வைக்கோல் காய்ச்சல் (Hay fever) ஒவ்வாமை நாசியழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது மகரந்தம், தூசி, சிறு பூச்சிகள் மற்றும் வீட்டு செல்லப் பிராணிகளின் பொடுகு போன்ற காற்றில் பரவக்கூடிய பொருட்களால் ஏற்படும் ஒரு ஒவ்வாமை எதிர்வினையாகும்.
வைக்கோல் காய்ச்சலுக்கான காரணங்கள்:
ஒவ்வாமை: மரங்கள், புற்கள், செடிகள், தாவரங்கள், களைகள் போன்றவை மகரந்தத்தை காற்றில் வெளியிடுகின்றன. வீட்டில் செடி, கொடி, தாவரங்கள் வளர்த்து வருபவர்களுக்கும் பூங்கா மற்றும் தோட்டங்களுக்கு செல்பவர்களுக்கும் இத்தகைய மகரந்தங்கள் நாசி, வாய், கண்கள் மற்றும் தொண்டையை தாக்குகின்றன. அதனால் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. மேலும், ஓக், மேப்பிள் போன்ற மரங்களில் இருந்து வரும் மகரந்தமும் ஒவ்வாமையை உண்டாக்குகின்றன.
தூசி பூச்சிகள்: வீடுகளில் நுண்ணிய பூச்சிகள் தூசிகளில் வாழும். இவையும் ஒவ்வாமைக்குக் காரணங்களாகும். ஈரமான சூழலில் இருக்கும் பூச்சிகளும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.
செல்லப் பிராணிகள்: செல்லப் பிராணிகள் வீட்டில் இருந்தால் அவற்றின் தோல் செதில்கள், முடி மற்றும் பறவையின் இறகுகள், வைக்கோல் காய்ச்சலை ஏற்படுத்தும்.
கரப்பான் பூச்சியின் எச்சங்கள்: சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம்களில் இருக்கும் கரப்பான் பூச்சியின் எச்சங்களும் அலர்ஜியை உண்டாக்கும். சில நாட்களிலேயே கரப்பான்கள் பல்கிப் பெருகிவிடும். எனவே, அவற்றை விரட்டுவது முக்கியம்.
பிற காரணங்கள்: ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் வைக்கோல் காய்ச்சல் வரலாம். அடோபிக் டெர்மடிடிஸ் என்கிற அரிக்கும் சரும அழற்சி உள்ளவர்களுக்கும் இந்த ஒவ்வாமை நிலை ஏற்படுகிறது.
வைக்கோல் காய்ச்சலின் அறிகுறிகள்:
நாசியில் காணப்படும் அறிகுறிகள்: மூக்கு ஒழுகுதல், நீர் போன்ற சளி வெளியேறுதல், அடைத்த மூக்கு, அடிக்கடி தும்மல் ஏற்படுதல், ஒரே தடவையில் பல முறை ஏற்படும் அடுக்குத் தும்மல் போன்றவை உண்டாகும்.
கண்களில் ஏற்படும் அறிகுறிகள்: கண் அரிப்பு, நீர் வடிதல், கண் சிவத்தல், கண் எரிச்சல் மற்றும் கண்களைச் சுற்றி வீக்கம் காணப்படும்.
தொண்டை மற்றும் காதில் தோன்றும் அறிகுறிகள்: தொண்டைப்புண் அல்லது அரிப்பு, வாயின் உட்புறம் மேல் அண்ணம் அரிப்பு, காதுகள் அரிப்பு, இருமல் போன்றவை.
உடலில் ஏற்படும் அறிகுறிகள்: தலைவலி மற்றும் முகவலி, சோர்வு, உடல் வலி மேலும் தூங்குவதில் சிரமம் ஏற்படும்.
சாதாரண காய்ச்சலுக்கும் வைக்கோல் காய்ச்சலுக்கும் உள்ள வேறுபாடு: சாதாரண காய்ச்சலின்போது உடல் சுடும். உடலின் வெப்பநிலை கூடுவதற்கேற்ப உடல் வலி, நடுக்கம், சோர்வு, அசதி, ஏதும் செய்ய முடியாத நிலை இருக்கும். மாத்திரை போட்ட நான்கைந்து மணி நேரத்தில் வெப்பநிலை குறையும். இரண்டு மூன்று நாட்களில் முற்றிலும் சரியாகிவிடும். வைக்கோல் காய்ச்சலின்போது உடல் சூடு ஏற்படுவதில்லை. வாரங்கள் அல்லது மாதங்களுக்கு கூட மேற்கண்ட அறிகுறிகள் இருக்கும். தினசரி நடவடிக்கையில் பாதிப்பை உண்டாக்கும்.
தவிர்க்கும் வழிகள்: மகரந்த அலர்ஜி இருப்பவர்கள் செடி, கொடிகளின் அருகில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மாஸ்க் போட்டுக் கொள்ளலாம்.
வீட்டில் ஒட்டடை. தூசிகள் இன்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். வெளியில் சென்று வந்ததும் குளித்துவிட்டு ஆடைகளை மாற்ற வேண்டும்.
மெத்தைகள் தலையணைகள் போன்றவற்றை தூசு தும்பு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தலையணையுறைகளை மாற்ற வேண்டும். செல்லப்பிராணிகளை படுக்கையறை போன்ற இடங்களில் விடக்கூடாது. அவற்றை குளிப்பாட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நாசி, தொண்டையில் இருக்கும் எரிச்சலை சரிப்படுத்த உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ஆப்பிள், வெங்காயம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வாமை அதிகமானால் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.