International Day Of Friendship 
ஸ்பெஷல்

International Day Of Friendship - நட்பு எனப்படுவது யாதெனின்..!

முனைவர் என். பத்ரி

இன்று ஜூலை 30, சர்வதேச நட்பு தினம்.               

உலகத்தில் விலைமதிக்க முடியாத ஒன்று ‘நட்பு’ ஆகும். மொழி, இனம், வாழிடம், பால், வயது, படிப்பு ஆகியவற்றை கடந்து நீண்டு நிற்பது நட்பு. உடுக்கை அவிழும்போது அழைக்காமலேயே நமது கைகள் உதவிக்கு வந்து நம் மானத்தை காப்பாற்றுகின்றன. அப்படித்தான் ஒரு நல்ல நட்பும். 

உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்னைகளை  கூட நல்ல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். நல்ல தீர்வினை அவர்கள் மூலம் நாம் பெறவும் முடியும். நல்ல நண்பர்களைப் பெருக்கிக் கொண்டால் நலமாக வாழ முடியும்.

மனித உறவுகளில் தூய்மையான நட்பு  பழங்காலத்திலிருந்தே போற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபாரதத்தில் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையேயான நட்பு ஆழமானது. தேரோட்டி மகனை அங்கதேச அரசனாக்கி நட்புப் பாராட்டியவன் துரியோதனன்.

ஒருசமயம் கர்ணன் துரியோதனனின் மனைவியுடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தான். துரியோதனன் வருவதைக் கண்டதும் துரியோதனனின் மனைவி அவசர, அவசரமாக எழுந்தாள். கர்ணன் அவளின் சேலையைப் பிடித்து இழுத்து விளையாட்டைத் தொடரச் சொன்னான். அப்போது அவள் கட்டியிருந்த ஆபரணத்திலிருந்து மணிகள் சிதறித் தரையில் விழுந்தன. துரியோதனனைக் கண்டதும் கர்ணன் திடுக்கிட்டான். ஆனால் துரியோதனன் "விழுந்த மணிகளை எடுக்கவா, கோக்கவா?" என்றான். அவன் மனதில் கர்ணனின் செயல் தப்பு எ‌‌ன்பதாக தோன்றவில்லை. நட்பின் ஆழத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம். 

இராமனின் மீது மிகுந்த அன்பு கொண்டவன் வேட்டுவத் தலைவன் குகன். இராமன்  தனது தம்பியருள் ஒருவனாக அவனை ஏற்றுக் கொண்டான்.

ஆண்டாள் முதல் கம்பன் வரை, வால்மீகி முதல் காலிஃப் வரையிலான நட்பின் பல பரிணாமங்களை இலக்கியங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

நட்புக்காகத் திருக்குறள் நான்கு அதிகாரங்களையும், நாலடியார் மூன்று அதிகாரங்களையும் வழங்கியிருக்கின்றன.

அதியமானுக்கும், இளந்திரையனுக்கும் இடையே நடக்க இருந்த போரை நெருக்கமான நட்பினைக் கொண்டு தவிர்த்தவள் ஒளவையார். உயிர் காக்க வல்ல நெல்லிக்கனியை தான் உண்ணாது, தனது நண்பர் ஒளவையாருக்குத் தந்தவன் அதியமான்.

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே  அவருடன் நட்புக் கொண்டவன். நீரும், உணவும் இன்றி வடக்கிருந்து உயிர்நீத்தான் சோழன். மரணத்தின் விளிம்பிலும் மன்னனின் நட்பின் ஆழத்தை உணர்ந்த அவர், மன்னன் வடக்கிருந்து உயிர்நீத்த இடத்தில் தானும் உண்மையான நட்பிற்காக உயிர்நீத்தார்.

கண்ணன் குசேலன் நட்பின் பெருமையைப் பற்றியும் நாம் நன்கு அறிவோம். இங்கு நட்புக்கு பொருளாதாரம் தடை விதிக்கவில்லை.

பாரியின் நண்பரான கபிலர் போருக்கு ஆயத்தமாக இருந்த மூவேந்தர்களையும் சந்தித்து நடைபெற இருந்த போரையே தடுத்து நிறுத்தினார்.

விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரின் சர்வமதக் கூட்டத்தில், ’சகோதர, சகோதரிகளே’ என்று தொடங்கிய உரை, நட்பையும் உறவாக மாற்றி பெருமைப்படுத்தியது.

இந்தியாவின் இர‌ண்டு பிரதமர்களை உருவாக்கியவர் 'கி‌ங் மே‌க்க‌ர்' காமராஜ‌ர். சாதாரணத் தொண்டர்களுடனும், எல்லா மொழிக்காரர்களிடமும் நட்புப் பாராட்டியவர்.

