டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியாவின் ஒற்றையர் பிரிவில் முதல் நிலையில் இருக்கும் சுமித் நாகல், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் 2024 போட்டியில் முதல் சுற்றில் உலகின் 27 ஆம் நிலையில் உள்ள கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக்கை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் நாகல் 6-4, 6-2, 7-6 (7/5) என்ற செட் கணக்கில் வென்றார்.
1989 ஆம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர் ஒருவர் தரவரிசையில் உள்ள எதிரணி ஆட்டக்காரரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் 1989 இல் ராமேஷ் கிருஷ்ணன், அப்போது உலகின் நெம்பர் 1 ஆட்டக்கார்ரும் நடப்பு சாம்பியனுமான மாட்ஸ் விலாண்டரை ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தோற்கடித்துள்ளார்.
இந்த வெற்றி நாகலின் டென்னிஸ் வாழ்க்கையில் ஒரு பெரிய சாதனையாகும். டென்னிஸில் முன்னேற பல போராட்டங்களைச் சந்தித்த நாகலுக்கு இது குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
2023 இல் தனக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை நாகல், ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஏ.டி.பி. டென்னிஸ் பங்குபெற வேண்டுமானால் அவரிடம் ரூ.1 கோடியாவது இருக்க வேண்டும். ஆனால், அப்போது தமது கணக்கில் ரூ.80,000 மட்டுமே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆண்டின் தொடக்கத்தில் எனது வங்கி இருப்பை பார்த்த போது என்னிடம் 900 யூரோக்களே, அதாவது ரூ.80,000 மட்டுமே இருந்தது. மீதி பணத்துக்கு என்ன செய்வது என்று நினைத்த போது, MAHA அறக்கட்டளையைச் சேர்ந்த பிரசாந்த் சுதர் என்பவர் எனக்கு பணம் கொடுத்து உதவினார். ஐ.ஓ.சி.எல். நிறுவனத்திலிருந்து எனக்கு மாத சம்பளம் பெற்ற போதிலும் எனக்கென்று பெரிய ஸ்பான்சர்கள் எவரும் இல்லை என்று பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பெப்ஸி நிறுவனம், தில்லி புல்தரை டென்னிஸ் சங்கம் (DLTA) நாகலுக்கு உதவ முன்வந்தன. டென்னிஸ் வீர்ருக்கு நிதியுதவி முக்கியமானது. ஆஸ்திரேலிய ஓபனில் அவரது டென்னிஸ் பயணம் இதுவரை சரியாகவே இருந்துள்ளது.
ஆஸ்திரேலியன் ஒபன் போட்டிக்கு நேரடியாக தகுதிபெற முடியாத நிலையில் சுமித் நாகல், தகுதிச் சுற்றில் போட்டியிட்டு தனது இடத்தை உறுதிசெய்தார். இதன் மூலம் அவருக்கு 1,20,000 டாலர் கிடைத்தது.
முதல் சுற்றில் அலெக்சாண்டர் பப்ளிக்கை வெற்றிகண்டதன் மூலம் அவருக்கு மேலும் 1,80,000 ஆஸ்திரேலிய டாலர் வருமானம் கிடைத்துள்ளது. அதாவது ஏறக்குறைய 98 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபனில் நாகல் முதல் முறையாக இரண்டாவது சுற்றை எட்டியுள்ளார்.
இரண்டாவது சுற்றில் சுமித் நாகர், சீனாவின் ஜுன்செங் ஷாங்கை சந்திக்கிறார். அதில் வெற்றிபெற்றால் மற்றொரு சாதனை உருவாகும். மேலும் அவருக்கு 2,55,000 டாலர்கள் வருமானமாக கிடைக்கும்.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் உலகின் 2 ஆம் நிலை ஆட்டக்காரர் அல்கராசை எதிர்கொள்வீர்களா என்று சுமித் நாகலிடம் கேட்டதற்கு, நான் இப்போதுதான் முதல் சுற்றை வென்றிருக்கிறேன். அடுத்து இரண்டாவது சுற்றை சந்திக்கவேண்டும். அதில் வெற்றிபெற வேண்டும். படிப்படியாகத்தான் முன்னேற வேண்டுமே தவிர அல்கராஸுடன் மோதுவது குறித்து நான் இப்போது சிந்திக்கவில்லை என்றார். இளம் வீர்ரான சுமித் நாகல், ஹரியானா மாநிலம் ஜிஜாரில் பிறந்தவர்.