மாணவர்களின் நலனுக்காகவும், கல்வியின் நலனுக்காகவும் பல்வேறு சாதனைகளை புரிந்தவர்களை தேடி கண்டுபிடித்து ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழாவின் போது நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர் பணி ஓர் அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பதற்கு ஏற்ப அதனை ஒரு வேலையாக மட்டும் பார்க்காமல், ஒரு சமூகத்தின் எழுச்சியாக அதனை கருதி மாணவர்களின் நலனில் அக்கறை காட்டி அவர்களை உயர்ந்த இடங்களுக்கு கொண்டு செல்லும் அற்புதமான பணிகளை செய்பவர்கள் தான் ஆசிரியர்கள்.
நாம் இங்கு ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் என் மனதை தொட்ட முதல் ஆசிரியரைப் பற்றி இப்பதிவில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பொதுவாக ஆசிரியர் என்றாலே நமக்கு கல்வி கற்றுத் தருபவர்கள் என்பதுதான் நமது அனைவரின் புரிதலாக இருக்கிறது. ஆனால் உண்மையில் ஆசிரியர் என்பவர் கல்வியை கற்றுத் தருபவர் மட்டுமல்ல, அதையும் தாண்டி ஒவ்வொரு மனிதனும் வாழ்வியலை முழுமையாக வாழ கற்று தருபவர்.
ஒரு நாள் சென்னையில் வருடம் தோறும் நடக்கும் புத்தக கண்காட்சிக்காக நண்பர்களுடன் சென்றிருந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புத்தகங்களின் தேவை இருந்தது. ஒரு 5 வரிசை வரை ஒன்றாக பார்த்து வந்த அவர்கள் அதன் பின் ஆளுக்கு ஒரு வரிசையை தேடி நகர்ந்துவிட்டார்கள். நடந்து நடந்து கால்கள் வலிக்கவே, ஒரு இடத்தில் ஓரமாய் உட்கார்ந்து கைக்கு கிடைத்த புத்தகங்களை பிரிக்க ஆரம்பித்தேன். 4 புத்தகங்களை தாண்டி 5 வதாக ஒரு புத்தகம் கைக்கு வந்தது. மிகவும் சிறிய புத்தகம். அதன் தலைப்பு முதல் ஆசிரியர் என்று போடப்பட்டிருந்தது. யாரோ ஒருவர் தன் வாழ்க்கைக்கு மிகவும் உந்து சக்தியாக இருந்த தனது முதல் ஆசிரியரை பற்றி எழுதி இருக்கிறார் என்று நினைத்து அந்த புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன். அந்த புத்தகம் வேறொரு மொழியிலிருந்து நம் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகம். அதன் கதையில் வரும் பெயர்கள் கூட நம் பழக்கத்தில் இதுவரை கேட்காத பெயர்களாகவே இருந்தது. மெதுவாக அந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டி படிக்க ஆரம்பித்தேன்.
அதில் ஒரு ஆசிரியர் வருகிறார், அவரை ஆசிரியர் என்று கூட சொல்ல முடியாது. அவருக்கு எழுதப் படிக்க மட்டுமே தெரிந்திருக்கிறது. படிப்பின் வாசமே அறியாத கிராமத்துக்கு கல்வி கற்றுத் தருவதற்காக அந்த ஆசிரியர் அங்கு வருகிறார். அங்கு பல்வேறு குழந்தைகளை சந்திக்கும் அவர், சித்தியின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு சிறுமியையும் சந்திக்கிறார். ஒரு பாழடைந்து போன குதிரை கொட்டிலை பள்ளிக்கூடம் ஆக்கி, அங்குள்ள ஊர் பெரியவர்களிடம் பேசி அந்த குழந்தைகளை எல்லாம் அதில் பாடம் கற்றுத்தர தொடங்குகிறார். தாங்கள் வாழும் உலகத்தை தாண்டி புதிதாய் இன்னொரு உலகத்தை காணும் முயற்சியில் அங்குள்ள குழந்தைகள் நாளின் ஒவ்வொரு பொழுதையும் மிக இனிமையாக கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பொழுது ஒரு நாள் எதிர்பாராத விதமாக சித்தி கொடுமையில் சிக்கித் தவிக்கும் அந்த குழந்தையை அவளுடைய சித்தி நடுத்தர வயது உடைய ஒரு இடையனுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுகிறாள். ஆசிரியர் எவ்வளவோ முயன்றும் அவரால் ஒன்றும் முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது. தன் வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைத்த அந்த சிறுமி, அந்த இரவில் மிகவும் கொடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாள். இந்த உலகம் இவ்வளவு கொடூரமானதா என, துன்பத்தின் எல்லைக்கே சென்று சுயநினைவற்று இருக்கும் நிலையில் அங்கு வரும் ஆசிரியர் அந்தச் சிறுமியை காப்பாற்றி தன்னுடைய குதிரையில் அழைத்துச் சென்று விடுகிறார்.
செல்லும் வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஆற்றில் அந்த சிறுமியை இறக்கி விட்டு, 'போய் குளித்துவிட்டு வா, உன் உடலில் உள்ள அழுக்கோடு, மனதில் உள்ள அழுக்கையும் சேர்த்து சுத்தம் செய்துவிட்டு வா' என்று சொல்லி அந்தச் சிறுமியை அனுப்பி வைக்கிறார். வாழ்க்கையின் மறக்க முடியாத மிகப் பெரிய கொடூரத்தை, ஒரே ஒரு குளியல் மூலம் மனதில் இருந்தும் உடலில் இருந்தும் முழுமையாக அகற்றி விடுகிறார் அந்த ஆசிரியர். பின் அந்த சிறுமியை அழைத்துச் சென்று ஒரு தொடர் வண்டியில் ஏற்றி விட்டு தனக்குத் தெரிந்த வேறு ஒரு பள்ளியில் படிக்க வைக்க முயற்சி எடுக்கிறார். நன்கு படித்த அந்த சிறுமி பின் நாட்களில் ஒரு உயர் கல்வி அதிகாரியாக மாறி, தன்னுடைய சொந்த கிராமத்திற்கே சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறாள். மனிதர்களிடம் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காத அந்த ஆசிரியர், அந்த வயதான காலத்திலும் அங்கே தபால்களை கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்.
இதுதான் நான் படித்த அந்த புத்தகத்தின் கதை. நம் வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை கடந்து வந்திருப்போம், எத்தனையோ படைப்புகளை காதால் கேட்டும், கண்களால் பார்த்தும் கடந்து வந்திருப்போம். ஆனால் அவை அனைத்தும் நம் மனதில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை செய்து விடுவதில்லை. அப்படி நமக்குள் ஒரு மிகப்பெரிய ஒரு பாதிப்பையும், நம்பிக்கையோ ஏற்படுத்தும் மனிதர்களும் அவர்களின் படைப்புகளும் அவ்வளவு எளிதில் நம் மனதை விட்டு நீங்குவதும் இல்லை.
இந்த புத்தகத்தை படித்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் தூக்கமே வரவில்லை. ஒரு மனிதன் மற்றொரு சக மனிதனிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கைக்காக அக்கறை காட்டும் அந்த அன்பும் பாசமும் மனிதர்கள் மேல் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையும் அன்பையும் வரவைத்தது. அதேசமயம் நாம் நம்முடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற ஒரு கேள்வியும் நெடுநாட்கள் தூக்கத்தை கெடுத்தது.
ஆசிரியர் என்பவர் நிச்சயம் கல்வி கற்றுத் தருபவராகத் தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, நம்முடைய வாழ்க்கையில் யார் ஒருவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நம் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக நிற்கிறார்களோ அவர்கள் தான் ஒவ்வொரு மனிதனும் சந்தித்த முதல் ஆசிரியராக இருப்பார்கள். அவர்கள் எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம், பெற்ற தந்தையோ, தாயோ, இல்லை உண்மையிலேயே பள்ளிக்கூடங்களில் பார்க்கும் ஆசிரியராகவோ கூட இருக்கலாம்.
ஆசிரியர் என்பவர் யார்? என்பதை முழுமையாக உணர்ந்து கொண்ட தருணமும் அன்றுதான், ஒரு மனிதனுக்கு சக மனிதனின் மேல் இருக்கும் பிரிக்க முடியாத ஒரு பிணைப்பை உணர்ந்து கொண்டதும் அன்றுதான்!
மனித வாழ்வில் மிகப்பெரிய மகத்துவத்தை ஒரு கதையால் விளக்கிய அந்த ஆசிரியரை தான் இந்த ஆசிரியர் தினத்தில் நினைவு கூற முடிகிறது. உங்களுக்கும் ஒரு வேளை வாய்ப்பு கிடைத்தால் முதல் ஆசிரியர் என்ற இந்த சிறிய புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்!
புத்தகத்தின் பெயர் -முதல் ஆசிரியர் எழுத்தாளர் - சிங்கிஸ் ஐத்மாதவ்.