Women Workers 
மங்கையர் மலர்

தொழில் மயமாக்கல் பின்னணியில் கடின சூழல்களை கடந்த பெண்கள்!

ராஜமருதவேல்

மகளிர்க்கு அந்தஸ்தை அளித்து முன்னேற்றத்தை கொடுத்தது தொழில் மயமாக்கல் என்றால் மிகையல்ல. ஆனால், ஆரம்ப காலக் கட்டத்தில் பெண்கள் தொழில் துறையில் நிலைக்க மிகவும் கடினமான சூழல்களை கடந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளனர். தொழில்மயமாக்கலுக்கு முன், பெண்கள் வீட்டு வேலைகள் மட்டும் செய்தனர். வெளியே வேலைக்கு சென்றாலும் சமையல், சமையல் உதவி, வீட்டு பராமரிப்பு, விவசாயக் கூலி, பண்ணை வேலைகள், துணி நெய்தல் போன்ற வேலைகளையே செய்தனர்.

அந்த வேலைகளில் அவர்களுக்கு மதிப்பு எதுவும் கிடைக்கவில்லை. பண்ணை வேலைகளில் அவர்களுக்கு கூலி குறைவாகவே தரப்பட்டது. ஆண்களும் பெண்களும் சம அளவிலான கால்நடைகளையும், வாத்து, கோழி போன்ற பறவைகளை பராமரித்தாலும் ஆண்களுக்கு 2 மடங்கு கூலி தரப்பட்டது. பெண்களுக்கு குறைவான கூலியே கிடைத்தது.

18 ஆம் நூற்றாண்டின் பல குடும்பங்கள் ஒன்றாக வேலை தேடினார்கள். அவர்களில் கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்தனர். இயந்திரங்கள் மனிதர்களின் உழைப்பை குறைத்தது. அதே நேரத்தில் இயந்திரங்கள் இயங்க நிலக்கரி தேவைப்பட்டது. நிலக்கரியை தோண்டி எடுக்க ஆண்களோடு பெண்களும் வேலை செய்தனர். இந்தப் பணி கடுமையாக இருந்தது.

பெண்களால் சுரங்கத் தொழிலில் வேலை செய்வதை விட அவர்கள் நெசவு தொழிலில் ஈடுபடுவது தான் அவர்களின் உடல் வலிமைக்கு ஏற்றது என்று ஆண்கள் நினைத்தனர். பெண்களை எளிதான வேலைக்கு அனுப்ப அவர்கள் நினைத்தாலும் சுரங்க கூலி ஆட்களின் தேவை அதிகமாக இருந்தது என்பதால் பெண்கள் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

அனைத்து தொழில்களிலும் பெண்களுக்கு கூலி குறைவாகவே தரப்பட்டது. கூலி குறைவாக இருந்தாலும் நிலக்கரி சுரங்கங்கள், பண்டைய தொழிற்சாலைகள் ஆபத்து அதிகம் நிறைந்தவையாகவே இருந்தன. ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். அவர்களுக்கு சரியான உணவை முதலாளிகள் கொடுத்தது இல்லை.

சுரங்கத்தில் வேலை செய்யும் பெண்களின் நிலை துயரத்தில் தான் இருந்தது. பெண்கள் 14 மணி நேரம் உழைத்து விட்டு வீட்டுக்கு சென்று தன் கணவர்,குழந்தைகளுக்கு சமைக்க வேண்டும். சமையலறையை, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். கைக் குழந்தைகளை அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கே எடுத்து செல்வார்கள்.

சுரங்கத்தின் தூசிகள் குழந்தைகளின் நுரையீரலை விரைவிலேயே பழுதடைய வைத்தது. பெண்களுக்கும் நுரையீரல் பாதிப்படைந்து ஏராளமானோர் உயிரிழந்தனர். நோய்களின் பாதிப்புகளுக்கோ, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கோ எந்த இழப்பீடும் வழங்கப் படவில்லை. பெண்கள் இரக்கமின்றி நடத்தப்பட்டனர் பணியாட்கள் என்றாலே அடிமைகள் என்ற மனநிலை ஐரோப்பியர்கள் மனதில் ஊறி இருந்தது.

பெண்கள் சிலர் பிரசவ காலத்திற்கு முதல் நாள் இரவு வரையில் சுரங்கத்தில் வேலை செய்துள்ளனர். மறு நாள் காலையில் பிரசவித்துள்ளனர். அடுத்த நாளே வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். கால் மணிநேரம் தாமதமாக சுறங்கத்தற்கு சென்றாலும் அன்றைய சம்பளத்தில் பாதி பிடிக்கப்படும்.

இது போன்ற மிகத் துயரமான காலகட்டங்களை அவர்கள் அனுபவித்துள்ளனர். சுரங்கங்களில் அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது மட்டும் இல்லாமல் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டனர்.

ஐரோப்பிய நாடுகள் முழுக்க தொழிற் புரட்சியில் பெண்களின் உழைப்பு பலவாறு சுரண்டப்பட்டது.

இவ்வாறு பல துயரங்களை தொழில் புரட்சி காலத்தில் அடைந்தனர். சில நூற்றாண்டு காலம் கடந்த பின்னர் தான் பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இன்று தொழில் துறையில் பெண்கள் வளர்ச்சியடைந்து இருந்தாலும் அவர்களின் முந்தைய காலத் துயர்கள் இன்றும் வடுவாகவே உள்ளது.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT