Ambush 
கல்கி

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

வீரமணி.ஜி

ண்டையிட்டு பெற்ற வெற்றியை தக்கவைப்பது ரொம்பவே கடினம். அதேபோல், எதிரியை குறைத்து மதிப்பிடுவதும் மிகப்பெரிய தவறு என்பது பட்டாளத்தில் முக்கியமான விதி.

டெபுடி கமாண்டர் சுனில் பர்மாருக்கு ஏதோ உள் மனதில் சரியான தெளிவு வரவில்லை. இவர்கள் கொடுத்த ஓகே ரிப்போர்ட்டை அவர் ஏற்கவில்லை. ஐதராபாத்  தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு, ‘ஹெலிகாப்டர் மூலம் மலையில் ஏதும் நடமாட்டம் இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும்’ என்று கேட்டார்.

‘ஹெலிகாப்டர் வேணுமா? அதற்கெல்லாம் அனுமதி வாங்குவது பெரும் கஷ்டம். இரண்டு மாதம் முன்பே சொல்லியிருக்க வேண்டும். நீங்கள் மீண்டும் சாலைகளை சோதித்து, புது பட்டாலியன் ஆட்கள் வந்தவுடன் அதேவழியில் உங்கள் படைகளை அந்த பத்து வண்டிகளிலும் பகிர்ந்து ஏற்றிக்கொண்டு வாருங்கள்’ எனச் சொல்லி விட்டார்கள்.

அதன்படி புது பட்டாலியன் ஆட்கள் சுமூகமாக வந்து சேர்ந்தார்கள். சுனில் பர்மாருக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. ‘நாளை காலை 4 மணிக்கு நமது 77வது படைகள் புறப்பட்டுப் போகலாம்’ என கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார். இருந்தும் அந்த 60 கிலோ மீட்டர் காட்டுப்பாதையை கடக்கும் வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

‘இடையில் எந்த வண்டியும் எங்கும் நிறுத்தக் கூடாது. இன்று இரவு முழுதும் யாரும் தூங்க முடியாது. எல்லோரும் எல்லாம் சோதித்து சரி செய்து கொண்டுதான் போக வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

மீதமான சாப்பாடு வாங்க வரும் கிழவி மூலம் அம்பேத் கடைசி தகவல் வரை பெற்றுக் கொண்டான்.

ன்று இரவு ஐதராபாத்தில் இருந்த மணிவர்மனுக்கு செல்வராணி காட்டுப் பகுதியில் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு, ‘மணி, மணி’ என்று கூப்பிடுவதுபோல் அதே பழைய கனவு வந்தது. உடனே எழுந்து வெளியில் வந்து பார்த்தான். நகரம் நிலவொளியில் அமைதியாகக் கிடந்தது.

திருச்சி, துவாக்குடி சிவநேசன் வீட்டில்  கீர்த்திக்கு வயிறு, நெஞ்சு எல்லாம் பெரும் வலியெடுக்க, எல்லோரும் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

நாகூரில்  இஸ்மாயில் வீட்டில் அப்ரின், ‘வாழ்ப்பா, வாழ்ப்பா...’  என்று சொல்லிக் கொண்டு தூங்காமல் அடம் பிடித்தாள். உம்ரா அவளை சாந்தப்படுத்தினாள்.

கேம்பை சுற்றி உள்ள காட்டுப் பகுதியில் மிருகங்கள், பறவைகளின் சத்தம் கேட்டது. கிளம்பும் வேலையில் அதை யாரும் பெரிதாய் கவனிக்கவில்லை.

குறிப்பிட்டபடி 4 மணி அதிகாலையில் விடுப்பில் மற்றும் வெளி டூட்டிக்கு போனவர்கள் தவிர்த்து, 90 பேருடன் 77வது படைப்பிரிவு 10 வெவ்வேறு வண்டிகளில் ‘பாரத் மாதா வாழ்க’ கோஷத்துடன் புறப்பட்டது.

எந்தப் பிரச்னையும் இல்லாமல் எல்லா வண்டியும் போய்க்கொண்டிருந்தது. இரவெல்லாம் கண் விழித்து வேலை பார்த்த அசதியில் ஓரிருவர் தூங்கியபடி வந்தார்கள். தலைமையக உத்தரவுப்படி ஒவ்வொரு கிலோ மீட்டர் நகர்வுக்கும் வயர்லெஸ் செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

பாதி வழி ஒரு 30 கிலோ மீட்டர் கடந்தவுடன் 10 பெண்கள் கொண்ட கூட்டம் நாடு ரோட்டில் நின்றுகொண்டு கை காட்டி வண்டியை நிறுத்தினார்கள். “நாங்கள் பக்கத்து கிராமத்திற்கு போக வேண்டும். வழி தெரியவில்லை. எங்களை ஏற்றிக்கொண்டு போக வேண்டும்” என்றார்கள். “கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” எனக் கேட்கிறார்கள். முன்னுக்குப் பின் முரணாக இருந்தது அவர்களின் பேச்சு.

