ஓவியம்; லலிதா 
கல்கி

சிறுகதை: முகம் தெரியாத முகம்!

கல்கி டெஸ்க்

-சத்தியப்பிரியன்

று மாதத்திற்கு ஒருமுறை எங்கள் கிளையில் டிபார்ட்மென்ட் மாற்றம் இருக்கும். இந்த முறை நான் லீவ் - ரிஸர்வ் அதாவது யார், யார் லீவில் போயிருந்தாலும் அவர்கள் வேலையைச் செய்வது. தண்ட டிபார்ட்மெண்ட். ஒரு நாள் நிம்மதியாக வேலை பார்த்தோம் என்பது முடியாது.

பாஸ்கர் வருவானா, மாட்டானா என்ற குழப்பத்தில் என்னை அவனுடைய கரண்ட் - அக்கவுண்ட் செக்ஷனில் உட்காரச் சொன்னார்கள். பாஸ்-புக் பதிவு பண்ணி, ஒன்றிரண்டு செக்குகளை பாஸ் பண்ணி, க்ரெடிட் ஸ்லிப்புகளை போஸ்ட் பண்ண மணி பதினொன்று ஆகிவிட்டது. பதினொன்று பத்துக்கு அவனுக்குண்டான புயல் வேகத்துடன் பாஸ்கர் நுழைந்தான்.

'எந்திருங்க மேடம்" என்றான்.

"போர்" - சலித்துக்கொண்டே எழுந்தேன்.

"வேற யாரும் லீவில்லியா?"

''பார்த்துச் சொல்லுங்களேன். ஏன் லேட்?" என்றேன்.

''மானேஜர்கூட என்னைக் கேட்க மாட்டார்."

"நான் கேட்கிறேன். ஏன் லேட்?"

"என் ஃப்ரெண்ட் ஒருத்தன் செத்துப் போய்ட்டான்."

"எப்போ?"

"நேத்து."

"எப்படி?"

''ஆக்ஸிடெண்ட்.''

''எங்கே?"

''மகுடஞ்சாவடி தாண்டி காகாபாளயம்கிட்ட ஒரு கர்வ் ஒண்ணு இருக்கும். என் ஃப்ரெண்ட் பேர் பிரசாத். பரோபகாரின்னு சொல்லுவாங்களே அந்தப் பெயர் இவனுக்கு முற்றிலும் பொருந்தும். அந்த முகம் பாருங்க எப்பவும் சிரிச்சுக்கிட்டு... எரிச்சல், பொறுமையின்மை எதுவும் இருக்காது. பார்த்தாலே சிநேகம் பண்ணிக்கணும்னு ஆசை வரும். வயசானவங்க, கிழவி, குமரி, எல்கேஜி பையன், ப்ளஸ் டூ பையன்னு சகல வயசிலும் நூத்துக்கணக்கானவங்க வீனஸ் ப்ரசாத்தா என் ஃப்ரண்டாச்சேன்னு சொல்லுவாங்க, ராஜேஸ்வரி."

"அது என்ன வீனஸ்?"

''மரவனேரியில் வீனஸ் டைப் - ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஒண்ணு நடத்திட்டு வர்றான். அவங்க அப்பாவோட... எதுல நிறுத்தினேன்?"

''காகாபாளையம்."

"யெஸ் யெஸ். ஒரு டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ்மேனும், இவனும் சரக்கு வாங்க ஈரோடு போய்ட்டு ஜீப்பில் ரிடன் வந்திருக்காங்க.''

''ப்ரசாத் எதுக்கு டெக்ஸ்டைல்ஸ் பிஸினஸ் மேனோட?"

''சொன்னேனே. யாருக்காவது உதவின்னா இவன் அங்கே பிரசன்னமாயிடுவான். மணத் தக்காளி வத்தல் வாங்கித் தருவதிலிருந்து, பூனாக்காரனுக்கு திப்பி மாவு லோடு அனுப்புவது வரையில் எல்லாத்துக்கும் ப்ரசாத்தான். ஏடிஸி பஸ் ஒண்ணு முன்னாடி போயிட்டிருந்திருக்கு. மகுடஞ்சாவடியிலிருந்தே அதை ஓவர்டேக் பண்ண முடியலை. காகாபாளையம் பக்கத்தில் வெறியோட ஓவர்டேக் பண்றப்போ மழையில் பாதி ரோட்டை அடைச்சிட்டு புளிய மரம் ஒண்ணு"

''மை காட்!"

"எட்டு குட்டிகரணம் போட்டதாம் மேடம் ஜீப். சிரிச்சுட்டே இருக்கும் முகம்னேனே. மேல்தாடை, கீழ்தாடை ரெண்டும் நொறுங்கிப் போய் விகாரமா போயிடுச்சு. வலது தொடை எலும்பு நொறுங்கி கோரமா செத்துப் போய்ட்டான்.''

சொல்லி விட்டு பாஸ்கர் மேஜையில் முகம் கவிழ்த்தான்.

"ஈஸி ஈஸி பாஸ்கர்."

''ஜெம் ஆஃப் எ பெர்ஸன்."

"கல்யாணம் ஆயிடுச்சா?”

"இல்லை. இருபத்தியெட்டு வயசுதான் ராஜேஸ்வரி. என்னை விட ஒரு வயசு பெரியவன்."

"ஒரே பையனா?"

'மூணு தங்கைகள். ரெண்டு பேருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான்."

ஸெக்ஷன் ஆஃபீஸர் லேசாகத் தொண்டையைச் செருமினார். பாதியில் தொங்கும் பழைய குப்பைகளைக் கிளறப் போய் விட்டேன்.

மாலையில் அகிலாண்டம் மாமியிடமிருந்து ஃபோன் வரும் என்று காத்திருந்தேன்.

எனக்கு முதல் அப்பாயின்ட்மெண்ட் – அதாவது நான் பி.எஸ்ஸி., முடித்துவிட்டு, சொந்த ஊரான கடலூரில் எல்லா வேலைக்கும் எழுதிப் போட்டு, நியூ சினிமாவிலும், ரமேஷிலும் மணிரத்னம் படம் பார்த்து முடியவில்லை - இந்த வங்கியில் சேலம் கிளையில் வேலை ஆனது. அப்பா தேடிப் பிடித்து உறவுக்காரர்களைப் பிடித்ததுதான் அகிலாண்டம் மாமி. அப்பாவின் மூத்த சகோதரரின் மச்சினன் மாமா பெண் என்பதில் குழப்பம்தான் மிஞ்சும். அகிலாண்டம் மாமி அரிமா சங்க மகளிர் அமைப்பின் வடக்குப் பிரிவின் தலைவி. ராசாராம் நகரில் பங்களா. கணவன் ராஜ கோபால் கிரிமினல் லாயர். மாமியின் ஏற்பாடில்தான் எனக்கு செர்ரி ரோட்டில் விமன்ஸ் ஹாஸ்டலில் இடம் கிடைத்தது.

மாமி வரலக்ஷ்மி விரதம் சரடு கட்டிக்க வா என்றிருந்தாள். சரடு முக்கியமில்லை.

வெல்லப் பூரண கொழுக்கட்டை, உளுந்து வடை, அப்பம் காரணம். ஹாஸ்டல் சாப்பாடு ஒழித்துக் கட்டியது லஜ்ஜையை. ஆபீஸில் ஒவ்வொரு விசேஷத்திற்கு ஒவ்வொரு ஊழியர் கொண்டு வருவதை கூச்சமில்லாமல் வாங்கிச் சாப்பிடுவேன். கோகுலாஷ்டமி என்றால் பாஸ்கர் வீட்டு சீடை முறுக்கு; பிள்ளையார் நோன்பு சதுர்த்தி இல்லை வேறு வகை நகரத்தார் டைப் என்றால் முத்துராமன் வீட்டு பால் கொழுக்கட்டை; கிறிஸ்துமஸ் என்றால் ஷர்லி கொண்டு வரும் கேக். மாமியிடமிருந்து ஃபோன் வராமல் போகவே நானே ஃபோன் பண்ணினான்.

"யாரு ராஜேஸ்வரியா?"

"ஆமாம் மாமி."

''ஐ'ம் வெரி ஸாரி டு டிஸப்பாயின்ட் யூ டியர்.''

"ஏன் மாமி?"

"ரொம்ப தெரிஞ்ச பையன் தவறிப் போய்ட்டான். கம்ப்ளீட்டா மூட்-அவுட் ஆகிப் போயிருக்கோம்."

"என்ன வயசு?"

"சாகற வயசில்லை. இருபத்தெட்டோ, இருபத்தொம்பதோ."

