பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான், 500-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் நாதன் லியான் 8 வது இடத்தை பெற்றுள்ளார்.
போட்டியின்போது லியான், பாகிஸ்தான் வீர்ர் ஃபாஹிம் அஷ்ராபை LBW ஆக்கி 5 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து இந்த சாதனையை படைத்தார்.
ஆஸ்திரேலிய அணியின் மறைந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் ஆகியோர் 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனை புரிந்த நிலையில் இப்போது நாதன் லியானும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து லியான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
லியான் 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை 501 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சிறப்பாக பந்துவீசி அவர் 50 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்தது சிறப்பு அம்சமாகும். நீண்டநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் 23 முறை 5 விக்கெட்டுகளையும், நான்கு முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 8-வது இடத்தை நாதன் லியான் பெற்றுள்ளார்.
ஆடுகளத்தை பராமரிக்கும் ஊழியராக இருந்து பந்து வீச்சாளராக முன்னேறி இப்போது 500 விக்கெட்டுகளை நாதன் லியான் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்டுகளில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இலங்கை அணியின் முத்தையா முரளீதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை கைப்பற்றி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 51 ரன்கள் மட்டும் கொடுத்து 9 விக்கெட்டுகளை சாய்த்தது அவரின் சிறப்பு அம்சமாகும்.
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 708 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 71 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை அவர் சாய்த்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 183 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 690 விக்கெட்டுகளை கைப்பற்றி 3-வது இடத்தில் உள்ளார். அவர் சிறப்பாக பந்துவீசி 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடிய அனில் கும்பளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 லிக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். கும்பளே அதிகபட்சமாக சிறப்பாக பந்து வீசி 74 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் ஸ்டுவர்ட் பிராட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 604 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சிறப்பாக பந்துவீசி 15 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் 124 போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 24 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கோர்ட்னி வால்ஷ் 132 போட்டிகளில் விளையாடி 519 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் அவர் அதிகபட்சம் 37 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.