முதல் வண்டி நிற்க, மொத்த வண்டிகளும் நின்றன. ஜீப்பில் இருந்து இறங்கி சுனில் பர்மார், “யாரும் வண்டியை விட்டு இறங்க வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டே அந்தப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு நடந்து போனார். அவர்கள் யாரும் கிராமத்து பெண்கள் போல் தெரியவில்லை.

பெரிய பாறைகள் உருளும் சத்தம் கேட்டது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மண் வழி பாதையில் வண்டிகள் நிற்கும்  பின்பகுதியில் பாறைகளை வைத்து சுமார் 50  பேர்கள் மூடுவது தெரிந்தது. முன்வழிப் பாதை ஏற்கெனவே அடைக்கப்பட்டிருந்தது.

சுனில் பர்மாருக்கு ஏதோ தப்பாகப்பட்டது. எல்லோரையும் வண்டிகளை விட்டு இறங்கி பொசிஷன் எடுக்க ஒலிபெருக்கியில் உத்தரவிட்டார். எல்லோர் முகத்திலும் கலவரம் தெரிந்தது.

வயர்லெஸ்ஸில், “சில பெண்கள் வண்டியை மறித்து பிரச்னை செய்கிறார்கள்” என்ற  தகவலை சொல்ல, சுனில் பர்மார் முற்சிக்கும்போதே அங்கிருந்து ஒரு தகவல் இடி போல் இறங்கியது.

“நீங்கள் எல்லோரும், ‘அம்புஷ்’ல்  மாட்டிக்கொண்டு உள்ளீர்கள். உங்களைச் சுற்றி வளையம் போல் கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் சிறு துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் முன்னேறி வருகிறார்கள். நீங்கள் உங்கள் வெடி மருந்துகள், தோட்டாக்களை பத்திரப்படுத்திக் கொண்டு சுற்றியுள்ள பாறைகளில் உடனடியாக பதுங்கி டார்கெட் செய்ய வேண்டும். இங்கிருந்து கூடுதல் படைகள், வெடி மருந்துகள் வரும் வரை நீங்கள்தான் சமாளிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.

சுனில் பர்மாருக்கு கோபம் வந்தது. “77வது பட்டாலியன் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது. கட்டாயம் பழி வாங்குவார்கள். மலையில் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று அப்போதே சொன்னேன். யாரும் கேட்கவில்லை. ஆயிரம் பேர்களை எப்படி 90 பேர்கள் கொண்ட படை சமாளிக்க முடியும்?” என்றார்.

“அதெல்லாம் பேச இப்போது நேரமில்லை. உடனே ஆக வேண்டியதைப் பாருங்கள்” என வயர்லெஸ் துண்டிக்கப்பட்டது.

வினய் யாதவ் அந்த 10 பெண்கள் கைகளையும் கட்டினான். 10 பேரையும் ஒன்றாக இணைத்து வெடிமருந்து, தோட்டாக்கள் உள்ள வண்டியின் முன் கட்டி வைத்தான். வண்டியைச் சுற்றி இஸ்மாயில், டோப்பு மற்றும் கிஷனை நிற்க வைத்தான். மற்றவர்களையெல்லாம் தூக்க முடிந்த அளவுக்கு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள பாறைகளில் பதுங்கச் சொன்னான். எல்லா வாகனங்களையும் அருகில் உள்ள புதர்களுக்குள் செலுத்தி மறைக்கச் சொன்னான். வினய் யாதவ் பெரிய மெஷின் கன்னை நடுவில் பொருத்தி நின்றுகொண்டான். வினய் யாதவின் துணிச்சல் மற்ற வீரர்களும் காரியத்தில் தீவிரமாக இறங்க உதவியது. ஆனால், சுனில் பர்மார் நம்பிக்கை இழந்தார். ‘அம்புஷ்’ பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். எல்லோருக்கும் மரணம் நிச்சயம். பெரும் கலக்கத்தில் ஆழ்ந்தார். இரு கரம் கூப்பி கடவுளை வேண்டி நின்றார்.

“அப்படியே அந்தப் பெண்களிடம் புடைவை வாங்கிக் கட்டிக்கொள். நீயெல்லாம் ஒரு அதிகாரியா?” வினய் யாதவ் அவரைத் திட்டினான்.

இவர்களை எங்கே நிறுத்த வேண்டும்? இவர்கள் எங்கே, எந்தப் பாறையில் பதுங்குவார்கள். எல்லா கணக்கையும் அந்த மண்ணின் மைந்தன் அம்பேத் கணக்குப் போட்டு வைத்துத் திட்டம் தீட்டி இருந்தான்.

இந்த ‘அம்புஷ்’ என்கிற சக்கர வியூகம் 10 மாதத் திட்டம். குறி தப்பவே தப்பாது. ஆயிரம் பேர்களும் சாகத் துணிந்தவர்கள். பாதி பேர் வெளி மாநிலங்களில் இருந்து திரட்டப்பட்டவர்கள். மலையேற்றம் தெரிந்தவர்கள். 24 மணி நேரமாக இரவு பகல்  பாராமல் மலையேறி இறங்கி இந்த மண் வழிப்பாதையை நெருங்கி விட்டார்கள்.

‘என் மக்களைக் கொன்று விட்டு நீங்கள் எப்படி உயிருடன் போவது? இந்த மண்ணிலே உங்கள் உயிரும் போகட்டும்’ அம்பேத் பெரிய பறை இடுக்கில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தான்.

Ambush 5

77வது பட்டாலியன் ஆட்கள் பதுங்கிய அத்தனை பாறைகளுக்கும் புரட்சிப் படை வைத்த குறி சரியாக இருந்தது. ஒரே விசிலில் ஒரே நேரத்தில் புரட்சிப் படை வளையம் போல் சுட ஆரம்பித்தார்கள். எங்கிருந்து சுடுகிறார்கள் என்று கூட கணிக்க முடியவில்லை. பதுங்கிய அத்தனை பெரும் வெடித்துச் சிதறினார்கள். கிட்டத்தட்ட 60 பேர் உயிர் நொடியில் போனது. மீதமுள்ளவர்கள் சுட்டதும் 10 நிமிடத்தில் நின்றது. எல்லோரும் நிராயுதபாணியானார்கள். வினய் யாதவை காலில் சுட்டு 10 பேர் கொண்ட குழு கட்டித் தூக்கிக்கொண்டு போனது.

எங்கிருந்தோ வந்த ஒரு கையெறி குண்டு வெடிமருந்து வண்டி மீது விழுந்ததில் மொத்த வண்டியும் வெடித்துச் சிதறியது. வானத்தை நோக்கி தீப்பிழம்பு 100 அடிக்கு மேல் எழும்பியது. 10 பெண்களும் கருகி செத்தார்கள். இஸ்மாயிலும் கிஷனும் டோப்புவும்  எரிந்துகொண்டே பறந்து கரிக்கட்டையாய் விழுந்தார்கள்.

10 நிமிடத்தில் எல்லாம் முடிந்து விட்டது. 70 பேர்களைக் கொன்று, சுனில் பர்மார், சிவநேசன் உட்பட 20 பேர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்த அம்பேத் தனது சபதத்தை முடித்தான். வினய் யாதவை எங்கே கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை.

புரட்சிப் படை தரப்பில் அந்த 10 பெண்களும், மேலும் 20 பேர்களும் செத்து போயிருந்தார்கள். இறந்தவர் உடல்களையும், இறந்து கிடந்த 77வது பட்டாலியன் ஆட்களின் துப்பாக்கிகள் மற்ற ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு அந்த ஆயிரம் பேர் கொண்ட குழு காட்டில் புகுந்து மலையேறி மாயமாய் மறைந்தது.

77வது பட்டாலியனின் 70 பேர்களின் உடல்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மூன்று மணி நேரம் கழித்து வந்த கூடுதல் படைகள் எல்லா உடல்களையும், சிதறிய உடல் பாகங்களையும் ஒரே வண்டியில் அடுக்கி  ஐதராபாத் தலைமையகத்திற்கு எடுத்துச் சென்றது. வண்டிகளையும், உடைமைகளையும் எடுத்துப் போனார்கள்.

ணிவர்மனுக்கு நேற்றைய இரவு செல்வராணி கனவு வந்ததிலிருந்து ஒரே பதற்றமாய் இருந்தது. மதியம் சாப்பிட்டுவிட்டு பார்க்கில் படுத்துக் கிடந்தவனை எழுப்பி, “உனது 77வது பட்டாலியன் கம்பெனி அம்புஷில் மாட்டி, அத்தனை பேரும் காலி” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்கள். சிவா அண்ணன், இஸ்மாயில் அண்ணன், கிஷன், டோப்பு மேஜர் எல்லாம் போயிட்டாங்களா? கடவுளே” மணி பதறினான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் டிவி அலறத் தொடங்கியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலை எழுந்தது.

இறந்தவர்களை அடையாளம் கண்டு அவரவர் வீட்டுக்கு அனுப்ப ஏற்கெனவே அதே பட்டாலியனில் வேலை செய்த, விடுப்பில் மற்றும் வெளி டூட்டியில் போனவர்களை ஐதராபாத் தலைமையகம் வர அழைப்பு விடுக்கப்பட்டது. மணிவர்மன் அங்கேயே இருந்ததால் முதல் ஆளாக அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டான்.

மணிவர்மன் எதுக்கு ஒரு காலத்தில் பயந்தானோ அது நடந்தது. சொந்த சகோதரர்கள் சாதல் கண்டு சிந்தை இறங்கினான். இந்த முறை அவனுக்கு எந்த பயமும், அருவருப்புமில்லாமல் ஒரு ஜடம் போல் எல்லா பிணங்களையும் வரிசைப்படுத்தி, அடையாள குறிப்பு எடுத்தான். மாநிலம் வாரியாக உடல்கள் பிரிக்கப்பட்டன. உயர் அதிகாரிகள் மணிவர்மனின் செயலைப் பாராட்டினார்கள்.

இஸ்மாயில், கிஷன், டோப்பு மேஜர் மூவரும் கருகி இருந்தார்கள். கால்களை வைத்துத்தான் அவர்களை அடையாளம் காண முடிந்தது. அதுபோல், இறந்தவர்களின் உடைமைகளையும் அடையாளம் கண்டு பிரிக்கச் சொன்னார்கள். கிஷனின் பெட்டியில் அந்த தங்கச்சிலை போட்டோ இருந்தது. அவள் அனுப்பிய கடிதம் ஒன்றில் அவன் ரயில்வே எக்ஸாம் தேர்ச்சி பெற்ற ரிசல்ட் காப்பி இருந்ததைப் பார்த்ததும், ‘தங்கச்சிலை தங்கச்சிலை என உருகிய என் உயிர் நண்பனே, நீயே இப்போது உருக்குலைந்து போய் விட்டாயே’ மணிவர்மனுக்கு வாயில் கட்டியிருந்த துணியையும் மீறி விசும்பல் கேவல் எழுந்தது. ‘அழுவது குற்றம்’ செல்வராணி ஆவி அறிவுறுத்தியது.

இஸ்மாயில் வீட்டில் சின்ன அட்டைப்பெட்டி சைஸில் பேக்  செய்து வந்த இஸ்மாயில் உடலை வாங்க மறுத்து, பெரும் சண்டை போட்டார்கள். 5 வருடத்தில் இங்கு வந்து பேன்சி கடை போடுவதாக உறுதியளித்த இஸ்மாயில் இப்படி பிண்டமாய் வந்ததை உம்ரா ஏற்க மறுத்தாள். யாருக்கும் யாரும் எந்த ஆறுதலும் சொல்ல முடியாமல் தவித்தார்கள். உள்ளூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இஸ்மாயில் உயிருடன் திரும்ப அல்லாவிடம் மன்றாடினார்கள். உம்ரா முற்றிலுமாக மனம் பேதலித்து வெளியில் இறங்கி ‘மாமா, மாமா’ என்று கூவிக்கொண்டே ஓட ஆரம்பித்தாள்.

சிவநேசன் புரட்சிப் படையின் பிடியில் இருந்தான். ‘ஏற்கெனவே அரசுப் படையிடம் பிடிபட்டவர்களை விடுவித்தால்தான் இவர்களை உயிருடன் விடுவோம்’ என பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்தது.

டைசி வரை சிவநேசனை எதிர்பார்த்து ஏமாந்து இறுதியில் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்ற கீர்த்தி, பிரசவ சிக்கலால் சிவநேசனுக்கு தெரியாமலேயே இறந்துபோனாள். 10 வருடங்களாக எத்தனையோ வலிகளையும், வேதனைகளையும் சகித்துக் கொண்டு எந்த குழந்தைக்காக ஏங்கினாளோ அதை பார்க்காமலேயே அவள் போய்விட்டாள்.

