Children  
மங்கையர் மலர்

வளர்வதன் வெற்றி வளர்ப்பினிலே!

முனைவர் என். பத்ரி

’எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்கிறது திரைப்படப் பாடல் ஒன்று.

குடும்பம் குழந்தைளின் முதல் பள்ளி. பெற்றோர்கள்தான் முதல்நிலை ஆசிரியர்கள். இந்நிலையில் குழந்தை வளர்ப்பினை ஒரு அற்புதமான கலை என்றே சொல்லலாம். 

குழந்தை வளர்ப்பில் அதனுடைய முதல் பத்துவருடங்கள் மிகவும் முக்கியமானவை. செடிகளைத்தான் வளர்க்க வேண்டும். மரங்கள் தானாகவே வளரும் தன்மை கொண்டவை. அப்படித்தான் மனிதர்களும்.   

குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக அவர்களது வீடும், குடும்பமும் இருக்கவேண்டும்.

வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் நம் குழந்தைகள் மனநிறைவுடன் இருப்பதற்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

நம் பிள்ளைக்கு எந்த அளவு பக்குவம் இருக்கிறது என்பதை மனதில் கொண்டு, அவனையே அவனுடைய வாழ்க்கை நிகழ்வுகளை கையாள அனுமதிக்க வேண்டும்.

அவர்களே அவர்களின் சுமையை சுமக்கட்டும். தங்களுக்கு வரும் பிரச்சினைகளை அவர்களே முயற்சி செய்து தீர்க்கும்போது அவர்களுக்குத் தன்னம்பிக்கையும், மனபலமும் கிடைக்கும். ஆனால், பொத்திப் பொத்தி பாதுகாத்தால் இந்தக் குணங்களையெல்லாம் அவர்களால் வளர்த்துக்கொள்ள முடியாது.

சில பெற்றோர் தங்களுக்குத் தெரியாமலேயே பிள்ளைகள் மனதில் சுயநல விதையை விதைக்கிறார்கள். பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். சுயநலத்தைப் பின்னுக்குத் தள்ளி, பிறர் நலனிலும் அக்கறை காட்ட பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.

நட்புகளுடன் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்ள கற்று கொடுக்கவும் தவறி விடுகிறார்கள். ஆனால் தவறு செய்தால் கண்டிப்பதில்லை. கண்டிப்பது என்பதும் ஒருவகை கற்றுக்கொடுப்பதுதான்.

படிப்பு, நல்லொழுக்கம், இறைபக்தி, துன்பத்தில் இருப்பவர்களுக்கு தம்மாலான உதவிகளை செய்தல் போன்ற நற்குணங்களை நமது குழந்தைகள் பெறவேண்டும்.

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை. அன்பையும் கரிசனத்தையும் காட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளுக்கு நட்புகளை சம்பாதிப்பது மிகவும் எளிதாக இருக்கும். அவற்றைத் தக்க வைத்துக் கொண்டு, அவர்களால் மனநிறைவுடன் வாழ முடியும்.

தம் பிள்ளைகள் கனிவுடன் நடந்துகொள்ள, பெற்றோர்கள் முன்மாதிரியாக இருந்து வாழ்ந்து காட்ட வேண்டும்.

பிள்ளைகள் மகிழ வேண்டும் என்பதற்காக, காரணமே இல்லாமல் அவர்களை அதிகமாக புகழக்கூடாது. அப்படி புகழும்போது அவர்களின் ‘தான்’ என்னும் எண்ணம் அதிகமாகலாம்.

நல்லது செய்யும்போது பாராட்டவும், தவறு செய்யும்போது கண்டிக்கவும்  பெற்றோர்கள் தயங்கக் கூடாது. இதனால், அவர்கள் நல்ல வாழ்வியல் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்.

கிடைக்கும் பணியில் சேர்வதுதான் புத்திசாலித்தனம். பணியில் அனுபவம் நல்ல சம்பளத்திற்கு அடிப்படையாக அமைகிறது என்பதை அவர்கள் உணரவேண்டும். அவ்வாறு உணர பெற்றோர்கள் உதவ வேண்டும்.

பிள்ளைகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அவர்களுக்குப் பிடித்ததையெல்லாம் பெற்றோர்கள் வாங்கிக்கொடுக்கிறார்கள். பிள்ளைகளும் மகிழ்ச்சியடைகிறார்கள், ஆனால் அந்த மகிழ்ச்சியெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். அப்புறம் இன்னும் நிறைய வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்

பிள்ளைகள் மனதில் பண ஆசை துளிர்விட பெற்றோர்கள் காரணமாக இருக்கக்கூடாது. இந்தத் தலைமுறையினரின் முக்கிய குறிக்கோள் பணம் ஈட்டுவதுதான். ஆனால், பணத்தை வைத்து மன நிறைவையும், மனநிம்மதியையும் பெற முடியாது என்பதை அனுபவம் ஒன்றே அவர்களுக்கு உணர்த்தும்.

வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு பெற்றோர்கள் முதல் இடம் கொடுக்கவேண்டும். ஆடம்பர வாழ்வு அல்லல்களுக்கு வித்திடும். பிள்ளைகளுக்கும் அதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போது யோசிக்கும் திறன், விவேகம், இரக்கம் போன்றவற்றைப் பயன்படுத்தி அவற்றை தீர்க்க வேண்டும்.

பிள்ளைகளை ஒருபொழுதும் உடலளவிலோ, மனதளவிலோ காயப்படுத்தக்கூடாது. தன் நியாயமற்ற கோபத்தை பிள்ளைகள் மீது காட்டக்கூடாது.

நம் குழந்தைகளால்தான் நமது கனவுகள் மெய்ப்படும். மொத்தத்தில்  நம்முடைய எதிர்கால  வாழ்க்கை, நமது குழந்தைகளை நாம் நன்கு அக்கறைக் காட்டி வளர்ப்பதிலும் அவர்கள்  நம்முடைய கண்காணிப்பில் நன்னெறியில் வளர்வதிலும்தான் இருக்கிறது. இதை உணர்ந்து நம் வாழ்க்கைப் பயணம் நகர வேண்டும். இதை நாம் செய்யாவிட்டால், வேறு யார் செய்யக்கூடும்?

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT