Technology article
Technology article www.smu.edu
அறிவியல் / தொழில்நுட்பம்

Augmented Reality - Virtual Reality இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

என். சொக்கன்

ரு பழைய திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒருவர் வெளியூரில் இருக்கும் தன்னுடைய மனைவிக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் மனைவியின் கைக்குச் செல்கிறது. அவர் ஆவலுடன் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்குகிறார்.

மறுகணம், அவருடைய கையில் இருக்கும் தாளின் நடுவில் அந்தக் கணவருடைய முகம் தோன்றுகிறது. தான் எழுதிய கடிதத்தை அவரே படித்துக் காண்பிக்கிறார்.

உண்மையில் அந்தக் கணவர் அந்த இடத்தில் இல்லை. அவர் எழுதிய கடிதம்மட்டும்தான் இருக்கிறது. அதை அந்த மனைவிதான் படிக்கவேண்டும். ஆனால், திரைப்பட இயக்குநர் தன்னுடைய கலைச் சுதந்தரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கணவரே தோன்றி அந்தக் கடிதத்தைப் படிப்பதுபோல் அதைக் காட்சிப் படுத்துகிறார், அதன் மூலம் ஒரு சுவையான காட்சியை உருவாக்குகிறார்.

முன்பெல்லாம் இதுபோன்ற காட்சிகள் திரைப்படத்தில் மட்டும்தான் வரும். ஆனால் இப்போது, AR (Augmented Reality, மிகுவித்த மெய்ந்நிலை) என்ற தொழில்நுட்பத்தின் உதவியோடு உண்மை உலகிலும் இப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்கலாம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு கடை வாசலில் நிற்கிறீர்கள், உள்ளே நுழையலாமா, வேண்டாமா என்று யோசிக்கிறீர்கள். அப்போது, சட்டென்று அங்கு ஓர் இளைஞர் தோன்றுகிறார், அந்தக் கடையில் கிடைக்கும் சிறப்பான பொருட்கள், தள்ளுபடிச் சலுகைகளைப் பற்றியெல்லாம் விவரிக்கிறார். இங்கு கடையும் அதன் வாசலும் மெய்யானவை (Reality). ஆனால், அங்கு தோன்றிய இளைஞர் தொழில்நுட்பத்தின் மூலம் மிகுவிக்கப்பட்டவர் (Augmented). அதனால்தான் இதை Augmented Reality என்கிறோம். மெய்யான சூழல்களில் தொழில்நுட்பத்தைக் கொண்டு கூடுதல் அனுபவங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இது.

Technology article

ARக்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள்: ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வதற்கு டிஜிட்டல் அம்புக் குறிகள், சின்னங்களின்மூலம் வழிகாட்டுதல், ஓர் உணவுப் பொருளைப் படமெடுக்கும்போது அதில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதைத் திரையிட்டுக் காண்பித்தல், வெவ்வேறு மூக்குக்கண்ணாடிகள் நம் முகத்தில் எப்படி இருக்கும் என்று கற்பனையாக அணிவித்துப் பார்த்தல்.

மேலுள்ள எடுத்துக்காட்டுகள் அனைத்தும் ஒரு மெய்யான சூழலில் கூடுதல் தகவல்களைச் சேர்த்துச் செழுமையாக்குகின்றன. அப்படியில்லாமல், அந்தச் சூழலையே கற்பனையாக உருவாக்கினால்? அல்லது, வேறோர் இடத்தில், வேறொரு காலகட்டத்தில் இருந்த சூழலை இங்கு கொண்டுவந்தால்?

எடுத்துக்காட்டாக, நீங்கள் சென்னையில் அமர்ந்திருக்கிறீர்கள், 'அடுத்த வாரம் நாம ஊட்டிக்குப் போகப்போறோம்' என்று ஒருவர் சொல்கிறார். மறுகணம் உங்கள் மனக்குதிரை விர்ரென்று ஊட்டியை நோக்கிப் பறக்கிறது. அங்கு குளுகுளுவென்ற சூழலில் மலைப் பாதையில் நடப்பதுபோல் கற்பனை செய்கிறீர்கள்.

இங்கு ஊட்டி என்பது மெய்தான். ஆனால், அது இப்போது இங்கு இல்லை. வேறு எங்கோ இருக்கிறது. அந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிக்கொள்கிறீர்கள். இதைச் செய்கிற ஒரு தொழில்நுட்பமும் இருக்கிறது. அதன் பெயர், VR (Virtual Reality, தோற்ற மெய்ந்நிலை). அதாவது, மெய்யான சூழலைப்போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவது.

VRக்குச் சில எடுத்துக்காட்டுகள்: கணினி விளையாட்டுகள், இயந்திரங்களைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்தல், குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களை உருவாக்கிக் கல்வி பயிற்றுவித்தல், தொலைவில் இருக்கும் இடங்களுக்குக் கற்பனையாகச் சுற்றுலா சென்றுவருதல், வீட்டில் இருந்தபடி கடையில் பொருட்களைப் பார்வையிட்டு வாங்குகிற அனுபவத்தை உருவாக்குதல்.

இதுவரை நாம் உண்மை உலகைத் தனியாகவும், டிஜிட்டல் உலகைத் திரைகளிலும் பார்த்துக்கொண்டிருந்தோம். இந்த இரண்டையும் ஒருங்கிணைக்க AR, VR போன்ற தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. வருங்காலத்தில் உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வேறுபாடு மேலும் குறைந்துவிடும். மனித மனம் இதைக் கண்டு மயங்குமா, அல்லது, ஆறாம் அறிவைப் பயன்படுத்தி, இவற்றை வேறுபடுத்திப் புரிந்துகொண்டு, இன்னும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுமா என்பதுதான் சுவையான கேள்வி.

உங்களுக்கு தைராய்டு இருக்கா? ப்ளீஸ் இந்த உணவுகள் வேண்டாமே!

30 வயதிற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்! 

சிறுகதை – சலனம்!

கோடைகாலத்தில் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க சூப்பர் டிப்ஸ்! 

Mummy: கையை முகத்துடன் இணைத்து கட்டியப்படி கண்டுபிடிக்கப்பட்ட மம்மி!

SCROLL FOR NEXT