ரஷ்யாவில் கடந்த ஆண்டு குழந்தை பிறப்பு விகிதம் 2.1 என இருந்த நிலையில், இந்த ஆண்டு 1.5 ஆக குறைந்துவிட்டது. இதற்காக அலுவலக உணவு இடைவேளை நேரத்தில் மனைவியுடன் இருக்கலாம் என ரஷ்ய அரசு செய்தி அறிவித்துள்ளது. குழந்தைகள் பிறக்கும் விகிதம் உலக அளவில் குறைந்து வருவது சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் 1950 ஆம் ஆண்டில் ஒரு பெண் 5 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். 2023 இது 2.3 குழந்தைகள் ஆக குறைந்துள்ளது. அதாவது 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில், குழந்தை பிறப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2100ஆம் ஆண்டில் இது 1.7 ஆகக் குறையும் என வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வு சொல்கிறது. 2064 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 970 கோடியாக உயரும் என்றும், இந்த நூற்றாண்டில் இறுதியில் 880 கோடியாக குறையும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் மக்கள் தொகை இயற்கையாகவே வீழ்ச்சி அடைந்து வருகிறது என்கிறார் சம்மந்தமாக ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் கிறிஸ்டோபர் முரே. 2017 ஆம் ஆண்டு 12.8 கோடியாக இருந்த ஜப்பானின் மக்கள் தொகை, இந்த நூற்றாண்டின் இறுதியில் 5.3 கோடியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் இத்தாலியில் 6.1 கோடியில் இருந்து 2.8 கோடியாக மக்கள் தொகை குறையும். 2063ஆம் ஆண்டு அதிகபட்சமாக 7.5 கோடியாக இருக்கும் மக்கள் தொகை, 2100 இல் 7.1கோடியாக குறையும். மேலும் ஸ்பெயின், சீனா, போர்ச்சுக்கல், தாய்லாந்து, தென்கொரியா உட்பட 23 நாடுகளில் இந்த நூற்றாண்டில் இறுதியில் மக்கள் தொகை பாதியாக குறையும். ஆப்பிரிக்கா மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கும்.
ஆப்பிரிக்க கண்டத்தில் 2100 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 300 கோடியாக அதிகரிக்கும். உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக நைஜீரியா மாறும் என்கிறது ஒரு ஆய்வு. 1950 களில் இந்தியாவில் ஒரு பெண் சராசரியாக 5.7 குழந்தைகளை பெற்று வந்த நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை 2.1 ஆக குறைந்துள்ளது. ஆனாலும் இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகளுக்கு ஏறுமுகத்தில் தான் இருக்கும். இந்த எண்ணிக்கை 2064 உச்சத்தை அடைந்து, அதன் பின்னரே கணிசமான அளவு குறைய தொடங்கும் என்றும் ஐநா சபை கணித்துள்ளது. அதே நேரம் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து கொண்டே வரும் என்றும் 2031-41 காலகட்டத்தில் 0.5% குறைவாகவே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இளையோர் அதாவது 0 முதல் 19 வயது உடையவர் விகிதம் 2011 இல் 41% ஆக இருந்த நிலையில், 2041 இல் 25% குறைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2011 இல் 8.6 சதவீதமாக இருந்த 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோர்களின் எண்ணிக்கை 2041-ல் இரட்டிப்பாகும். 2023 முதல் 2050 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகமாகும் என்றும் ஐநா சபை மதிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக முதியோர் ஆரோக்கியம் மற்றும் அவர்களுக்கான சமூக காப்பீடு திட்டங்களை செயல்படுத்துவது? அரசுக்கு கடும் சவாலாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10.4 சதவீதமாக இருந்த தமிழக மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2041 இல் 22.6 சதவீதமாக அதிகரிக்கும். இது நாட்டின் சராசரி அளவைவிட அதிகமாகும். இந்தியாவில் கருவுறுதல் விகிதமானது 2008 மற்றும் 2010 க்கு உட்பட்ட 3 ஆண்டு இடைவெளியில் 86.1 சதவீதமாக இருந்தது. இது 2018 க்கும் 2020க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் 68.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதன்படி கிராமப்புறங்களில் 20.2, நகர்புறங்களில் 15.6 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. திருமண வயது, எளிய கருத்தடை முறைகள், பெண்களுக்கு அதிக அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைப்பது வாழ்க்கை செலவினம் அதிகரிப்பு ஆகியவை குழந்தை பிறப்பு விகிதம் குறைய காரணங்களாக கூறப்படுகிறது.
குறைவான மக்கள் தொகை இருந்தால் அனைவருக்கும் தாராளமாக உணவு, நீர் கிடைக்கும். பொது சேவைகள், உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும் என நம்மில் பெரும்பாலானோர் நினைக்கலாம். ஆனால் பிறப்பு விகிதம் குறைவானது முதியோர் எண்ணிக்கை அதிகரிக்க வழி வகுக்கும். நாட்டின் பிறப்பு விகிதம் வேகமாக குறையும் போது அதன் முதல் விளைவு 25 ஆண்டுகளில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். தொடர்ச்சியாக 60வயதுக்கு மேற்பட்டவர்களில் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கும். முதியோர் நிறைந்த சமூகத்தில் அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள்? வயதானவர்களுக்கான மருத்துவச் செலவுகளை யார் செய்வார்கள்? வேலை செய்ய இளைஞர்கள் குறையும் போது நாட்டின் உற்பத்தி திறன் எவ்வாறு மேம்படும்? நாட்டின் வளர்ச்சிக்காக யார் வரி செலுத்துவார்கள்? இப்படி அடுக்கடுக்கான சிக்கல்கள் எழும்.
குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைவதை சமாளிக்க பிரிட்டன் போன்ற நாடுகள் குடியேற்றத்துக்கு ஆதரவளிக்கின்றன. சில நாடுகள் மேம்பட்ட மகப்பேறு வசதி, தந்தைக்கு விடுப்பு, இலவச குழந்தை பராமரிப்பு நிதி சலுகைகள் மற்றும் கூடுதல் வேலை வாய்ப்பு உரிமைகள் போன்ற நடைமுறைகளில் இறங்கியுள்ளன. ஸ்வீடனில் ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணிக்கையை 1.7 இல் இருந்து 1.9 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியாவில் 2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்திய பண மதிப்பில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இது தவிர ஓராண்டுக்கு குழந்தை வளர்ப்புக்கும் நிதி உதவி தரப்படுகிறது.
ஒரு காலத்தில் குடும்ப கட்டுப்பாட்டுக்கு அளித்த முக்கியத்துவம், இப்போது குழந்தை பிறப்புக்கு அளிக்கும் முக்கியத்துவமாக மாறி உள்ளது. இந்த விஷயத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது...