ஆயி அம்மாள் என்கிற பூரணம்  
செய்திகள்

கல்வித்தாய் ஆயி பூரணம் அம்மாளுக்கு அரசின் சிறப்பு விருது!

சேலம் சுபா

குடியரசு தினத்தில் அரசு விருது பெறுபவர் யாரென்று அறிய ஆவலாக இருப்போம். துறை சார்ந்து இல்லாமல் குணம் சார்ந்த சிறப்பு விருது என்றால் இன்னும் ஸ்பெஷல். இந்த குடியரசு தினத்தில் முதல்வரின் கைகளால் அரசின் சிறப்பு விருது பெற்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்பவர்.

செல்வந்தர் எல்லாம் ஈகை குணம் கொண்டவராக இருப்பதில்லை .ஈகை குணம் உள்ளவருக்கு செல்வம் நிலைப்பதில்லை  . இரண்டும் இருந்தால் அவரே மனிதருள் கடவுளாகிறார். இதோ மதுரை ஆயி பூரணத்தம்மாள் கல்வித் தாயாக அனைவராலும் பாராட்டப்படுவதைப் போல. யார் இவர்?

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள கொடிக்குளம் அரசுப்பள்ளிக்கு ரூ 7 கோடி மதிப்பிலான தனது நிலத்தைக் கொடையாக வழங்கியிருக்கிறார் மதுரை புதூரில் வசிக்கும் ஆயி பூரணம் அம்மாள். மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் ஆயி பூரணம் அம்மாள். வயது 52 . கனரா வங்கியில் அலுவலக உதவியாளராக பணியில் இருந்த இவரது கணவர் உக்கிரபாண்டியன் பணியில் இருந்த போதே  காலமானதால்  அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் கிளார்க் வேலை கிடைத்து அப்பணியில் உள்ளார் இவர்.

இளம் வயதிலேயே கணவரை  இழந்தாலும் தனது மகள் ஜனனியை தனியாளாக இருந்து கஷ்டப்பட்டு படிக்க வைத்து திருமணம் செய்துள்ளார். திருமணமான நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு  மகளும் இறந்துவிட  பூரணம் அம்மாள் மனம் உடைந்து விட்டார். தங்கள் சொத்தாக இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பிய தனது மகள் ஜனனியின் ஆசையை நிறைவேற்ற மதுரை கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை அங்குள்ள அரசு பள்ளிக்கு தானமாக கொடுத்துள்ளார்.

5ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலும் படிப்பின் அவசியத்தை அறிந்திருந்த ஆயி  ரூ 7 கோடி மதிப்புள்ள நிலத்தை கல்வித் துறைக்கு தானமாக எழுதி வைத்தார். அதற்கான பத்திரப்பதிவையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தார். தன் மகள் ஜனனியின் நினைவாக அவர் பெயரை மட்டும் பள்ளி வளாகத்துக்கு வைக்கக் கோரியுள்ளவர்,  நிலத்தை அரசின் பெயரில் பதிவு செய்து ஆவணத்தை கல்வித்துறை அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு விளம்பரங்களின்றி வழக்கமான தன் வங்கிப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நிலத்தை கொடுத்த ஆயி பூரணம் அம்மாள் அந்த பள்ளி மாணவர்களுக்கு இதற்கு முன்னும் தேவையான உதவிகளை செய்து வந்தது சிறப்பு. மேலும் பூரணம் அம்மாள் தனது 32 வயதிலேயே சிறுநீரகத்தையும் உறவினர் ஒருவருக்கு தானம் செய்துள்ளதும் தற்போது வெளிப்பட்டு அனைவராலும் இவரல்லவோ உண்மையான கொடை வள்ளல் என புகழாரம் சூட்ட வைக்கிறது.

கல்வியை ஏழேழு தலைமுறையும் பயின்று நல்வாழ்வு காண ஆயி அம்மாள் அளித்த நிலதானத்தை போற்றும் வகையில் தான்  அவருக்கு அரசு சார்பில் சிறப்பு விருது தந்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

SCROLL FOR NEXT