''பேரு ப்ரசாத்தா?"

"தெரியுமா உனக்கு? சேப்பா உசரமா இருப்பான்.''

''சாகறதுக்கு முன்னால் தெரியாது."

''உபகாரின்னா அப்படி ஒரு உபகாரி. கவர்ன்மென்ட் டிபார்ட்மெண்டில் அவனுக்குத் தெரியாதவா யாரும் இருக்கமுடியாது. தாசில்தார் ஆஃபீஸிலிருந்து கோ-ஆபரேடிவ் சொஸைட்டி வரையிலும். சரின்னு ஒரு காரியத்தை ஏத்துண்டுட்டா முடிச்சிட்டுத்தான் நிப்பான். ஒரு பைசா வாங்கிக்க மாட்டான். பைசா வாங்கிண்டுட்டா நாளை பின்ன வீட்டுக்கு வந்து ஒரு வா காப்பி சாப்பிட்டுட்டு போன்னு சொல்ல மாட்டேளே மாமிம்பான். சங்கீத ஞானம் உண்டு. வீணை வாசிப்பான். இன்னிக்குப் பூரா…கேட்டுண்டு இருக்கலாம். எதுல குறை? சுத்த ஆத்மா. அதுதான் பகவான் இழுத்துண்டு போயிடுத்து போலிருக்கு"- சொல்லும்பொழுது குரல் தழைந்தது. நான் ஃபோனை வைத்து விட்டேன்.

எனக்கு அந்த ப்ரசாத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அல்லது அவன் உருவப் படத்தையாவது. இது என்ன விபரீத நினைப்பு?

ரண்டு நாட்களில் அலுவலக வேலை அதிகமானது. எனவே எனக்கு நேரம் சரியாக இருந்தது.

சனிக்கிழமையும் ஊருக்குப் போகவில்லை. ரூம் மேட் தாரிணி சனிப் பிரதோஷம், ஈஸ்வரன் கோவிலுக்கு வருகிறாயா என்றாள். ஹாஸ்டல் பெண்கள் பிரதோஷம் போகலாமா என்று பொன்மலரில் யாராவது எழுதிக் கேட்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. கிளம்பி விட்டேன். கூட்டம் பார்ப்பது என்பதே தனி குஷி.

மிக அமைப்பாக பிரதோஷ காலத்தை அனுசரிப்பவர்கள் சுகவனேஸ்வரர் கோவில்காரர்கள்தான். திடகாத்திர நந்தி. வெள்ளிக் கவசம். நிஜமாகவே நாக்கை நீட்டுவது போன்ற பிரமை. கோபுர ஆரத்தி எடுத்தபோது கிட்டத்தட்ட எல்லாருமே ஆவேசப்பட்டார்கள். என் பக்கத்தில் இருந்த அம்மாள் மட்டும், "அப்படி ஒரு குருத்தைக் கொண்டு போனதுக்கு என்னைக் கொண்டு போயிருக்கக் கூடாதா? மகர தேவா!" என்றாள் அடிஷனலாக. நான் தனியாக அழைத்து குருத்தின் பெயர் கேட்க "ப்ரசாத்" என்றாள். எனக்குத் திகிலானது.

சுப்ரமணிய ஸ்வாமி சந்நிதி மண்டபத்தில் உட்கார்ந்தோம். அந்த அம்மாள் பாதி பேசுவதும், பாதி புடைவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக்கொள்வதுமாக புலம்பித் தீர்த்தாள்.

"தனியான இயக்கம் சாராம, கோஷ்டி கூட்டி சுயநலம் சம்பாதிக்காம அதுக்காக வேலை வெட்டி எதுவுமில்லாம, இப்பத்த பசங்க ரோடு ரோடா தியேட்டர் தியேட்டரா திரியறானுங்களே அதுபோல் இல்லாம, சொந்தமா அப்பாவோட டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டை விரிவு பண்ணி... எத்தனை பேருக்கு எவ்வளவு விதமான உபகாரம். ரேஷன் கார்டுக்கு நானும் எங்க வீட்டுக்காரரும் நாய் படாதபாடுபட்டோம். இவனைக் கெஞ்சி, அவனைக் கெஞ்சி... இங்க வா,  அங்க வான்னு இழுத்தடிச்சு நொந்து போயிருந்த சமயம்... யாரு என்னன்னு தெரியாமலேயே அவன்தான் சுளுவா வாங்கிக் குடுத்தான்!"

