Navarathiri 
தீபம்

ஆறாம் நாள் - மனமகிழ்ந்து அருள்வாள் மங்கல மஹாலக்ஷ்மி!

பிரபு சங்கர்

துர்வாச மகரிஷி கோபத்துக்குப் பேர் போனவர். எல்லோரும், தனக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்ப்பார்.  

அவர் ஒரு சமயம் தேவேந்திரனைக் காணச் சென்றார். தேவேந்திரன், தேவர்களுக்கெல்லாம் தலைவன். அவனுடைய கட்டளைப்படிதான் வருணன் மழை பொழிவான், அக்னி அனல் பரத்துவான், வாயு காற்று வீசுவான். இவை மட்டுமல்ல, கேட்டதை வழங்கக்கூடிய கற்பக மரமும், காமதேனு பசுவும் அவனுடைய பொக்கிஷங்களாக இந்திர லோகத்தில் செல்வம் கொழிக்கச் செய்தன. எங்குமே பார்த்திருக்க முடியாத வெள்ளை யானையாகிய ஐராவதம் அவனுடைய வாகனமாக விளங்கியது. ரம்பை, மேனகை, ஊர்வசி போன்ற பேரழகிகள் அவனுடைய ராஜசபையில் நடனமாடி அனைவரையும் மகிழ்விப்பார்கள். தேவர்களுக்கெல்லாம் குருவான பிரஹஸ்பதி அவனுடைய அரசவையில் பிரதான பீடத்தில் அமர்ந்து அவனுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார். 

ஒரு சமயம், துர்வாசர் அவனுடைய சபைக்கு வந்து சேர்ந்தார். மஹாவிஷ்ணு தனக்களித்த பாரிஜாத மாலையை உடன் கொண்டு வந்திருந்தார் அவர். ஒரு முனிவர் என்ற வகையில் அது தன்னிடம் இருப்பதைவிட தேவர்களுக்கெல்லாம் அரசனான இந்திரனிடம் இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு.

இந்திரன் அரண்மனை பூந்தோட்டத்தில் இருப்பதாகத் அவருக்குத் தகவல் கிடைத்தது. உடனே தன் உயர்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் அவனைப் பார்க்க அங்கே போனார். ஆனால் அவனோ ஊர்வசியின் நடனத்தில் லயித்திருந்தான். கிறக்கத்தில் இருந்த அவனிடம் மிகுந்த ஆவலுடன் பாரிஜாத மாலையை அளித்தார் முனிவர். ஆனால் அவனோ வெகு அலட்சியமாக அதைத் தூக்கி, பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் ஐராவதம் யானையின் தலைமீது போட்டான். யானையோ அவனைவிட அலட்சியம் கொண்டு அதை தலையைச் சிலுப்பி உதறி கீழே எறிந்து தன் காலால் தேய்த்து நசுக்கியது. 

அவ்வளவுதான் துர்வாசருக்குக் கோபம் பொங்கியது. வெகுண்ட அவர், ‘நீ உன் இந்திரப் பதவியை இழப்பாய். உன்னுடைய லோகம் இனி அசுரர் வசமாகும். உன்னிடம் இருக்கும் அனைத்து ஐஸ்வர்யமும் உன்னை விட்டுப் போய்விடும், போ‘ என்று சாபமிட்டுவிட்டார். 

அடுத்த கணமே இந்திரன் தனியனானான். சுற்றுச் சூழல் எல்லாம் ஒளி இழந்து கருமையாயின. எங்கெங்கு நோக்கினும் அரக்கர்களின் அட்டகாசம் ஆரம்பமாகிவிட்டது. உடனே தன் தவறை உணர்ந்தான் இந்திரன். குருவான பிரஹஸ்பதியைச் சரணடைந்து நடந்தன எல்லாவற்றையும் சொல்லி அழுதான்.

குருவும், ‘நீ மிகப் பெரிய பாவம் செய்துவிட்டாய். துர்வாசரை மட்டுமல்ல, மஹாவிஷ்ணுவையும் அவமதித்து விட்டாய். உன்னை என் சீடன் என்று சொல்லிக் கொள்வதே எனக்குக் கேவலம். ஆனாலும் தேவர்களின் எதிர்காலத்தைக் கருதி உனக்குப் பரிகாரம் சொல்ல வேண்டியது என் கடமையாகவும் ஆகிவிட்டது,‘ என்று மனம் வெதும்பிச் சொன்னார். பிறகு, மஹாலக்ஷ்மி பூஜையையும், நவராத்திரி விரத மகிமையையும் அவனுக்கு விளக்கி அவற்றைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். 

‘‘இந்திரா, இந்த பிரபஞ்சத்தையே நிர்வகிப்பவள் பராசக்தி. அவள் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்றும் வேறு பல சக்திகளாகவும் துதிக்கப்படுகிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் ஆகியோருக்கே சக்தியாக அருள்கிறாள். பராசக்தியின் மூன்று பிரதான அம்சங்களை நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருந்து அனுசரிப்பாயாக.‘‘ என்றார்.

அப்படிச் செய்தால், ஒருவர் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கள் தீரும், சாபத்தாலோ, நல்லவர் கோபத்தாலோ அல்லது பிறரால் ஏமாற்றப்பட்டோ இழந்துவிட்ட செல்வங்களையெல்லாம் மீண்டும் பெறலாம் என்பதை இந்திரன் உணர்ந்து கொண்டான். பிறழ்ன்ற அவனுடைய புத்தி தெளிவாகியது. நல்லறிவு ஒளிர்ந்தது. 

குரு அறிவுறுத்தியபடி இந்திரன் வழிபட, அம்பிகை அது கண்டு மகிழ்ந்து துர்வாசரை சமாதானப்படுத்தி, இந்திரனுக்கு மன்னிப்பு வழங்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டாள். முனிவரும் அப்படியே செய்ய, இந்திரன், தான் இழந்ததையெல்லாம் திரும்பப் பெற்றான். 

நவராத்திரி வைபவத்தில் ஆறாம் நாளான இன்று மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லி, பாரிஜாதம், விபூதி பச்சை, செம்பருத்தி, சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்யலாம். தேங்காய் சாதம், தேங்காய் பால் பாயாசம், கடலைப் பருப்பு சுண்டல் தயாரித்து நிவேதனம் செய்யலாம். 

இந்த ஸ்லோகத்தையும் சொல்லலாம்:

நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரி

ஸர்வபாபஹர தேவி மஹாலமி நமோஸ்துதே

பொதுப்பொருள்:

திருமாலோடு கருடனின் மேல் ஆரோகணித்துவரும் மங்கல நாயகியே, மஹலக்ஷ்மியே நமஸ்காரம். அனைத்துப் பாவங்களையும் அழித்து எல்லா நற்பலன்களையும் வழங்கும் மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

இன்றைய வழிபாட்டால் இழந்த பொருட்கள் எல்லாம் திரும்பக் கிடைக்கும். தகுதிக்கேற்ற, நல் முயற்சிக்கேற்ற வளமான வாழ்க்கை அமையும். 

இது என்னது, வித்தியாசமான ரெசிபியா இருக்கே? ஆனா செம டேஸ்ட்! 

இந்த மூலிகையைப் பயன்படுத்தினால் உங்க முடியின் ஆரோக்கியம் வேற லெவலுக்கு மாறும்! 

அவசரத்துக்குக் கைக்கொடுக்கும் சில எளிய பாட்டி வைத்தியக் குறிப்புகள்!

உங்களை நாய் கடித்துவிட்டால் பதற வேண்டாம்… இவற்றை சரியாக செய்தாலே போதும்! 

தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

SCROLL FOR NEXT