந்துள்ளதால், சுவாமி சமர்த்திடம் செல்லுமாறும், அங்கு நேரில் சென்று தரிசிக்குமாறும் கேட்டுக் கொண்ட எண்ணற்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. சமர்த்தர்  எப்போதும் தனது பக்தர்கள் மீது அன்பைப் பொழிந்தார். எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார். எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், அவர் தன்னில் லயித்திருந்தார்.

மஹராஜின் சமாதியுடன் கூடிய கோயில்

ஏழைகளுக்கு உதவி செய்ததுடன், நோயுற்றவர்களைக் குணப்படுத்தியது, இறந்த ஒருவருக்கு மீண்டும் உயிர் கொடுத்த நிகழ்வு என  அற்புதங்கள் பல புரிந்துள்ளார்.

சமர்த் சுவாமி சமாதியான சமயம் அவரின் ஆத்மாவின் ஒரு  பகுதி அவர் அமர்ந்திருந்த ஆலமரத்துடன் ஒன்றிணைந்ததாகவும், ( இது இப்போது அவரது சமாதியாக வணங்கப்படுகிறது), மற்றொன்று ஷீரடி சாயிபாபாவுடன் ஒன்றிணைந்ததாகவும் கூறப்படுகிறது. அக்கல்கோட் மகராஜின் ரூபமே ஷீரடி சாயி பாபா என பக்தர்கள் உணர்ந்ததை சாயி சத்சரிதத்திலும் (அத்தியாயம் 26) குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.

அக்கல்கோட் கோயிலில் பக்தர்களின் வருகை சாதாரண நாட்களில் கூட அதிகமாகக் காணப்படுகிறது. சமாதியின் அருகே சென்ற போது தெய்வீக அதிர்வலையை எங்களால் உணர முடிந்தது. சமர்த் மஹராஜ் சமாதியடைந்த பின்னும் தன்னிடம் வரும் பக்தர்களின் கஷ்டங்கள், மன பயங்களைப் போக்கி அவர்கள் வாழ்க்கையில் அமைதியை அருளிக் கொண்டிருக்கிறார். “பயப்படாதீர்கள் நான் உங்களுடனேயே இருக்கிறேன்” என்பது அவர் அருள் மொழி. வாழ்வில் ஒரு முறையாவது இந்தப் புண்ணிய தலத்திற்கு சென்று வருவது நாம் பெறும் பெரும் பேறாகும்.

‘மாஸ்க்’ படத்தில் இணையும் கவின் மற்றும் ஆண்ட்ரியா!

வரலாற்றுக் களஞ்சியங்களாகத் திகழும் அருங்காட்சியகங்கள்!

வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

SCROLL FOR NEXT