மங்கையர் மலர்

மும்பை மாநகரில் நவராத்திரி கொண்டாட்டம்!

மும்பை மீனலதா
nalam tharum Navarathiri

‘நவராத்திரி வந்தாச்சு!

கொலுவும் வெச்சாச்சுங்க!

பீரோவுல தூங்குன புடைவைகளையும்

வெளியே எடுத்தாச்சு!

சுவையான சுண்டலும் தயாராச்சு!

மும்பையென்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மும்பை மகாலெக்ஷ்மி கோயில்தான். இது தேவி மகாத்மியத்தின் மைய தெய்வமான மகாலெக்ஷ்மிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி சமயம், கோயில் பிரமாண்டமாக அலங்கரிக்கப்படுகிறது. உலக முழுவதிலுமிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

ஒன்பது வடிவங்கள்

பிரதிபாதா – ஷைல் புத்ரி;

த்விதியா – பிரம்மச்சாரினி;

திரிதியை – சந்திகாந்தா;

சதுர்த்தி – கூஷ்மந்தா;

பஞ்சமி – ஸ்கந்த மாதா;

ஷஷ்பி – காத்யாயினி;

சப்தமி – கால ராத்திரி;

அஷ்டமி – மகா கெளரி;

நவமி – சித்தி தாத்ரி.

இவைகள் மாதா துர்காவின் ஒன்பது வடிவங்களாகும். நவராத்திரி சமயம் தேவிக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறி்ப்பிட்ட நிறம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதை நம் வாழ்க்கையில் சேர்ப்பது மங்களகரமெனக் கருதப்படுவதால், அத்தகைய நிற ஆடைகளை ஒன்பது நாட்களும் பெண்கள் அணிகின்றனர். தற்சமயம், ஆடவர்களும் கலர்ஃபுல் உடை அணிய ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு நாளின் நிறத்திற்கேற்ப, அதே நிற புஷ்பங்களால் தேவியும் அலங்கரிக்கப்படுகிறாள்.

நவராத்திரி 2023 கலர் விபரம்:

தேவிக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கலரில் ஆடைகள் அணிவிக்கப்படுவதின் விபரங்கள் முன்கூட்டியே பத்திரிகைகள் மூலம் தெரிவிக்கப்பட்டு விடுவதால், அநேக மும்பை வாழ் பெண்கள், அந்த நிற உடைகளை ரெடியாக வைத்துக்கொள்வது வழக்கம். குறிப்பிட்ட நாளின் கலர் இல்லையென்றால் கடைக்குச் சென்று வாங்குபவர்களும் உண்டு.

14.10.23 சனி வெள்ளை,

15.10.23 ஞாயிறு ஆரஞ்சு;

16.10.23 திங்கள் வெள்ளை;

17.10.23 செவ்வாய் சிகப்பு;

18.10.23 புதன் ராயல் ஃப்ளூ;

19.10.23 வியாழன் மஞ்சள்;

20.10.23 வெள்ளி பச்சை;

21.10.23 சனி சாம்பல் (Grey);

22.10.23 ஞாயிறு கத்தரிப்பூ (Purple);

23.10.23 திங்கள் மயில் பச்சை (Peacock Green).

ராஸ் மற்றும் தாண்டியா ராஸ்

மூக – மத உறவு கொண்ட இந்த நாட்டுப்புற நடனம் முதல் குஜராத் மாநிலத்தில் தோன்றியதாகும். முக்கியமாக நவராத்திரி நாட்களில் ஆடப்படும் நடனம், பல்வேறு மாநிலங்களிலும் ஆடப்படுகிறது.

மும்பை மாநகரில் இவைகளுடன் ‘கர்பா’ நடனமும் பல்வேறு இடங்களில் கோலகலமாக மாலை 7 மணி முதல் இரவு 12 மணிவரை நடைபெறுகின்றன.

தாண்டியா ராஸ் நடனத்தைப் பாரம்பரிய முறையில் ஆணும் பெண்ணுமாக இணைந்து ஆடுவார்கள். இரண்டு வரிசையில் கலைஞர்கள் நின்று ஆடுவார்கள். கடிகார முள் திசையில் இயங்கும். கையில் வைத்திருக்கும் கோலை அடித்தவாறே இசைக்கேற்ப அனைவரும் ஆடுவார்கள். நமது ‘கோலாட்டம்’ போல அழகாக இருக்கும்.

கர்பா நடனம் குஜராத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், மும்பையிலும் இது ஆடப்படுகிறது. மையமாக எரியும் விளக்கு அல்லது சக்தி தேவியின் படம் அல்லது சிலையைச் சுற்றி பாரம்பரியமான கர்பா நடனங்கள் வட்டமாகவும் சுழற்சியாகவும் ஆடப்படுகின்றன.

நடனங்களை ஆடுபவர்களின் கலர்ஃபுல் ஆடைகள் கண்களைக் கவரும் வகையில் இருக்கும்.

கர்பா தீப் என்று கூறப்படும் இந்த விளக்கு வாழ்க்கையை, குறிப்பாக கருவிலிருக்கும் சிசுவின் வாழ்க்கையைக் குறிக்கிறது. தெய்வீகத்தின் பெண்ணிய வடிவமான துர்காவை இதன்மூலம் கலைஞர்கள் மதித்துப் போற்றுகின்றனர். பிரபஞ்சத்தில் மாற்றமில்லாத எஞ்சியுள்ளது கடவுளென்று இந்நடனம் குறிப்பிடுகிறது.

பெண்கள் பூவேலைப்பாடுகளுடன் கூடி சன்யா சோளி, துப்பட்டா, கீழே பாவாடை அணிந்து வலம் வருவார்கள். காதணி, கழுத்தணி சூப்பராக இருக்கும்.

ஆடவர்களும் குர்தா, பாந்தினி துப்பட்டா, கடா, மேஜ்ரி அணிவார்கள்.

மும்பை மாநகரில் நடைபெறும் இத்தகைய நடனங்களுக்குப் போட்டிகளும் வைக்கப்பட்டு, பரிசுகளும் அளிக்கப்படுகின்றன. சிறந்த உடை, நகையணிந்த ஆண், பெண், சிறந்த ஜோடி; சளைக்காமல் இசைக்கேற்ப சுழன்று சுழன்று ஆடுபவர்களென அநேக பரிசுகள் உண்டு.

மும்பை லோகல் டிரெயின்களில் நவராத்திரி

மும்பை லோகலில் அலுவலகம் செல்லும் பெண்கள், அதுவும் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை அதிகம். காலையில் அரக்க – பரக்க டிரெயின் பிடித்து, ஆபீஸ் சென்று வேலை பார்த்து, திரும்பவும் டிரெயினில் வீடு திரும்புவதற்கே நேரம் சரியாக இருக்கும். அதற்காக நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் விட்டுக் கொடுக்க முடியுமா என்ன?

அதனால் பல பெண்கள் தாங்கள் பயணிக்கும் லோகல் டிரெயினிலேயே நவராத்திரியை கொண்டாடுகின்றனர். ஓடுகின்ற டிரெயினிலே ஒருவருக்கொருவர் ஹல்தி – குங்குமம் இட்டு குதூகலிப்பார்கள். துணிப்பை அல்லது தரமான பிளாஸ்டிக் கவர்களில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம், தேங்காய், காசு மற்றும் ஒரு எவர்சில்வர் டப்பா அல்லது அழகான டப்பர்வேர் பாத்திரத்தினுள் ஸ்வீட் அல்லது சுண்டல் போட்டு அழகாக பேக் செய்து கொடுத்துவிடுவார்கள். டேலீஸ் கம்பார்ட்மெண்டே சும்மா அதிரும்.

தவிர, லலிதா சஹஸ்ர நாமம், மஹிஷாஸுர மர்த்தினி போன்ற ஸ்லோகங்களை பெண்கள் அனைவரும் சேர்ந்து அருமையாகப் பாட, லோகலில் ‘கொலு’ களைக்  கட்டிவிடும். ஒரே கல கலதான்.

மும்பை கோயில்களில் நவராத்திரி

மும்பை மகாலெக்ஷ்மி கோயிலில் விமரிசையாக நவராத்திரி கொண்டாடுவது போல, மும்பாதேவி, செட்டா நகர், முருகர் கோயில் போன்ற அநேக கோயில்களில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அனைத்து வகை பூஜைகளுடன் கலை நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.

செட்டா நகர் முருகர் கோயிலில், நாள் ஒன்றுக்கு 12 பெண்மணிகள் வீதம் 9 நாட்களுக்கு 108 சுவாஸினி பூஜை 15/10 முதல் 23/10 வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோயில்கள் அனைத்தும் ஜே-ஜே என்றிருக்கும். எங்கும் பக்திப் பரவசம்தான்.

வீடுகள், கோயில்கள், சபாக்கள், லோகல் டிரெயின்கள் என மும்பையின் எல்லா இடங்களிலும் நவராத்திரி விழா 9 நாட்களும் கலகலவென கலர்ஃபுல்லாக கொண்டாடப்படும் அழகே அழகு.

கழுத்துப்பகுதியில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதை செஞ்சாலே போதுமே!

கோ ஆர்டினேடெட் செட்ஸ்! ட்ரெண்டி & பெஸ்ட்!

வாசனைகளின் சிறப்பு தெரியுமா உங்களுக்கு?

சிலந்திகளும் கரையான்களும் வாழும் இடமானது இது!

கேரளாவின் சுவை மிகுந்த இரண்டு தீயல் வகைகள்!

SCROLL FOR NEXT