திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடனுதவி, குடிநீர் பிரச்சினை, சாலைவசதி, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 374 மனுக்களை அளித்தனர்.
ஆண்டியப்பனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்கம் அமைத்தப்போது இங்குள்ள விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்துக்கான இழப்பீடு தொகை 22 ஆண்டுகள் கடந்தும் இதுவரை வழங்கவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி திறந்து 4 மாதங்கள் கடந்தும் விடுதி இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
குளங்களை தூர்வார வேண்டும்:
திருப்பத்தூர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பத்தூர் பெரிய ஏரியை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் நகராட்சி ஊழியர்களே இரவு நேரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை ஏரியில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். சில நேரங்களில் ஏரிக்கரையில் கிடக்கும் குப்பைகளுக்கு நகராட்சி ஊழியர்களே தீ வைக்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டு சுவாசப்பிரச்சினை உருவாகிறது. மேலும், பாச்சல் ஏரியும் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டது. இரண்டு ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். ஏரியை சீரமைத்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தனர்.
ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மின்னூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் காலி மதுபாட்டில்களை மின்னூர் பிரதான சாலை, விவசாய நிலங்களில் வீசுகின்றனர். இதனால், விவசாய வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மின்னூரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.
சாலைவசதி:
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் ஜவ்வாதுமலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில்,
புதூர்நாடு ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், விளாங்குப்பம் மலைக்கிராமத்தில் கடந்த 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் இங்குள்ள மக்கள் மற்றொரு பகுதிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். நடுகுப்பம் பகுதியில் இருந்து விளாங்குப்பம் வரை 4 கி.மீ., தொலைவு உள்ள சாலையையும், கம்புக்குடி பகுதியில் இருந்து கொத்தனூர் வரை 1 கி.மீ., தொலைவு உள்ள தார்ச்சாலையை அமைத்து தராவிட்டால் வருகிற 23, 24ந் தேதிகளில் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவோம் என கூறியிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அங்கிநாயனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொன்வேல் என்பவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டில் வேலை செய்ய நான் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறேன். இந்தநிலையில், நாட்டறம்பள்ளி அருகே கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் எனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2022ம் ஆண்டு ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு போலி விசா ஒன்றை வழங்கினார். அந்த விசாவை பயன்படுத்தி என்னால் வெளிநாட்டுக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, நான் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை அவரிடம் திரும்ப கேட்டால் பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே, அவரிடம் வழங்கிய பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தனர். தா சரவணா