Kubera For 12 Rasi Image Credits: Exploring My Life
தீபம்

12 ராசிக்கும் 12 குபேரர்கள் இருக்கும் கோவில் எது தெரியுமா?

நான்சி மலர்

குபேரனுக்கு வைஷ்ராவணா என்ற பெயரும் இருந்தது. பிரம்மதேவனின் மகனான புனஸ்திய முனிவரின் மூத்த மனைவிக்கு மகனாக பிறந்தார். ராவணனுக்கு முன்பு இலங்கையை இவரே ஆட்சி புரிந்தார். பிறகு ராவணன் குபேரனிடம் ஆட்சியை அபகரித்து கொண்டார். அதன் பிறகு தீவிர சிவபக்தரான குபேரன் நிறைய சிவஸ்தலங்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்தார். கடைசியாக காசிக்கு சென்று சிவனை 800 ஆண்டுகள் மனமுறுகி பிராத்தித்தார். இவரின் தவத்தை பார்த்து மெய்சிலிர்த்த சிவனும் பார்வதியும் அவருக்கு தரிசனம் புரிந்து அழகாபுரி என்ற பட்டிணத்தை உருவாக்கி உலகில் உள்ள நிதிகளுக்கு எல்லாம் இனி நீயே அதிபதின்னு சொல்லி சிவன் வரமளித்தார். வடக்கு திசைக்கு அதிபதியாக்கி அஸ்டதிக்பாலர்களுள் இவரை ஒருவராக நியமித்தார். இப்படி லக்ஷ்மி தேவிக்கு துணையாக குபேரனை எம்பெருமானே அவருடைய பக்தியை மெச்சி செல்வசெழிப்பு மிக்க குபேரனாக்கினார்.

நம் வாழ்க்கையில் குபேர தரிசனம் கிடைப்பதென்பது மிகவும் சிறப்பானதாகும். அத்தகைய குபேரன் 12 ராசிகளுக்கும் 12 குபேரர்களாக இத்திருதலத்தில் தரிசனம் செய்வது என்பது மிகவும் சிறப்பான விஷயமாக உள்ளது. திருச்சியிலிருந்து 44 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் செட்டிக்குளம் என்னும் ஊரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில் முனிவர்களும், ரிஷிகளும் தவம் செய்யும் கடம்பவனமாக இந்த இடம் இருந்துள்ளது. அப்போது ஒருநாள் வணிகர் ஒருவர் தன் வணிகத்தை முடித்துவிட்டு அந்த காட்டு வழியாக வந்துள்ளார். அப்போது இருட்டாகி விடவே ஒரு மரத்தின் கிளை மீது ஏறி ஓய்வெடுக்கிறார்.

குபேர தரிசனம்

அப்போது இவர் முன்பு ஒரு ஒளிப்பிழம்பு தோன்றுகிறது. அந்த ஒளிப்பிழம்பின் நடுவினிலே சிவலிங்கம் இருக்கிறது. அதை தேவர்களும், முனிவர்களும் வணங்குகிறார்கள். இதை பார்த்த வணிகரும் பஞ்சாக்ஷரம் ஓதி அந்த லிங்கத்தை வணங்குகிறார். இவையெல்லாம் சில வினாடிகளிலேயே நடந்து முடிந்து விட்டது. திரும்பவும் காடு இருட்டாகி விட அந்த வணிகர் விடியும் வரை காத்திருந்தார். விடிந்ததும் அந்த பகுதியை ஆண்ட பராந்தக சோழனிடம் விஷயத்தை சொல்கிறார். அங்கே குலசேகரை பாண்டியன் அந்த மன்னனின் அரண்மனைக்கு விருந்தாளியாக வந்திருந்தார். இதை கேள்விப்பட்டு இருவருமே அந்த லிங்கம் தோன்றிய இடத்திற்கு விரைந்து வந்து தேடிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற வயதான முதியவர் கம்பிற்கு பதில் கரும்பை கையில் ஊன்றி கொண்டிருந்தார். அவர் மன்னருக்கு லிங்கம் எங்கேயுள்ளது என்பதை காட்டுகிறார். திரும்பி பார்த்தால் ஜோதி ரூபமாக மலைக்கு மேல் முருகப்பெருமானாக காட்சியளித்து மறைந்து விடுகிறார். எனவே மலைமேல் முருகனுக்கு கோவிலும், லிங்கம் கிடைத்த இடத்தில் சிவபெருமானுக்கு கோவிலும் கட்ட வேண்டும் என்று மன்னர் முடிவெடுத்து இந்த இரு கோவில்களையும் கட்டுகிறார்.

இந்த கோவிலின் சிறப்பு என்று சொல்ல வேண்டும் என்றால் நிறைய அழகான சிற்ப வேலைப்பாடுகளை கொண்டிருக்கும். இங்கே 12 தூண்களிலும் 12 குபேரன் அவருடைய மீன் வாகனத்தில் அமர்ந்து ஒவ்வொரு கோலத்தில் காட்சித்தருகிறார். அதுமட்டுமில்லாமல் ராஜகோபுரத்திலும் ஒரு குபேரன் இருக்கிறார். அமாவாசை, அக்ஷயதிரிதி போன்ற நாட்களில் இந்த 13 குபேரர்களுக்கும் விஷேச பூஜைகள் நடைபெறுகிறது.

கடன் பிரச்னை தீர வேண்டும், குடும்பத்தில் செல்வ செழிப்பு வேண்டும் என்று நினைப்போர் சுக்கிர ஓரையில் தங்களுடைய ராசிக்கான குபேரரை வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. வியாழக்கிழமைகளில் வரும் குபேரகாலத்திலும் இக்கோவிலில் தம்முடைய ராசிக்கான குபேரனுக்கு வஸ்திரம் சாத்தி, நெய்வைத்தியம் படைத்து வேண்டிக்கொண்டால் தொழில் மேம்படும்.

இக்கோவிலில் செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் விஷேசமானதாகும். லிங்கத்தின் மீது சூரிய ஒளிப்படும் போது அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை குழந்தை இல்லாத பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதை அருந்தினால் சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT