மொஹாலியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 சர்வதேச ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். 14 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக டி20 போட்டிக்கு திரும்பிய ரோகித் சர்மா துரதிருஷ்டவசமாக 2 வது பந்திலேயே ரன் அவுட்டானார்.
இந்திய கேப்டன் ரோகித் முதல் பந்தை சந்தித்தார். ஆனால், ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. ஆப்கன் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஃபஸல் ஹக் பரூக்கி இரண்டாவது பந்தை வீசினார். அந்த பந்தை ரோகித் மிட் ஆப் திசையை நோக்கி அடித்தார்.
ஆனால், ஆப்கன் கேப்டன் இப்ராகிம் ஜர்தான் டைவ் அடித்து பந்தை தடுத்துவிட்டார். அவசரமாக ஓடி ஒரு ரன் எடுக்க முற்பட்ட ரோகித், ரன்னர் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினார். ஆனால், சுப்மன்கில், பந்து தடுக்கப்பட்டதை அடுத்து அசையாமல் நின்றுவிட்டார். இருவரும் ஒரே இடத்தில் நின்ற நிலையில், ஆப்கன் பீல்டர்கள் பந்தை விக்கெட் கீப்பர் ரஹ்முல்லாவை நோக்கி வீச அவர், ரொம்ப எளிதில் ரோகித்தை ரன் அவுட்டாக்கினார்.
ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட்டான ரோகித் சர்மா, தமது கோபத்தை சுப்மன் கில்லிடம் வெளிப்படுத்தியபடி பெவிலியனை நோக்கி வெளியேறினார். பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் அவுட்டானால் அவர் கோபத்தையோ அல்லது விரக்தியையோ வெளிப்படுத்த மாட்டார். ஆனால், நேற்றைய போட்டியில் அவர், சுப்மன் கில்லிடம் கோபத்தை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது.
2022 உலக கோப்பை அரையிறுதிக்குப் பின் ரோகித் சர்மா விளையாடும் முதல் டி 20 போட்டி இதுதான். ஆனால், முதல் போட்டியே அவர் எதிர்பார்த்தபடி இல்லை. முதல் போட்டியில் ரோகித்தும் ஜெய்வாலும்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்குவதாக இருந்தது. ஆனால், ஜெய்வாலுக்கு கணுக்காலில் லேசான வலி இருந்த்தால் அவர் ஆட வரவில்லை. எனவே அவருக்கு பதிலாக சுப்மன் கில் களத்தில் இறக்கப்பட்டார். ஆனால், இந்த புதிய ஜோடிக்கு ஆட்டம் ஒத்துழைக்கவில்லை.