இந்த லிஸ்ட் நீண்டது. காய்கறிக்காரி, பூக்காரி, லாண்டரி கடைக்காரன், பஸ்ஸில், தியேட்டரில், ரயில்வே ஸ்டேஷனில் இங்கெல்லாம் முகம் தெரியாதவர்கள் ப்ரசாத்தைப் பற்றி பேசுவதைக் கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு பத்து நாட்களில் ஏற்பட்டது. நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்,  பண்பிலே தெய்வமாய் என்ற ரீதியில்தான் வர்ணனை!

ரண்டு வாரம் கழித்து ஹாஸ்டலில் காலை வேளையில் அழைப்பு வந்தது. யாரோ என்னைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார்கள். பெண்கள் ஹாஸ்டலில் இது ஒரு ரோதனை. வெளி மைதான ஆலமரத்தின் கீழ் போடப்பட்ட மேடையில் வந்த ஆண் உறவினர்களைப் பார்த்துப் பேசி அனுப்பி விட வேண்டும். நான் புடைவையை மாற்றிக்கொண்டு போனால்... அப்பா.

"வாங்கோப்பா!" சந்தோஷத்தில் கூவினேன்.

அப்பா முதலில் ஒரு பையைக் கொடுத்தார். அம்மாவின் வாத்சல்யம் உள்ளே திரட்டுப் பாலாக, மைசூர்ப் பாகாக இருக்கும்.

"எப்படிம்மா இருக்கே?" என்றார் வாஞ்சையுடன்.

அப்பா இங்கே வந்தால் திருச்செங்கோட்டில் அவருடைய மாமா வீட்டில் தங்கி விட்டுத்தான் வருவார்.

"அம்மா எப்படி இருக்கா? தினேஷுக்கு மார்க் வந்துடுத்தா? விஜய் நன்னா படிக்கறானா?"தினேஷம், விஜய்யும் என் உடன்பிறப்புக்கள்.

அப்பா பதில் சொன்னார்.

"வெயிட் பண்றயா? குளிச்சிட்டு வந்துடறேன். சந்திராவில் டிபன் சாப்பிடலாம்" என்றேன்.

சரி என்றார்.

பாத்ரூம் வரிசை எனக்காக மாறி நின்றது. பாட்டுப் பாடாமல் ஐந்து நிமிடத்தில் குளித்து, மத்யான பொட்டலத்தை வாங்கி ஹாண்ட்பேகில் திணித்துக்கொண்டு வாசலுக்கு ஓடினேன்.

அப்பா மேடையில் உட்கார்ந்து பழைய பேப்பரை புரட்டிக்கொண்டிருந்தார். அதே அப்பா, நரை மட்டும் கூடிப் போயிருக்கிறது.

"வர்றதா லெட்டர் போடலியே?" என்றேன்.

''அவசரம். அதான் வந்தேன்.''

''எதுக்கு?"

"உன் கல்யாண விஷயமா.'

'நான்தான் தினேஷ் காலேஜ் படிப்பு முடிக்கட்டும்னு சொல்றேனேப்பா."

"இப்பவே உனக்கு வயசு இருபத்தி மூணு ஆறது ராஜி! நான் ரிடையர் ஆறதுக்குள்ளே உனக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா? ஒரு மாசத்துக்கு முன்னாடியே திருச்செங்கோடு மாமா தெரிஞ்சவா கொடுத்தான்னு ஜாதகம் ஒண்ணு அனுப்பிக் கொடுத்திருந்தார். பையனும் சரி, பையனோட வீட்லயும் எல்லாரும் தங்கமான மனுஷாளாம்.”

"என்ன வேலையில் இருக்காராம்?"

"வேலை கிடையாது. ஆனா இந்த ஊரிலேயே பெரிசா டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிடியூட் வெச்சு நடத்தறானாம். டுடோரியல் சென்டர் ஒண்ணும் இருக்காம். மாச வரும்படியே ஐயாயிரம் வர்றதாம். பையன் குணம் பத்தரை மாத்துத் தங்கமாம்."

''பையன் பேரு என்னப்பா?" கேட்கும்பொழுதே எனக்கு நடுங்கியது.

"ப்ரசாத்" என்றார் அப்பா.

பின்குறிப்பு:-

கல்கி 23 ஜனவரி 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

SCROLL FOR NEXT