மு‌ன்னா‌ள் குடியரசு‌‌‌த் தலைவ‌ர் அ‌ப்து‌ல் கலா‌ம், தா‌ன் வ‌கி‌த்து வ‌ந்த பெ‌ரிய பத‌வியின் போது‌ம் த‌ன் ந‌ண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இரு‌ந்து வ‌ந்தா‌ர். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதெல்லாம் அவ‌ர்க‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ண்ட பழைய ‌நிக‌ழ்வுக‌ள் கண‌‌க்‌கி‌ல் அட‌ங்காதவை.

த‌மிழக‌த்‌தி‌ன் அ‌‌ன்றைய முத‌ல்வ‌ர்கள் எ‌ம்.‌ஜி.ஆ‌ரு‌க்கு‌ம் கருணா‌நி‌தி‌க்கு‌ம் உ‌ள்ள ந‌ட்பு பரந்துபட்டது. திரைத்துறை‌யி‌ல் தொடங்கிய இ‌வ‌ர்க‌ளின் ந‌ட்பு மெ‌ன்மேலு‌ம் து‌ளி‌ர்‌விட்டு இறுதிவரை வளர்ந்து வந்தது. த‌ங்களு‌க்கு‌ள் ஏ‌ற்ப‌ட்ட ‌பி‌ரி‌வி‌ன் போது கூட ந‌ட்‌பி‌ன் அடையாளமாக‌த்தா‌ன் இரு‌ந்தா‌‌‌ர்க‌ள்.

இந்நிலையில்,பராகுவே நாட்டு தத்துவஞானி டாக்டர் ரமோன் ஆர்டெமியோ பிராச்சோ 1958ஆம் ஆண்டில் நட்பைக் கொண்டாட ஒரு பிரத்யேக நாளுக்காக வாதிட்டார்.  அவர் ‘நட்பு தினம்’ பல்வேறு பின்னணியில் உள்ள மக்களிடையே உறவின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தி அமைதியையும், நல்லிணக்கத்தையும் சமூகத்தில் வளர்க்கும் என திடமாக நம்பினார்.

அவரின் முன்மொழிவினை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை 2011 இல் ஜூலை 30 ஆம் நாளை சர்வதேச நட்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.

நண்பர்களுடன் இதயப்பூர்வமான பரிசுகளை பரிமாறிக்கொள்வது, தரமான நேரத்தை செலவிடுவது, மிகவும் முக்கியமான உறவுகளில் தங்களின் நட்புகளில் உறுதிப்பாட்டில் மேலும் உரம் சேர்ப்பது போன்ற பல்வேறு வழிகளில்  இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மேலும்,சர்வதேச நட்பு தினத்தைக் குறிக்கும் வகையில், ஒற்றுமை, பரஸ்பர புரிதல்,உலக மக்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை செயல்படுத்த பல்வேறு நாட்டு  அரசாங்கங்கள், சமூகக் குழுக்கள் போன்றவற்றை ஐக்கிய நாடுகள் சபை  ஊக்குவிக்கிறது.

2024 ஆம் ஆண்டு சர்வதேச நட்பு தினத்தை கொண்டாடும் நாம், ​​வாழ்க்கையில் நாம் கொண்டுள்ள உள்ளார்ந்த நட்புகளுக்கு  இதயப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவிப்பதற்கும், கடந்த கால நண்பர்களுடன் உள்ள பிணைப்பைப்  புதுப்பித்து உறுதிபடுத்திக் கொள்வதற்கும் இந்த நாளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் புதிய உண்மையான நட்புகளை கல்விக் கூடங்களிலும், பணியிடங்களிலும், பொது வெளிகளிலும் இனம்கண்டு வாழ்வில் சேர்த்துக் கொள்வதில் முனைப்புகள் காட்ட வேண்டும்..

உறவுகள் சுருங்கி வரும் இந்நாட்களில்  நட்பின் பெருமையை  நாம்  இனியேனும் உணரவேண்டும். காலம் நமக்கு கொடுத்த  மிகப்பெரிய கொடையான நட்பினை தொடர்ந்து நேசித்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு நம் அனைவருக்கும் உள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டிய நாளே இந்த ’சர்வதேச நட்பு தினம்’ ஆகும். நட்பில் கருணை, அன்பு, சரியான புரிதல் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு சிறந்த நண்பர்களாக இருக்க இந்த ’சர்வதேச நட்பு தினம்’ நம்மை ஊக்குவிக்கட்டும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT