ஓவியம்: ராமு 
கல்கி

சிறுகதை - காந்தி தேசம்!

கல்கி டெஸ்க்

-திருவாரூர் பாபு

ந்தச் சின்ன அறையில் அமர்ந்திருந்த அனைவரும் அறுபது வயதைத் தாண்டியவர்கள். தும்பைப் பூ வெள்ளையில் வேஷ்டி சட்டை அணிந்திருந்தார்கள். தோளில் துண்டு போட்டிருந்தார்கள். தலையில் காந்தி குல்லாய் வைத்திருந்தார்கள். மாதத்திற்கு ஒரு முறை மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவரும் கூடி, நாட்டைப் பற்றி, நிகழ்கால அரசியலைப் பற்றிப் பேசுவது வழக்கம்.

தியாகிகள் சங்கத் தலைவரான மாரிமுத்து உட்கார்ந்து கொண்டே பேசினார். பொதுவாகப் பேசிவிட்டுச் சொன்னார்: "போன கூட்டத்திலேயே உங்ககிட்ட பேசணும்னு இருந்தேன்... ஏனோ முடியல... நம்ம ஊர்ல எல்லாத் தலைவர்கள் சிலையும் இருக்கு. ஆனா நம்ம மகாத்மா சிலை மட்டும் இல்ல... ஊர்ல முக்கியமான எடத்துல மகாத்மா சிலைய வைக்கணும்னு நான் விரும்பறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க...?"

"வைக்கணும்... அவசியம் வைக்கணும்!" என்றார்கள் அனைவரும்.

"வெண்கலத்துல காந்தி சிலை செய்யணும்னா கிட்டத்தட்ட பத்தாயிரம் செலவாகும். வசூல் பண்ணிடலாம். காந்தி சிலை வைக்கணும்னா நிதி தாராளமாக் கிடைக்கும். நாம எல்லாரும் சேர்ந்து போனா சீக்கிரமே வசூல் பண்ணிடலாம்.'’

''நாளைக்கே ஆரம்பிச்சிடலாம்... சிலைய எந்த எடத்துல வைக்கிறது?" கூட்டத்திலிருந்து ஒரு தியாகி கேட்டார்.

"பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல மூணு ரோடு சந்திக்கிற எடத்துல வைக்கலாம். முனிசிபாலிடி கமிஷனர பார்த்துப் பேசணும்.... அத பார்த்துக்கலாம். காந்தி சிலை வைக்கணும்னா பர்மிஷன் கிடைச்சிரும். நாளைக்குக் காலைல பத்து மணிக்கு எல்லாரும் இங்க வந்துடுங்க..."

மாரிமுத்து பேச்சை முடிக்க, அனைவரும் எழுந்தார்கள்.

வெள்ளைவெளேரென்று வேஷ்டி, சட்டையுடன் தலையில் குல்லாவுடன் கும்பலாகச் சென்ற தியாகிகளை கடைத் தெரு ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தது.

எழுந்து நின்று வணங்கிப் பணத்தை அள்ளிக் கொடுத்தவர்களும் உண்டு. கல்லாவில் இருந்து எழுந்து சென்று அடுத்த கடையில் நின்றுகொண்டு தியாகிகள் முதுகை பார்த்துச் சிரித்தவர்களும் உண்டு. என்றாலும் மாரிமுத்து எதிர்பார்த்ததைவிட விரைவாக நிதி சேர்ந்தது. பத்தாயிரம் ரூபாய் மூன்றே தினங்களில் வசூல் ஆனது.

மாரிமுத்து சந்தோஷமானார். அவர் நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியம் முடியப் போவதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி அவருக்கு.

சிலை அமைப்பது தொடர்பாக நான்கு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

அடுத்த நாளே கும்பகோணம் சென்றார்கள். சிரித்த முகத்துடன் கூடிய அழகான மார்பளவு காந்தி சிலைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தார்கள்.

"வணக்கம் ஸார்."

நகராட்சி ஆணையர் நிமிர்ந்தார். நான்கு பேரையும் பார்த்தார். பொதுவாக ''உட்காருங்க" என்றார்.

உட்கார்ந்தார்கள்.

"என்ன விஷயம்?" என்றார்.

''காந்தி சிலை வைக்கிறது சம்பந்தமா மனு கொடுத்திருந்தோம்."

''ஆமாம் பார்த்தேன். சிலை எந்த எடத்துல வைக்கப்போறீங்க...?"

"பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துல... போலீஸ் போஸ்ட் இருக்குல்ல... அதுக்குப் பக்கத்துல. "

"அடடா.... அந்த எடம் முனிசிபாலிடிக்குச் சொந்தமானது இல்லியே... ஹைவேஸ் எடமுல்ல அது...."

"அப்படியா... நீங்க பர்மிஷன் தர முடியாதா...?

"முடியாதே... ஹைவேஸ் டிபார்ட்மெண்டுக்கு எழுதுங்க... அந்த எடத்துலதான் வைக்கணுமா... அதுக்கு எதிர்த்தாப்ல பெரிய இடம் இருக்கே. அங்க வைக்கலாமே."

மாரிமுத்துவுக்குச் சுருக் என்றது.

"அங்க வரிசையா பிராந்திக் கடை இருக்கு ஸார்" என்றார்.

"அட! சிலைதான ஸார்."

''காந்தி சிலை ஸார்" என்றார் மாரிமுத்து கொஞ்சம் கடுமையாக.

"அப்ப நீங்க ஹைவேஸுக்கு அப்ளை பண்ணுங்க...." என்றதும் எழுந்து கொண்டார்கள்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி இவர்களை மேலும் கீழும் பார்த்தார்.னுவைப் படித்தார்.

''சரி வாங்க" என்றார்.

"ஸார்... சிலை ரெடியாயிட்டுது... அக்டோபர் ரெண்டாந்தேதி திறக்கணும்... சீக்கிரம் பர்மிஷன் கொடுத்தாத் தேவல...."

''பர்மிஷன் நான் கொடுக்க முடியாதுங்க. எனக்கு அந்த அதிகாரம் கிடையாது. திருச்சியில் ரீஜினல் ஆபீஸ் இருக்கு. அவுங்க கொடுக்கணும். நான் இந்த அப்ளிகேஷனை அவுங்களுக்கு அனுப்பறேன்” என்றார்.

 

சிலை தயாராகி விட்டதென்றும், வந்து எடுத்துச் செல்லுமாறும் தகவல் வர, எடுத்து வந்தார்கள்.

பொக்கை வாய்ப்புன்னகையுடன் காந்தியைப் பார்த்த தியாகிகளுக்குப் புல்லரித்தது. கை ராட்டினத்தால் நெய்யப்பட்ட நூல் மாலை போட்டு காந்தி சிலையை அலுவலகத்தில் வைத்தார்கள்.

"தாத்தா சிலை வைக்க பர்மிஷன் கொடுத்திட்டாங்களா....?"

பி.ஏ. படிக்கும் மாரிமுத்துவின் பேரன் கிண்டலாகக் கேட்டான்.

"திருச்சி ஆபீஸுக்கு அப்ளிகேஷனை அனுப்பி இருக்காங்க... கிடைச்சிடும்."

'"அவ்வளவு சீக்கிரம் பர்மிஷன் கிடைச்சிடும்னு நினைக்கிறீங்களா...?

"டேய் படவா... காந்தி சிலைடா... அலறிக்கிட்டு உடனே பர்மிஷன் கொடுப்பான் பாரு... "

"எனக்குச் சிரிப்பா வருது தாத்தா... சம்திங் கொடுக்காம நீங்க கொடுத்த அப்ளிகேஷனை இங்கிருந்து அனுப்பிடுவாங்களா...? "

"டேய்... காந்தி தேசம்டா இது... அவரு இல்லாட்டி இந்த சுதந்திரம் ஏதுடா... இல்ல நீதான் இப்படி பொழுதுக்கு ஒரு சட்டை மாட்டிக்கிட்டு அலைய முடியுமா... போடா போக்கத்தவனே..." என்றார் மாரிமுத்து கிண்டலாக.

ரு மாதமாகியும் திருச்சி அலுவலகத்தில் இருந்து தகவல் ஏதும் வராமல் போகவே, மாரிமுத்து திருச்சி செல்வதென்று முடிவு செய்தார்.

அடுத்த நாளே புறப்பட்டார்.

அலுவலகத்தில்....

''காந்தி சிலை வைக்கிறது சம்பந்தமாவா... அப்படி ஏதும் உங்க ஊர் ஆபீசுலேர்ந்து எங்களுக்கு பேப்பர் வரலியே..." என்றார் அந்த அதிகாரி. மாரிமுத்துவுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

"அப்ளிகேஷன் கொடுத்து ஒரு மாசமாச்சி ஸார்.... உடனே இங்க அனுப்புறதாச் சொன்னாங்க..."

''ஏதும் வரலிங்க... வந்திருந்தா இல்லேன்னு சொல்லுவனா, நீங்க எதுக்கும் அடுத்த வாரம் வந்து பாருங்க."

மாரிமுத்து சோர்வாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

"இன்னும் என் பார்வைக்கே வரலைங்க... நீங்க என்னைக்குக் கொடுத்தீங்க?" என்றார் உள்ளூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி.

"போன மாசம் பதினாலாந்தேதி ஸார்" என்றார் மாரிமுத்து திகைப்பாக.'

"அட உங்க ஃபைல் பார்க்கிற கிளார்க் பத்து நாளா லீவு ஸார்.... அவரு வந்தோன்ன உங்க விஷயத்தை கவனிக்கச் சொல்றேன்."

"ஸார்,  அக்டோபர் மாசம் நெருங்கிக்கிட்டே இருக்கு .... இடையில் இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு!''

''உங்க அவசரத்துக்கு முடியாது ஸார். அரசாங்க வேலை, கொஞ்சம் மெதுவாத்தான் நடக்கும். அதுவும் ஹைவேஸ் ரோட்டுல சிலை வைக்கணுங்கிறீங்க."

''காந்தி சிலைங்க."

"அதான்... உங்க அப்ளிகேஷன் ரீஜினல் ஆபீசுக்குப் போகணும்.
அதிகாரிங்க இடத்தைப் பார்த்துட்டு நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் கொடுக்கணும்... போக்குவரத்து உள்ள ரோட்டுல வைக்கணுங்கிறீங்க... ஆர்.டி.ஓ. வந்து பார்க்கணும்.. முறைப்படி நடக்கும். போயிட்டு வாங்க."

மாரிமுத்து வெளியேற, அங்கு நின்ற ஒரு பியூன் "ஸார்" என்றான்.

''இங்க வாங்க" என்றவன் அவரை ஓரமாக அழைத்துச் சென்று கிசுகிசுத்தான்.

''விவரம் தெரியாத மனுஷனா இருக்கீங்க. இப்படி போனா ஒண்ணும் நடக்காது. சம்திங் வெட்டுங்க... இல்லாட்டி உங்க ஃபைல் ஒரு வருஷமானாலும் இந்த ஆபீஸ் விட்டு நகராது!''

மாரிமுத்துவுக்குச் சர்ரென்று கோபம் ஏறியது. "யோவ் என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க... காந்தி சிலை வைக்க உங்களுக்கு லஞ்சம் கொடுக்கணுமா?" என்றார் குரலை உயர்த்தி.

"யாரு சிலையா இருந்தா எங்களுக்கென்ன... எங்களைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு வேலை.... எந்த வேலையையும் நாங்க பணம் வாங்காம செய்யறதில்லை. பணம் கொடுக்க வேணாம்... நீங்க சிலை வைக்கிறதப் பார்த்துடுவோம்...." பியூன் சவாலாகச் சொல்லிவிட்டுப் போக, மாரிமுத்து அதிர்ச்சியாகி நின்றார்.

டுத்து வந்த தினங்களில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு அலையாய் அலைந்த மாரிமுத்துவுக்கு ஒன்று புரிந்தது. கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் தவறான மனிதர்கள் கையில் சிக்கியிருக்கிறது என்று.

சம்பந்தப்பட்ட கிளார்க்கை பார்க்க நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்குச் செல்லும்போதெல்லாம் அவரது தலையைப் பார்த்ததுமே கிளார்க் மாயமாய் மறைந்தார். கேட்ட கேள்விக்குச் சரியான பதில் இல்லை.

நொந்து போன மாரிமுத்து வேறு வழியே இல்லாமல், நடந்த அத்தனையையும் விவரமாக எழுதி, சிலை வைக்க உத்தேசித்த இடத்தைப் புகைப்படம் எடுத்து எல்லா தியாகிகளிடமும் கையெழுத்து வாங்கி முதல்வருக்கு, மந்திரிக்கு அனுப்பி வைத்தார்.

நீண்ட நாட்களாக டெல்லிக்கு அழைத்துக்கொண்டிருந்த மாரிமுத்துவின் மகள் டிக்கெட் எடுத்து அனுப்பி வைக்க, டெல்லி புறப்பட்டுப் போனார். ஒரு மாசம் மகள் வீட்டில் தங்கிப் பேரனைக் கொஞ்சிவிட்டு ஊர் திரும்பிய மாரிமுத்து,  பஸ் ஸ்டாண்டில் இறங்கியதுமே அதிர்ந்தார்.

எந்த இடத்தில் காந்தி சிலை வைக்க முடிவு செய்து, நெடுஞ்சாலைத் துறைக்கு மனு செய்து அலையாய் அலைந்தாரோ.. அந்த இடத்தில் அராஜகத்தில் உயிர் நீத்த ஒரு லோக்கல் தலைவரின் சிலை அமர்க்களமாய் அமர்ந்திருந்தது.

வெறுத்துப் போய் சங்க அலுவலகம் வந்தார். அங்கு வந்திருந்த ஒரு கடிதத்தைப் படித்ததும் அழுகையே வந்து விட்டது அவருக்கு.

ஒரு வழக்குரைஞர் எழுதியிருந்த கடிதம் அது. தமது கட்சிக்காரர்களிடம் காந்தி சிலை வைப்பதாகப் பொய் சொல்லி நிதிவசூல் செய்ததாகக் குற்றம் சாட்டியும் அவர் மேல் ஏன் மோசடி வழக்குத் தொடரக் கூடாது என்று கேட்டும் மாரிமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் அவர்.

மாரிமுத்து அங்கிருந்த மகாத்மா சிலையைப் பரிதாபமாகப் பார்த்தார்.

பின்குறிப்பு:-

கல்கி 31  ஜனவரி 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT