இந்தியாவின் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த நூல் படைப்புகளுக்கு மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான சிறந்த மொழி பெயர்ப்பு இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த கண்ணையன் தட்சிணாமூர்த்தி, மமங் தயின் ஆங்கில மூலமான, ‘தி பிளாக் ஹில் என்ற நாவலை தமிழில், ‘கருங்குன்றம் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். இதற்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணையன் தட்சிணாமூர்த்தி ஏற்கெனவே 20க்கும் மேற்பட்ட மற்ற மொழி நூல்களை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வலைதளப் பக்கத்தில் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில், ‘ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட The Black Hill நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது பாராட்டுகள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியான, ‘தி பிளாக் ஹில்’ நாவல் கடந்த 2017ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.