Real beauty 
கல்கி

குட்டிக் கதை - எது அழகு?

ராதா ரமேஷ்

பொதுவாகவே மக்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்துவதில் கவிஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும். பலவிதமான தத்துவங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் பரந்து விரிந்து கிடப்பது தான் இந்த உலகம். அதில் மிகப்பெரிய பங்காற்றியவர்கள் யார் என்றால் கவிஞர்கள் தான். இதோ ஒரு கதை :

ஒரு நாட்டில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். அந்த நாட்டு அரசருக்கு தன் ஆட்சியின் மேல் ஒரு மிகப்பெரிய மதிப்பு இருந்தது. அந்த எண்ணத்தில் அவர் தனக்கு தோன்றுவதை எல்லாம் உடனடி சட்டதிட்டங்களாக அமல்படுத்திக் கொண்டே இருந்தார். மக்களின் எந்த ஒரு கருத்துகளுக்கும் அவர் செவி சாய்க்கவே இல்லை. 

ஒரு நாள் பக்கத்து நாட்டுக்கு மிகவும் புகழ்பெற்ற புலவர் ஒருவர் வந்திருந்தார். அந்தப் புலவரால் பாடப்படாத அரசரே இல்லை எனும் அளவுக்கு அந்த புலவரின் புகழ் ஓங்கி இருந்தது. எனவே அரசருக்கு அந்த புலவரை அழைத்து தன் நாட்டின் சிறப்பை  அவரது வாயால் பாட வைக்க வேண்டும் என்று ஆசை வந்தது. அதனால் அந்த புலவருக்கு அவர் ஓலையை அனுப்பி, தாங்கள் கட்டாயம் என் நாட்டிற்கு வருகை புரிய வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டார். அந்த புலவரும் ஒரு குறித்த நாளில் தான் வருவதாக மறுமொழி அனுப்பினார். அரசர் பலவிதமான திட்டங்களை தீட்டி தன் நகரையே மிகவும் பிரமாண்டமாக அழகுப்படுத்தினார்.

புலவர் கூறிய அந்த நாளும் வந்தது, புலவரும் வருகை தந்தார். வருகை தந்த புலவரிடம் அரசர், "புலவரே தாங்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று இருக்கிறீர்கள். தங்கள் வருகையால் என் நாடு மிகவும் புண்ணியம் பெற்றது. என் நாட்டின் நலத்தையும் அதன் அழகையும் தாங்கள் புகழ்ந்து பாட வேண்டும்" என கேட்டுக்கொண்டார். 

சிறிது நேரம் மௌனமாக இருந்த புலவர், "நான் வந்ததால் உன் நாடு புண்ணியம் பெற்றது, ஆனால் நான் உன் நாட்டிற்கு வந்ததால் நான் பாவம் பெற்றவன் ஆனேன்." என்று கூறினார்.

மன்னருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "அரசே உன் நாட்டின் அழகைப் பற்றி பாட சொல்கிறீரே, முதலில் எது அழகு தெரியுமா?" என்று கேட்டார்.  "நிறம், பொருள், பரிசு, பாராட்டு, பணம், அரசு வேலை, பதவி, விலை உயர்ந்த நகைகள், ஆடைகள், நல்ல வீடு, இப்படி ஒவ்வொருவருக்கும் அழகு பற்றி ஒவ்வொரு விதமான கருத்துக்கள் உண்டு. இதில் நான் எதைப் பற்றி பாட வேண்டும் என்று சொல்லுங்கள்," என்றார் புலவர்.

அரசருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. மௌனமாக நின்றார். புலவர் மீண்டும் அரசரிடம் "எதற்காக நான் பாட வேண்டும்?" என்று கேட்க, "தாங்கள் பாடியது  என் வரலாற்றில் இடம் பெற வேண்டும்" என்று சொன்னார் அரசர். 

"வரலாறு என்பதற்கு பொருள் தெரியுமா?" என்று கேட்டார் புலவர். மேலும், "அரசர்களின் வாழ்க்கை முறைகளை மட்டும் விளக்கிக் கூறுவது வரலாறு அல்ல! அந்த அரசரின் ஆட்சியின் கீழ் உள்ள நாட்டின் இயற்கை அமைப்பு, இயற்கை வளங்கள், குடிமக்களின் வாழ்க்கை முறைகள், மொழி வளர்ச்சி, இலக்கியம், கலைகள், பொருள் பெருக்கம், அரசியல் ஆக்கம், மக்களின் அடிப்படைத் தேவைகள், அவர்களுடைய ஒழுக்கங்கள் இவற்றை விளக்கிக் கூறுவது தான் வரலாறு. அப்படி நான் கூறுவதற்கு தான் உன்னுடைய நாட்டில் ஒன்றுமே இல்லையே. வெறுமனே உன்  நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு வரலாறு வேறு எழுத சொல்கிறாயா?" என்று கேட்டார். 

மன்னருக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. "புலவரே அப்படியானால் எது அழகு? என்பதை எனக்கு தெளிவு படுத்துங்கள்."

"மக்களுக்கு தேவைப்படும் அடிப்படைத் தேவைகள், சுத்தமான நீர் நிலைகள், சுகாதாரமான உணவுகள், தேவையான மருத்துவ வசதிகள், தரமான கல்வி முறைகள், மேம்பட்ட பொழுப்போக்குவரத்து வசதிகள், மனிதனை மேம்படுத்தும் பொழுதுபோக்கு முறைகள், ஒழுக்கமான வாழ்வியல் முறைகள் இவைதான் மனித சமூகத்துக்கு மிகப்பெரிய அழகு. அழகு என்பது சமூகத்தின் கூட்டு வடிவமே தவிர அதில் பிரித்துப் பார்ப்பதற்கு ஒன்றும்  இல்லை. ஆகவே உன்னுடைய ஆட்சியின் கீழ் வாழும் இந்த சமூகம் தான் அழகே  தவிர, வேறு ஒன்றும் அழகில்லை! வானத்திற்கு அழகு நிலா என்பதை போல, ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் வளமான சமுதாய அமைப்பே அழகு. அதனால்தான் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கூறினர் நம் முன்னோர்," எனக் கூறி புறப்பட்டார் புலவர்.

மனம் திருந்திய மன்னன் மக்கள் பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT