உலகெங்கிலும் உள்ள பல நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் எல்லோருக்கும் பொதுவான சவாலாக உள்ளது. எந்தளவுக்கு நகரங்கள் வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கின்றனவோ அந்தளவு மக்கள் தொகையும் அதிகரித்துக்கொண்டே போகிறது, இதனால் இயற்கையாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும். ஆனால், மக்கள் ஒத்துழைப்போடு சில புதுமையான உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் நாம் எதிர்கொண்டிருக்கும் கடுமையான போக்குவரத்து பிரச்னைகளை எப்படி கையாளலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
1. பொது போக்குவரத்தை மேம்படுத்துதல்:
அந்தந்த அரசுகளால் செயல்படுத்தப்படும்பொது போக்குவரத்து அமைப்புகளில் சில ஆக்கபூர்வமான முதலீடுகளைச் செய்வது சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கலாம். பேருந்துகள், டிராம்கள்(trams) மற்றும் மெட்ரோ போன்ற போக்குவரத்து சேவைகளில் சரியான பராமரிப்புடன் கூடிய தூய்மையான சூழலை எல்லா நேரமும் பேணிக்காப்பது, தங்குதடையின்றி எந்நேரமும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அதிக எண்ணிக்கையிலான வண்டிகளை மக்கள் பயன்பாட்டிற்காக விடுவது போன்ற விஷயங்களைக் கையாண்டால் எல்லா தரப்பு மக்களும் தங்கள் தனிப்பட்ட வாகனங்களை காட்டிலும் பொது போக்குவரத்தையே அதிகம் விரும்புவர்.
2. ஸ்மார்ட் போக்குவரத்து மேலாண்மை:
ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவது மூலம் வாகனங்களின் இயக்கங்களை மேம்படுத்தலாம். அதற்கு நிகழ்நேர போக்குவரத்து நிலைமைகளின் அடிப்படையில் இயங்கக்கூடிய செயற்கை நுண்ணறிவால் செயல்படக்கூடிய தானியங்கி டிராபிக் சிக்னல்கள் பெரிதும் உதவும். மேலும், சிறந்த போக்குவரத்து மேலாண்மைக்காக, இந்தக் காலகட்டதிற்கேற்ப ட்ரெண்டில் இருக்கும் அதிநவீன போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தலாம் .
3. கார் பூலிங்(Car pooling) மற்றும் சவாரி-பகிர்வு:
தூய்மையுடன் கூடிய சொகுசான கார் பூலிங் மற்றும் சவாரி-பகிர்வு பயணங்களை ஊக்குவிப்பதன் மூலம் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கலாம்.
4. இயற்கையை சீண்டாத போக்குவரத்து:
மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, குறைந்த தூரம் பயன்கொள்வோருக்கு மற்றும் பாதசாரிகளுக்கென பிரத்யேக பாதைகளை உருவாக்குவது, மோட்டார் வாகன பயன்பாட்டைக் குறைத்து சற்று போக்குவரத்து நெரிசலையும் குறைக்க உதவும்.
5. நெரிசலுக்கான விலை நிர்ணயம்:
நெரிசலுக்கான விலை நிர்ணயத்தை அமல்படுத்தலாம். இது நெரிசலான நேரங்களில் அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளுக்குள் நுழைவதற்கு முன் கட்டணம் வசூலிக்கபடுகின்ற ஒரு நெறிமுறை. இதனால் தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்ப்பார்கள் மற்றும் போக்குவரத்து அளவையும் குறைக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை பொது போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் மறு முதலீடு செய்யலாம்.
6. நகர்ப்புற திட்டமிடல்:
பயனுள்ள நகர்ப்புற அமைப்புக்கான திட்டமிடல் நீண்ட பயணங்களின் தேவையைக் குறைக்கலாம். குடியிருப்பு, வணிக மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் அருகருகே அமைந்திருக்கும் பட்சத்தில், அது, மக்களின் பயணத் தூரத்தை குறைத்து தேவையற்ற போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும்.
7. நெகிழ்வான வேலை நேரம்:
நெகிழ்வான வேலை நேரம் மற்றும் அதிகமான ரிமோட் வேலைகளை ஊக்குவிப்பதன் மூலம், பீக் ஹவர்ஸில் பணியாளர்கள் சாலைகளில் முந்தியடித்து செல்ல வேண்டிய தேவையும் குறையும். இதனால் நெரிசலான நேரங்களில் போக்குவரத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.
8. பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள்:
பொதுப் போக்குவரத்து, கார்பூலிங், மோட்டார் பயன்பாடு அல்லாத பயணம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை அரசு மற்றும் தனியார் வாயிலாக பொதுமக்களுக்கு சில விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் போது மக்களின் பயண தேர்வில் சில மாற்றங்கள் நிகழலாம்.
கடுமையான போக்குவரத்து நிலைமைகளுக்கு தீர்வு காண, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்பம், கொள்கை மாற்றங்கள் மற்றும் பொது ஒத்துழைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்த உத்திகளை செயல்படுத்துவதன் மூலம், நகர்ப்புறங்களில் நிகழும் போக்குவரத்து இயக்கங்களை மேம்படுத்தலாம், மாசுபாட்டைக் குறைக்கலாம் மற்றும் அங்கு குடியேறி இருக்கும் அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தலாம்.