வினய் யாதவின் கண்களைப் பிடுங்கி, மர்ம உறுப்பை அறுத்து கொடுமைப்படுத்தி கொன்று காட்டில் 77வது பட்டாலியன் இருந்த இடத்தில் போட்டான் அம்பேத். வினய் யாதவ் உடலை நுகர்ந்த மோப்ப நாய், அம்பேத் இருப்பிடத்தைக் காட்டியது. அந்த வீட்டை சுற்றி வளைத்தார்கள் அரசுப் படையினர். அம்பேத்தை சுட்டுக் கொன்றார்கள். அம்பேத் உடல் சல்லடையாய் துளைக்கப்பட்டது.

மூன்று மாதம் கழித்து அதிரடித் தாக்குதல் நடத்தி சிவநேசன் உட்பட 77வது பட்டாலியன் ஆட்களை அரசுப் படை மீட்டது. சிவநேசன் வீட்டுக்கு ஓடினான். கீர்த்தி படம் சட்டமிடப்பட்டு மாலையுடன் இருந்தது.  குழந்தை ‘சிவ கீர்த்தி’ தொட்டிலில் கிடந்தாள். கீர்த்தி படத்தின் கீழே படுத்து, ‘உன்னையே ரதியென்று கிடந்தேனே, இனி எனக்கு யார் கீர்த்தி’ என்று பெருங்குரலெடுத்து அழுதான்.

‘நொடியில் தடம் மாறும் வாழ்க்கை’ என்பார்கள். அது இங்கே ரொம்ப பொருத்தமாக இருந்தது. ஒரு அம்புஷ் எல்லோர் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றியது. மணிவர்மன், ‘நாமும் செத்துப் போய்விடலாம்’ என நினைத்தான். ஜம்மு காஷ்மீருக்கு போனால் திரும்ப வர முடியாது என்று பேசிக்கொண்டார்கள். மணிவர்மன் முதல் ஆளாய் போய் நின்றான்.

ட்டு வருடங்களை அங்கேயே கழித்தான். செல்வராணி நினைவுகள், பிணவாடைக் கனவுகள் தொடர்ந்தன. நாட்கள் நகர்ந்தன. மணிவர்மன் சாகவில்லை. வயதாகி படையில் இருந்து ஓய்வு பெற்று விட்டான். ஆறாத, அழியாத தழும்புகளுடன் அவன் வாழ்வு தொடர்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  இஸ்மாயில், சிவநேசன் வீடுகளுக்குப் போய் வருகிறான்.

இஸ்மாயில் மகன் மசூத் ‘இஸ்மாயில் ஸ்டோர்’ என்ற பெயரில் பெரிய பேன்சி கடை நடத்துகிறான். அப்ரினுக்கு உடல், மனதெல்லாம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் உம்ராவுக்கு  மனப்பிறழ்வு நோய் சரியாகவில்லை.

சிவநேசன் தனது மகள் சிவகீர்த்தியுடன் இருக்கிறான். இரண்டாவது திருமணம் செய்ய பலர் வற்புறுத்தியும் அவன் இன்னமும்  கீர்த்தியுடன் மானசீகமாக வாழ்கிறான். கீர்த்தி அவனை வழிநடத்துகிறாள். 200 பேர்கள் கொண்ட பெரிய செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றை நடத்துகிறான். வீடு, கார், பணம், பொருள் என பெருவாழ்வு வாழ்ந்தாலும் கீர்த்தியற்ற வாழ்வு அவனுக்கு சூன்யமாக இருப்பதாகச் சொல்கிறான்.

கிஷனின் தங்கச்சிலை, டோப்புவின் மகள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ‘நமக்கென்று எந்தக் கதையும் இல்லையே’ என்று ஏங்கிய மணிவர்மனுக்கு காலம், கருகிப்போன கிஷனின் அழகான தங்கச்சிலை காதல், கீர்த்தியின் மரணம், சிவநேசனின் தவிப்பு, இஸ்மாயில் சாம்பலாகிப்போனது, உம்ராவின் மனப் பிறழ்வு, துறவி போல் வாழ்ந்து கடவுளின் எந்தக் கருணையும் கிடைக்காமல் கருகிப்போன டோப்பு மேஜர் என எளிதில் சொல்ல முடியாத ஒரு நூறு கதைகளைத் தந்திருக்கிறது.

கிழப்பருவமெய்தி கிடக்கும் மணிவர்மனுக்கு  இன்னமும் பிணவாடைக்  கனவுககளும், செல்வராணி நினைவுகளும் நின்றபாடில்லை. போரும் காதலும் முடிவற்றதுதான் போலும்.

(முற்றும்)

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT