உலகம் முழுவதும் அக்டோபர் 9 ஆம் நாளன்று, உலக அஞ்சல் நாள் (World Post Day) நினைவு கொள்ளப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றியக் கூட்டத்தில் எடுக்கப்பெற்ற முடிவின்படி, சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் பன்னாட்டு அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட 1874 ஆம் ஆண்டில் அக்டோபர் 9 ஆம் நாள், உலக அஞ்சல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் 150-க்கும் அதிகமான நாடுகளில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
“உலகின் பல்வேறு நாடுகளுக்கும் உரிய புவியியல், அரசியல், சமயம் போன்ற பல்வேறு எல்லைகளையும், தடைகளையும் தாண்டி, உலகம் முழுவதுமுள்ள மக்களை முழு உலகுக்கும் இணைக்கும் பணியை அஞ்சல் துறை செய்கிறது. மக்கள் தனிப்பட்டதும் முக்கியமானதும், மிகவும் தகுதி வாய்ந்ததுமான தகவல்களையும், பொருட்களையும் அஞ்சலில் ஒப்படைப்பது, அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் மிகக் கவனத்துடனும் அதன் உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் என்ற அஞ்சல் துறையின் மீது கொண்டுள்ள பெரும் நம்பிக்கையை நாம் அறிந்துள்ளதோடு, அவர்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற்திறமையுடனும், நேர்மையுடனும், பாதுகாப்புடனும் இரகசியத் தன்மையைப் பேணி அவர்களுடைய தகவல்களையும், பொருட்களையும், உரிமைகளையும் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நேற்றைய நாளை விட, நன்றாக இன்றைய நாளிலும், இன்றைய நாளை விட நன்றாக நாளைய நாளிலும் திறமையான சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்” என்று இன்றைய நாளில் உலக அஞ்சல் நாள் பிரகடனம் செய்து கொள்ளப்படுகிறது.
உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட முதல் நாடாக இந்தியா உள்ளது. 1764 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய அஞ்சல் துறையின் கீழாகத் தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையில் 2001 ஆம் ஆண்டுக் கணக்கின்படி, மொத்தம் 5,93,878 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. 21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் இந்திய அஞ்சல் அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 10,264 அஞ்சலகங்கள் உள்ளன.
இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 23 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர, இந்திய இராணுவத்தின் அஞ்சல் சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் 1. தலைமை அஞ்சல் அலுவலகங்கள், 2. துணை அஞ்சல் அலுவலகங்கள், 3. புற உறுப்பான துணை அஞ்சல் அலுவலகங்கள், 4. புற உறுப்பான கிளை அஞ்சல் அலுவலகங்கள் என்று நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதேப் போன்று, இந்தியத் அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவை;
1. ராஜதானிப் பிரிவு:
தேசியத் தலைநகரத்திலிருந்து மாநிலங்களின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அஞ்சல்கள் இவை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
2. பச்சைப் பிரிவு:
தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டத் அஞ்சல் நிலையங்களில் இருந்து பெரும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் தபால்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி பச்சை நிறத்தில் இருக்கும்.
3. பெருநகரப் பிரிவு:
பெங்களூர் , ஐதராபாத், கொல்கத்தா, சென்னை, டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களுக்கிடையே செல்லும் அஞ்சல்கள் இவ்வகை. இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி நீல நிறத்தில் இருக்கும்.
4. வணிகப் பிரிவு:
அதிக அளவு அஞ்சல்களை அனுப்புகிற வணிகர்களுக்காக அமைக்கப்பட்டது. பதிவு அஞ்சல் முதலான பல பிரிவுகளில் இந்த அஞ்சல்கள் மொத்தமாக ஒரு சில தபால் நிலையங்களில் பெறப்படும்.
5. பருவ இதழ்கள் பிரிவு:
அஞ்சல் வழியில் வார, மாத அச்சிதழ்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பத்திரிகை அலுவலகங்கள் அனுப்பும் அஞ்சல்கள் இவ்வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு, அந்த நாட்களில் மட்டும் பத்திரிகை அஞ்சல்கள் பெறப்படுகின்றன.
6. மொத்த அஞ்சல் பிரிவு:
பெரும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் அதிகமான அஞ்சல்கள் அஞ்சல் பெட்டிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ செல்லாமல் அஞ்சல் பையில் இடப்பட்டு அஞ்சல் பிரிப்பகத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும்.
இந்தியாவில், அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.
அனைத்து அஞ்சல் நிலையங்களிலும், அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடித உறைகள் விற்பனை, பதிவு அஞ்சல்கள் (Registered post) அனுப்புதல், அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (Money order), அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல் (Booking parcels), உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை, 1986 முதல் விரைவு அஞ்சல் சேவை மூலம் 35 கிலோ எடை வரையிலான பொருட்கள் அனுப்புதல், விரைவஞ்சல் சேவை உலக அளவில் 99 நாடுகளுக்கு அனுப்பும் வசதி, 2009 ஆண்டில் தொடங்கப்பட்ட லாஜிஸ்டிக் சேவை மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள் அனுப்புதல், ‘ட்ராக் மற்றும் ட்ரேஸ்’ மூலம் பதிவு செய்யப்பட்ட கடிதம், பொருட்கள் பட்டுவாடா விவரம் அறிதல், செயற்கைக் கோள் வழியில் பணவிடை அனுப்பும் வசதி, மின்னணு அஞ்சல், இணைய வழி பில் தொகை செலுத்தல், புத்தகங்கள் விற்பனை போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாது, பொது சேமநல நிதி, தேசிய சேமிப்புப் பத்திரம், வங்கி சேமிப்புக் கணக்கு, மாத வருவாய்த் திட்டம், வைப்புத் தொகைத் திட்டங்கள், கடவுச்சீட்டு விண்ணப்பம், தங்கப் பத்திரம், காப்பீட்டுத் திட்டச் சேவை, உள்ளுர் கேபிள் உரிமம், கிசான் விகாஸ் பத்திரம் என்பது போன்ற பிற வசதிகளையும் பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.